“அப்பா, நேரம் என்ன?” பின்இருக்கையில் அமர்ந்திருந்த என் மகன் கேட்டான். “5:30” என்று சொன்னேன். அடுத்து அவன் என்ன சொல்லுவான் என்பது எனக்குத் தெரியும். “இல்லை, 5:28தான் ஆகிறது!” அவனுடைய முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி, அப்படியொரு சிரிப்பு. எனக்கும் சந்தோஷமாக இருந்தது.

பிள்ளைகளை கருத்தோடு கவனிக்கிற பெற்றோர்போலவே, நானும் என்னுடைய பிள்ளைகளை நன்கு அறிவேன். அவர்களை படுக்கையிலிருந்து எழுப்பும்போது என்ன சொல்லுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்குப் பிடித்தமான மதிய சாப்பாடு என்னவென்று தெரியும். அவர்களுடைய விருப்பங்கள், ஆசைகள், முன்னுரிமைகள் என்ன என்பதுபோன்ற பலவிஷயங்கள் அவர்களைப் பற்றித் தெரியும்.

ஆனால், நம் ஆண்டவர் நம்மைப் பற்றி அறிந்திருக்கிற அளவுக்கு, என் பிள்ளைகளைப் பற்றி, உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் எல்லாமே எனக்குத் தெரிந்திருந்தது என்று சொல்லமுடியாது.

இயேசு தம்முடைய மக்களை அதிகமாக அறிந்திருந்தார் என்பதை யோவான் 1ல் அறியமுடிகிறது. இயேசுவை வந்து சந்திக்கும்படி நாத்தான்வேலை பிலிப்பு அழைத்து வருகிறார், நாத்தான்வேல் இயேசுவின் அருகே சென்றதும், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று இயேசு சொன்னார். வச 47. நாத்தான்வேல் திகைத்து, “நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்கிறார். கேள்விக்கு சம்பந்தமே இல்லாததுபோல, அத்திமரத்தின்கீழ் கண்டதாக, இயேசு பதிலளிக்கிறார் வச 48

அந்தத் தகவலை இயேசு எதற்காகச் சொன்னார் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் நாத்தான்வேலுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்!   அதனால்தான் வியப்புநிறைந்தவராக, “ரபீ, நீர் தேவனுடைய குமாரன்” என்று சொல்லுகிறார். வச 49.

இதேபோல நம் ஒவ்வொருவரையும் நெருக்கமாக, முழுவதுமாக, பூரணமாக இயேசு அறிவார், அவ்வாறு அறிந்துகொள்ளவேண்டும் என்றுதான் நாமும் விரும்புவோம். அவர் நம்மை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறார் நாம் அவருடைய சீடர்களாக மட்டுமல்ல, அவருடைய அன்புள்ள சிநேகிதராகவும் இருக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார்.