Archives: ஜூன் 2019

துன்பங்களை நீக்குவார்

பயங்கர கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார் மேரி அன் ஃபிரான்கோ. விபத்திலிருந்து உயிர்பிழைத்தாலும் கண்பார்வை முற்றிலும் பறிபோனது. “அதன்பிறகு இருளைத் தவிர வேறு எதையும் நான் பார்க்கவில்லை” என்று ஃபிரான்கோ சொன்னார். இருபத்தோரு வருடங்களுக்கு பிறகு, ஒரு சமயம் அவர் கீழே விழுந்ததில் அவருடைய முதுகில் அடிபட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் (கண் சம்பந்தமாக எந்தச் சிகிச்சையும் செய்யவில்லை.) அற்புதம் என்ன வென்றால், அவருடைய கண்பார்வை திரும்பக் கிடைத்தது! கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில், முதன்முதலாக அப்போதுதான் தன் மகளுடைய முகத்தை அவர் பார்த்தார். ஃபிரான்கோவுக்கு எவ்வாறு பார்வை திரும்பக்கிடைத்தது என்பதற்கு விஞ்ஞான ரீதியில் பதிலில்லை என்கிறார் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர். இறுதியாக இருள் அகன்று, வெளிச்சத்தையும் அழகையும் அவரால் கண்டு ரசிக்கமுடிந்தது.

அறியாமை மற்றும் தீமையின் ஒரு மேகம் இந்த உலகத்தை மூடியுள்ளது; நாம் யாருமே தேவ அன்பைக் காணமுடியாதபடி அது செய்கிறது. ஏசா 25:7. இதை வேத வசனங்களும் சொல்லுகின்றன; நம்முடைய அனுபவத்திலும் காண்கிறோம். சுயநலம், பேராசை, சுயநிறைவு சிந்தை, அதிகாரம் மற்றும் புகழுக்கான பேராசை போன்றவை நம் பார்வையை மங்கச் செய்கின்றன; சத்தியமானவரும் மாறாதவருமான, “அதிசயமானவைகளைச் செய்த” தேவனை தெளிவாகப்பார்க்க முடியாதபடி செய்கின்றன. வசனம் 1.

'மூடியிருக்கிற மூடல்" என்கிற வார்த்தைகள் பொதுமொழிபெயர்ப்பில் 'துன்பத்துகில்" என்று உள்ளது. தனியே விடப்பட்டால் நாம் அந்தகாரத்தையும் குழப்பத்தையும் விரக்தியையும் மட்டுமே அனுபவிக்கிறோம். எதிலோ சிக்கிக்கொண்ட உணர்வும்தான் பெரும்பாலும் நம்மில் தடுமாற்றமும், காணப்படுகிறது; நமக்கு முன்னிருக்கும் பாதையை நாம் பார்க்கமுடிவதில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம், தேவன் இறுதியாக 'சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலை... அகற்றிப் போடுவார்" என்று ஏசாயா சொல்கிறார் (வச. 7).

தேவன் நம்பிக்கையற்றவர்களாக நம்மை விடமாட்டார். நம் பார்வையை மறைக்கிற எதையும் அவருடைய பேரன்பு அகற்றி, நன்மையான வாழ்க்கையும் பரிபூரண கிருபையும் நமக்கிருப்பதைக் காண்பித்து, ஆச்சரியமூட்டுவார்.

சகல ஜனங்களின் தேவன்

நியூஸ்பாய்ஸ் என்கிற கிறிஸ்தவ இசைக்குழுவின் முதன்மை பாடகராக இருந்தவர் பீட்டர் ஃபர்லர். “அவர் அரசாளுகிறார்” என்கிற துதிப்பாடலை தங்களுடைய குழுவினர் பாடும்போது ஏற்பட்ட அனுபவத்தை அவர் சொல்லுகிறார். சகல கோத்திரத்தாரும் தேசத்தாரும் ஒன்றுகூடி, தேவனைத் தொழுதுகொள்வதை அப்படியே தத்ரூபமாக அப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பாடலைப் பாடும்போதெல்லாம் கூடியிருக்கும் விசுவாசிகள் மத்தியில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலை உணரமுடிந்ததாக ஃபர்லர் கூறுகிறார்.

