“ஒட்டடைக்குச்சி” என்று ஒரு சிறுவன் கேலிசெய்தான். “ஒல்லிக்குச்சி” என்று ஒருவன் நக்கலடித்தான். நானும் பதிலுக்கு “குச்சிகளும் கற்களும் வேண்டுமானல் என் எலும்புகளை உடைக்கலாம், ஆனால் வார்த்தைகளால் என்னைப் புண்படுத்தவே முடியாது” என்று சொல்கிற பாடலை (skinny bones) பாடியிருக்கலாம். ஆனால் அப்போது நான் சிறுமியாக இருந்தபோதிலும், அந்தப் பாடல் சொல்லும் கருத்து பொய்யல்ல என்பது தெரியும். அன்பற்ற, சிந்தனையற்ற வார்த்தைகள் புண்படுத்துபவை. சிலசமயங்களில், உள்ளத்தின் ஆழத்திற்குச் சென்று, மோசமாகக் காயப் படுத்துபவை; கல்லால் அல்லது கம்பால் உண்டாகிற வடுவைவிட நெடுநாட்கள் நீடிக்கக்கூடியவை.

சிந்தனையற்ற வார்த்தைகள் எவ்வளவு வலிக்குமென்பது அன்னாளுக்குத் தெரியும். அவளுடைய கணவனான எல்க்கானாவுக்கு அவளைப் பிடிக்கும், ஆனால் அன்னாளுக்கு பிள்ளையில்லை. எல்க்கானாவின் இரண்டாவது மனைவியாகிய பெனின்னாளுக்கு அநேக பிள்ளைகள் இருந்தார்கள். பிள்ளைகள் பெற்றால்தான் பெண்ணுக்கு மதிப்பு என்கிற ஒரு கலாச்சாரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். அன்னாளுக்கு பிள்ளையில்லை என்று சொல்லி பெனின்னாள் அவளை நித்தம் நித்தம் “மனமடிவுண்டாக்கினாள்.” அன்னாள் சாப்பிடக்கூட முடியாமல் உட்கார்ந்து அழுமளவிற்கு நிலைமை சென்றது. 1சாமுவேல் 1:6-7.

எனவே எல்க்கானா, “அன்னாளே, ஏன் அழுகிறாய்? … பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா?” என்று கேட்கிறார். வசனம் 8. நல்ல எண்ணத்தோடுதான் கேட்டிருப்பார், ஆனால், யோசித்துக் கேட்டாரா என்று தெரியவில்லை. ஏனென்றால், அவர் அப்படிக் கேட்டது அன்னாளுக்கு மேலும் அதிக வேதனையாக இருந்திருக்கும்.

நம்மில் அநேகர் இதேபோல் புண்பட்டு, அவதிப்படுகிறோம். வேறுசிலர், புண்படுத்துகிறவர்களை பதிலுக்கு வசைபாடி, வார்த்தைகளைக் கொட்டி புண்படுத்துகிறோம். ஆனால், நாம் எல்லாருமே ஒன்று செய்யலாம், அன்பும் மனதுருக்கமும் நிறைந்த தேவனிடம் ஓடிச்சென்று பெலனையும் சுகத்தையும் பெறலாம். சங்கீதம் 27:5,12-14. அன்பும் கிருபையும் நிறைந்த வார்த்தைகளால் நம்மை மகிழ்ச்சியாக்குகிறார்.