Archives: ஜூன் 2019

குச்சி பொம்மை ஓவியத்தின்மூலம் பாடம்

அவள் என்னுடைய தோழி, என்னுடைய ஆலோசகரும்கூட, அவள் ஓர் ஓவியம் வரைந்தாள். குச்சி பொம்மை போன்ற ஓவியம். அந்த ஓவியத்திற்கு “தனிப்பட்ட வாழ்க்கை” என்று பெயரிட்டாள். பிறகு அந்த ஓவியத்தைச் சுற்றிலும் அரை அங்குல அளவு பெரிதாக வெளிக்கோட்டை வரைந்தாள். அந்த ஓவியத்திற்கு “வெளிப்படையான வாழ்க்கை” என்று பெயரிட்டாள். இந்த இரண்டு ஓவியங்களுக்கும் இடையேயான வித்தியாசம்தான், நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வெளிப்படையான வாழ்க்கைக்கும் இடையேயான  நிலைப்பாட்டைக் காட்டுகிறது.

அந்த ஓவியத்தைப் பார்த்தவாறே, “வெளிப்படையான வாழ்க்கையைப் போலவே என்னுடய தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறதா? என்னிடம் நிலைப்பாடு காணப்படுகிறதா?” என்று சிந்தித்தேன்.

கொரிந்துவிலிருந்த சபைக்கு பவுல் நிருபங்களை எழுதினார். இயேசுவைப் போல் வாழும்படி அன்பையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்துகிறார். பிறகு, தன்னை எழு பலமுள்ளவன் என்றும், தோற்றத்தில் பலவீனன் என்றும் குற்றஞ்சாட்டினவர்களுக்கு (2 கொரி. 10:10) அந்த நிருபத்தின் இறுதியில் அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு விமர்சித்தவர்கள் சிறந்த பேச்சால், பணம்வாங்கி போதிப்பவர்களாக இருந்தார்கள். பவுல் கல்வித்திறனில் சிறந்து விளங்கினாலும், மக்கள் புரிந்துகொள்கிற விதத்தில், எளிமையாகப் போதித்தார். கொரிந்தியருக்கு  எழுதின முதலாம் நிருபத்தில் “என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது” என்று எழுதியிருந்தார் (1 கொரி. 2:4). ஆனால் இரண்டாவது நிருபத்தில் அவர் எழுதுகிற ஒரு விஷயம் அவருடைய ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது: “அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்” (2 கொரி. 10:11).

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படியோ, அப்படியே தன்னுடைய வெளிப்படையான வாழ்க்கையும் இருப்பதாக பவுல் கூறினார். நாம் எப்படி இருக்கிறோம்?

நம்மை அறிந்திருக்கிற இரட்சகர்

“அப்பா, நேரம் என்ன?” பின்இருக்கையில் அமர்ந்திருந்த என் மகன் கேட்டான். “5:30” என்று சொன்னேன். அடுத்து அவன் என்ன சொல்லுவான் என்பது எனக்குத் தெரியும். “இல்லை, 5:28தான் ஆகிறது!” அவனுடைய முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி, அப்படியொரு சிரிப்பு. எனக்கும் சந்தோஷமாக இருந்தது.

பிள்ளைகளை கருத்தோடு கவனிக்கிற பெற்றோர்போலவே, நானும் என்னுடைய பிள்ளைகளை நன்கு அறிவேன். அவர்களை படுக்கையிலிருந்து எழுப்பும்போது என்ன சொல்லுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்குப் பிடித்தமான மதிய சாப்பாடு என்னவென்று தெரியும். அவர்களுடைய விருப்பங்கள், ஆசைகள், முன்னுரிமைகள் என்ன என்பதுபோன்ற பலவிஷயங்கள் அவர்களைப் பற்றித் தெரியும்.

ஆனால், நம் ஆண்டவர் நம்மைப் பற்றி அறிந்திருக்கிற அளவுக்கு, என் பிள்ளைகளைப் பற்றி, உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் எல்லாமே எனக்குத் தெரிந்திருந்தது என்று சொல்லமுடியாது.

இயேசு தம்முடைய மக்களை அதிகமாக அறிந்திருந்தார் என்பதை யோவான் 1ல் அறியமுடிகிறது. இயேசுவை வந்து சந்திக்கும்படி நாத்தான்வேலை பிலிப்பு அழைத்து வருகிறார், நாத்தான்வேல் இயேசுவின் அருகே சென்றதும், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று இயேசு சொன்னார். வச 47. நாத்தான்வேல் திகைத்து, “நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்கிறார். கேள்விக்கு சம்பந்தமே இல்லாததுபோல, அத்திமரத்தின்கீழ் கண்டதாக, இயேசு பதிலளிக்கிறார் வச 48

அந்தத் தகவலை இயேசு எதற்காகச் சொன்னார் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் நாத்தான்வேலுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்!   அதனால்தான் வியப்புநிறைந்தவராக, “ரபீ, நீர் தேவனுடைய குமாரன்” என்று சொல்லுகிறார். வச 49.

