“என் பொக்கிஷம். . .”  டால்கினின் லார்ட் ஆப் த ரிங்ஸ் என்கிற தொடர்கதைகளில் வருகிற  “கொலும்” கதாபாத்திரம் சொல்லும் வசனம் இது. மூன்றுபாக திரைப்படமாகவும் இக்கதை எடுக்கப்பட்டுள்ளது. மெலிந்து உடலுடன், “சக்தி தரும் அரிய மோதிரத்தின்மேல்”  கொள்ளை ஆசைகொண்டு அலைகிற கொலும் என்கிற குள்ளனை, இன்று பேராசைக்கும், தீராதவெறிக்கும், பித்துப்பிடித்த நிலைக்கும் மிகச்சரியான ஓர் அடையாளமாகக் காட்டலாம்.

“கொலும்” கதாபாத்திரம் சிக்கலானதும்கூட. மோதிரத்தின் மேலான விருப்பும்-வெறுப்பும், தன் மேலான விருப்பும்-வெறுப்பும் அதை பாடாய்ப்படுத்தும். “கொலுமின்” இந்த மனக்குமுறல்கள் போலத்தான் இன்று நம் ஒவ்வொருவருடைய மனவேட்கைகளும் உள்ளன. ஏதாவது ஒரு காரியத்தின்மேல் குறியாக இருப்போம் அல்லது “அதிகமாக” வேண்டுமென்கிற வேண்டாத ஏக்கம் இருக்கும். நாம் “பொக்கிஷமாகக்” கருதுகிற அந்தக் காரியங்கள் கிடைத்தால்தான் நமக்கு நிம்மதியே வரும். உண்மை என்னவென்றால், நமக்கு மனதிருப்தியைத் தருமென நாம் நினைக்கிற அந்தக் காரியங்கள்தாமே முன்பைவிட வெறுமையான உணர்வை உண்டாக்கிடும்.

ஆனால் இதைவிட மேலான ஒரு வாழ்க்கையும் இருக்கிறது.  சங்கீதம் 16இல் தாவீது சொல்வதுபோல, நம் இருதயங்களின் ஏக்கங்கள் நம்மை இளைக்கச்செய்துவிடும்போல மிரட்டும்போது, மனநிம்மதி கிடைக்காமல் திண்டாடும்போது (வசனம் 4), தேவனிடம் அடைக்கலம் உண்டு என்கிற ஞாபகம் வரவேண்டும் (வச. 1), ஒவ்வொரு நற்காரியமும் அவரிடமிருந்து வருகிறது என்கிற ஞாபகம் வரவேண்டும் (வச. 2.)

அவற்றைப் பார்க்கும்போது மனநிம்மதி உண்டாகிறது என்பது தவறானது, பார்க்கும் நற்காரியங்களில் தேவ அழகு தெரிகிறது என்பதற்காகப் பார்க்கவேண்டும். (வசனம் 8). அப்போது மெய்யான மனரம்மியத்தை அனுபவிக்கலாம். தேவனுடைய சமுகத்தில் “பரிபூரண ஆனந்தம்” கிடைக்கும், “ஜீவ மார்க்கத்தில்” இன்றும் என்றென்றும் அவரோடு நடக்கலாம் (வச.11).