“அவர் அரசாளுகிறார்” பாடலின்போது ஃபர்லர் கண்டு அனுபவித்த அதே அனுபவம் பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் கூடியிருந்த விசுவாசிகள் மத்தியிலும் உண்டானது. சீடர்களை பரிசுத்த ஆவியானவர் நிரப்பியபோது (அப் 2:4), அங்கே விசேஷித்த ஓர் அனுபவம் உண்டானது. அதனால், சகல தேசங்களிலிருந்தும் கூடியிருந்த யூதர்கள் குழம்பிப்போனார்கள்; ஏனென்றால், அங்கே தேவனுடைய கிரியைகள் வெளிப்படும்படிக்கு அவரவர் தங்கள் சொந்த மொழியில் பேசப்படுவதைக் கேட்டனர் . வச 5-6,11. “யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” என்று பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தில் தேவன் சொல்லியிருக்கிறபடியே நிகழ்வதாக அங்கிருந்தவர்களுக்கு பேதுரு விளக்கினார். வச .16

அனைவரும் பிரமிக்கத்தக்க தேவவல்லமை அங்கு வெளிப்பட்டதினாலே, சுவிசேஷத்தை பேதுரு போதித்தபோது மக்கள் உடனே ஏற்றுக்கொண்டார்கள்; அன்றைய தினத்தில் மட்டும் மூவாயிரம்பேர் மனந்திரும்பினார்கள். வச 41. இந்த அற்புதமான ஆரம்பத்துடன், தங்கள் தங்கள் பகுதிக்குத் திரும்பிச்சென்ற புதிய விசுவாசிகள், அங்கே சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

அந்த நற்செய்தி இன்றும் எதிரொலித்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் தேவன் தருகிற நம்பிக்கையின் செய்தி அது. நாம் ஒன்றுசேர்ந்து தேவனைத் துதிக்கும்போது, அவருடைய ஆவியானவர் நம் மத்தியில் அசைவாடுவார், சகல தேசங்களிலுள்ள மக்களிலும் அற்புதமான ஓர் ஐக்கியத்தை உண்டாக்குவார். அவர் அரசாளுகிறார்!

பகிர்ந்துண்டு வாழுதல்

ஸ்டீவுக்கு 62 வயது; இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர், வீடில்லாமல் திறந்த வெளிகளில் தங்கி வருபவர். ஒருநாள் சாயங்காலப் பொழுதில், தான் கையால் வரைந்த ஓவியம் ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தார். பணம் சம்பாதிப்பதற்காக அவர் அவ்வாறு செய்வதுண்டு. அப்போது அங்கே வந்த ஒரு வாலிபப்பெண்மணி, ஸ்டீவுக்கு பல பீஸ்ஸாக்களைக் கொடுத்தாள். அதை நன்றியோடு வாங்கிக் கொண்டார் ஸ்டீவ். பிறகு தன்னிடமிருந்த அதிகமான உணவை, தன்னைப்போலவே வீடின்றி, பசியோடிருந்த ஒருவருடன் பகிர்ந்துகொண்டார். அந்தச் சமயத்தில் மீண்டும் திரும்பி வந்த அந்த வாலிபப்பெண்மணி, மறுபடியும் ஒரு தட்டு நிறைய உணவைக் கொடுத்துவிட்டுச் சென்றார். ஏற்கனவே தான் கொடுத்த உணவை ஸ்டீவ் அடுத்தவருடன் பகிர்ந்ததால், அந்த உணவைக் கொண்டுவந்ததாக அந்த வாலிபப்பெண் சொன்னாள்.