இதேபோல நம் ஒவ்வொருவரையும் நெருக்கமாக, முழுவதுமாக, பூரணமாக இயேசு அறிவார், அவ்வாறு அறிந்துகொள்ளவேண்டும் என்றுதான் நாமும் விரும்புவோம். அவர் நம்மை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறார் நாம் அவருடைய சீடர்களாக மட்டுமல்ல, அவருடைய அன்புள்ள சிநேகிதராகவும் இருக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார்.

புண்படுத்துகிற வார்த்தைகள்

“ஒட்டடைக்குச்சி” என்று ஒரு சிறுவன் கேலிசெய்தான். “ஒல்லிக்குச்சி” என்று ஒருவன் நக்கலடித்தான். நானும் பதிலுக்கு “குச்சிகளும் கற்களும் வேண்டுமானல் என் எலும்புகளை உடைக்கலாம், ஆனால் வார்த்தைகளால் என்னைப் புண்படுத்தவே முடியாது” என்று சொல்கிற பாடலை (skinny bones) பாடியிருக்கலாம். ஆனால் அப்போது நான் சிறுமியாக இருந்தபோதிலும், அந்தப் பாடல் சொல்லும் கருத்து பொய்யல்ல என்பது தெரியும். அன்பற்ற, சிந்தனையற்ற வார்த்தைகள் புண்படுத்துபவை. சிலசமயங்களில், உள்ளத்தின் ஆழத்திற்குச் சென்று, மோசமாகக் காயப் படுத்துபவை; கல்லால் அல்லது கம்பால் உண்டாகிற வடுவைவிட நெடுநாட்கள் நீடிக்கக்கூடியவை.

சிந்தனையற்ற வார்த்தைகள் எவ்வளவு வலிக்குமென்பது அன்னாளுக்குத் தெரியும். அவளுடைய கணவனான எல்க்கானாவுக்கு அவளைப் பிடிக்கும், ஆனால் அன்னாளுக்கு பிள்ளையில்லை. எல்க்கானாவின் இரண்டாவது மனைவியாகிய பெனின்னாளுக்கு அநேக பிள்ளைகள் இருந்தார்கள். பிள்ளைகள் பெற்றால்தான் பெண்ணுக்கு மதிப்பு என்கிற ஒரு கலாச்சாரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். அன்னாளுக்கு பிள்ளையில்லை என்று சொல்லி பெனின்னாள் அவளை நித்தம் நித்தம் “மனமடிவுண்டாக்கினாள்.” அன்னாள் சாப்பிடக்கூட முடியாமல் உட்கார்ந்து அழுமளவிற்கு நிலைமை சென்றது. 1சாமுவேல் 1:6-7.

எனவே எல்க்கானா, “அன்னாளே, ஏன் அழுகிறாய்? ... பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா?” என்று கேட்கிறார். வசனம் 8. நல்ல எண்ணத்தோடுதான் கேட்டிருப்பார், ஆனால், யோசித்துக் கேட்டாரா என்று தெரியவில்லை. ஏனென்றால், அவர் அப்படிக் கேட்டது அன்னாளுக்கு மேலும் அதிக வேதனையாக இருந்திருக்கும்.

நம்மில் அநேகர் இதேபோல் புண்பட்டு, அவதிப்படுகிறோம். வேறுசிலர், புண்படுத்துகிறவர்களை பதிலுக்கு வசைபாடி, வார்த்தைகளைக் கொட்டி புண்படுத்துகிறோம். ஆனால், நாம் எல்லாருமே ஒன்று செய்யலாம், அன்பும் மனதுருக்கமும் நிறைந்த தேவனிடம் ஓடிச்சென்று பெலனையும் சுகத்தையும் பெறலாம். சங்கீதம் 27:5,12-14. அன்பும் கிருபையும் நிறைந்த வார்த்தைகளால் நம்மை மகிழ்ச்சியாக்குகிறார்.