நீதிமொழிகள் 11:25ல் சொல்லப்பட்டுள்ளது போலவே ஸ்டீவின் வாழ்க்கையில் நடந்தது. நாம் மற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்துகொள்ளும்போது, நாமும் அதேவித இரக்கத்தைப் பெற்றுக்கொள்வோம். ஆனால், ஏதாவது திரும்பக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் எதையும் செய்யக்கூடாது. ஸ்டீவுக்கு நடந்ததுபோல உடனே பிரதிபலன் எப்போதும் கிடைப்பதில்லை. மாறாக, தேவன் சொல்லியிருக்கிறார் என்பதால் நாம் மற்றவர்களிடம் இரக்கமாக நடந்துகொள்ள வேண்டும். பிலிப்பியர் 2:3-4; 1யோவான் 3:17. அவ்வாறு நாம் செய்வதில் தேவன் பிரியப்படுகிறார். அவர் திரும்ப நமக்கு பணஉதவியோ, பொருள் உதவியோ பண்ணவேண்டுமென்கிற எந்த கட்டாயமும் கிடையாது. அப்படியிருந்தும், ஏதாவது வழியில் அவர் நமக்கு உதவுவார். சில சமயம் பொருள்ரீதியாகவும், சிலசமயம் ஆவிக்குரிய ரீதியாகவும் உதவுவார்.

இரண்டாவது தனக்குக் கொடுக்கப்பட்ட பீஸ்ஸாவையும் ஸ்டீவ் சிரித்த முகத்துடன் இன்னொருவருடன் பகிர்ந்துகொண்டார். தனக்கு வசதியில்லாவிட்டாலும் தயாளத்துடன் வாழ்வதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். தான் பெற்றதை தனக்கென வைத்துக்கொள்ளாமல், சந்தோஷமாக பிறருடன் பகிர்ந்துகொள்ள ஆயத்தமாக இருந்தார். தேவன் நம்மை வழிநடத்தி, நம்மைப் பெலப்படுத்தினால், நாமும்கூட அப்படிப்பட்டவர்களாக வாழலாம்.

அபியின் ஜெபம்

அபி அப்போது உயர்நிலைபள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தாள். விமான விபத்து ஒன்றில் படுகாயமடைந்த ஒரு வாலிபனை பற்றி அபியும் அவளுடைய அம்மாவும் கேள்விப்பட்டார்கள். விபத்தில் தன் அப்பாவையும் வளர்ப்புதாயையும் அந்த வாலிபன் பறிகொடுத்திருந்தான். அந்த வாலிபன் யாரென்பது தெரியாவிட்டாலும், “அவனுக்காகவும் அவனுடைய குடும்பத்தினருக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டும்” என்று அபியின் அம்மா சொன்னார்.

ஒரு சில வருடங்கள் கடந்தன. இப்போது அபி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள். அவள் வகுப்பிற்குச் சென்றபோது, தன்னுடைய பக்கத்து இருக்கையில் அமரும்படி அபியிடம் ஒரு மாணவன் கேட்டுக்கொண்டான். அந்த மாணவனின் பெயர் ஆஸ்டின் ஹேட்ச். விமான விபத்தில் தப்பிய அந்த வாலிபனுக்காகத்தான் அபியும் அவளுடைய அம்மாவும் முன்பு ஜெபித்திருக்கிறார்கள். அபியும் ஆஸ்டினும் ஒருவரை ஒருவர் விரும்பி, 2018ல் திருமணம் செய்துகொண்டார்கள்.

பிறகு ஒரு பேட்டியின்போது, “என்னுடைய வருங்கால கணவருக்காக நான் ஜெபித்திருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று அபி சொன்னாள். நாமும், நமக்கும் நமக்குத் தெரிந்தவர்களுக்கும் மட்டுமே ஜெபிப்பதோடு முடங்கிவிடக்கூடாது. மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது, “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” என்று புத்திசொல்கிறார். எபே 6:18. அதிகாரத்தில் இருப்பவர்கள் உட்பட “எல்லா மனுஷருக்காகவும்” ஜெபம்பண்ணுங்கள் என்று 1தீமோ 2:1 கூறுகிறது.

எல்லாருக்காகவும், நமக்குத் தெரியாதவர்களுக்காகவும் ஜெபிப்போம். அப்படியும்கூட “ஒருவர் பாரத்தை ஒருவர்” சுமக்கலாம். கலா 6:2.