நமக்காக வேண்டுதல்செய்கிறவர்

நான் ஆசியாவில் பயணம் மேற்கொண்டிருந்தபோது என்னுடைய ஐ-பாடின் திரையில் ஏற்பட்ட கோளாறால் அது செயலிழந்துபோனது.  (வாசிப்பு உபகரணங்களும் பணி ஆவணங்கள் பலவும் அதில்தான் இருந்தன)  எனவே ஒரு கணினி கடைக்குச் சென்றேன்; அங்கே இன்னொரு பிரச்சனை எழுந்தது.  அதாவது எனக்கு சீன மொழி பேசத்தெரியாது, அந்தக் கடையிலிருந்த தொழில்நுட்பவியலாளருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. தீர்வுதான் என்ன? ஒரு மென்பொருளைத் திறந்து, தான் கேட்க விரும்பியதை சீன மொழியல் தட்டச்சு செய்தார்; அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டது. அதை என்னால் வாசிக்கமுடிந்தது. அதற்கு பதிலளிக்கும் விதத்தில் நான் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை அவர் சீனமொழியில் வாசிக்க முடிந்தது. நாங்கள் வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும், நாங்கள் தடையின்றி தகவல் தொடர்பு கொள்வதற்கு அந்த மென்பொருள் உதவியது.

சில சமயங்களில், நான் பரலோக பிதாவை நோக்கி ஜெபிக்கும்போது, என் இருதயத்திலுள்ளதைத் தெரிவிக்க இயலாத நிலையில் இருப்பேன். இதுபோன்ற அனுபவம் எனக்கு மட்டும் அல்ல, ஜெபிக்கும்போது பலருக்கு இந்தப் பிரச்சனை உண்டாகலாம். ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதுகிறார்: “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிற படியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்” (ரோம. 8:26-27).

பரிசுத்த ஆவியானவரின் இந்த ஈவு எத்தனை அருமையானது!   எந்தவொரு கணினியின் மென்பொருளையும்விட என்னுடைய சிந்தைகளையும்  ஆசைகளையும் பிதாவின் நோக்கங்களுக்கு இசைவான விதங்களில் அவர் தெளிவாகத் தெரியப்படுத்துகிறார். ஆவியானவரின் இந்தக் கிரியையின் நிமித்தம் ஜெபத்திற்கு பதில் கிடைக்கிறது!

சாதாரண நாடோடி வாலிபன்

1877ம் வருடத்தில் ஒருநாள் ஆலய ஆராதனையின்போது, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்கள் முன்னால் வரும்படி அழைப்புவிடுக்கப்பட்டது. ராட்னி ஸ்மித் என்கிற வாலிபர் முன்னே சென்றபோது “இவன் ஒரு நாடோடி” என்று யாரோ ஏளனமாக முணுமுணுத்தது அவர் காதில் விழுந்தது. ராட்னியின் பெற்றோரும் கல்வியறிவற்ற நாடோடிகள் தாம்; இந்த வாலிபர் பற்றி யாருமே பெரிதாக எண்ணவில்லை. ஆனால் தன்னைக் குறித்து தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டென்பதை ராட்னி நிச்சயமாக அறிந்திருந்தார். ஒரு வேதாகமத்தையும் ஆங்கில அகராதியையும் வாங்கி, வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.  “இயேசுவிடம் செல்வதற்கான வழி கேம்பிரிட்ஜிலும், ஹார்வர்டிலும், யேலிலிலும் அல்லது கவிதைகளிலும் இல்லை. கல்வாரி என்கிற முற்கால  மலையில்தான் உள்ளது” என்று இவர் ஒருமுறை சொன்னார். எல்லா தடைகளையும் தாண்டி, ஒரு சுவிசேஷகரானார் ராட்னி; அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் அநேகரை கிறிஸ்துவிடம் வழி நடத்தினார்.

பேதுருவும் சாதாரண ஒரு மனிதர்தான். ரபிமார்களின் மதப்பள்ளியில் படித்தவரல்ல (அப் 4:13), கலிலேயாவைச் சேர்ந்த ஒரு மீனவர். அந்த நிலையில்தான் “என் பின்னே வாருங்கள்” என்று இயேசு அழைத்தார். மத் 4:19. பேதுருவின் வளர்ப்பும், வழி நெடுகிலும் அவர் சந்தித்த தோல்விகளும் ஒரு புறம் இருந்தாலும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் பற்றி “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்” என்று பின்னர் அவர் உறுதியாகக் கூறமுடிந்தது. 1பேதுரு 2:9.

கல்வி, வளர்ப்பு, பாலினம் அல்லது இனம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து இயேசுவின் மூலம் அனைவருமே தேவனுடைய குடும்பத்தில் சேரமுடியும், அவரால் பயன்படுத்தப்பட முடியும். இயேசுவை விசுவாசிக்கிற அனைவருமே “அவருடைய சொந்த ஜனமாக” மாறலாம்.