கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே கெவின் ஒரு துண்டு காகிதத்தை என் மனைவி கேரியிடம் வாசிக்கும்படி கொடுத்தான். நானும் என்னுடைய மனைவி கேரியும் எங்களுடைய மகள், இயேசுவின் மீது விசுவாசம் கொள்ளவேண்டுமென ஜெபித்துக் கொண்டிருப்பதை அவன் அறிவான். “இந்தக் குறிப்பு என்னுடைய தாயாரின் மரணத்திற்குப் பின் அவருடைய வேதாகமத்தினுள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது உங்களுக்கு ஊக்கத்தை தருமென நான் நம்புகிறேன்” என்றான். அந்தக் கடிதத்தின் மேற்பகுதியில் “என்னுடைய மகன் கெவினுக்காக” என எழுதப்பட்டிருந்தது. அதற்கு கீழே அவனுடைய இரட்சிப்பிற்காக ஒரு ஜெபம் எழுதப்பட்டிருந்தது.

“இந்த ஜெபத்தை நான் இப்பொழுது என்னுடைய சொந்த வேதாகமத்தில் வைத்திருக்கின்றேன்” என கெவின் கூறினான். “என்னுடைய தாயார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடைய இரட்சிப்பிற்காக ஜெபித்திருக்கின்றார். நான் தேவனை விட்டு வெகுதூரத்திலிருந்தேன். இப்பொழுது நான் ஒரு விசுவாசி” எனக் கூறி தன் கண்ணீரினூடே எங்களை ஆர்வமாகப் பார்த்துச் சிரித்தான். “உங்களுடைய மகளுக்காக செய்யும் ஜெபத்தை விட்டுவிடாதேயுங்கள். எவ்வளவு நாட்களானாலும் விட்டுவிடாதேயுங்கள்” என்றான்.

அவனுடைய ஊக்கமளிக்கும் வார்த்தைகள், லூக்கா சுவிஷேத்தில் ஜெபத்தைக் குறித்து ஒரு கதைக்கான இயேசுவின் முகவுரையை எனக்கு நினைவுபடுத்தியது. இயேசு, “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்” (லூக். 18:1) என்ற வார்த்தைகளோடு ஆரம்பிக்கின்றது.

இந்தக் கதையில், அநீதியுள்ள ஒரு நியாயாதிபதி (வச. 6) தன்னை அடிக்கடி தொந்தரவு செய்து கொண்டிருந்த ஒரு விதவைக்கு, அவள் இனிமேலும் தன்னை வந்து அலட்டாதபடிக்கு அவளுக்கு நியாயம் செய்கின்றான் என இயேசு கூறுகின்றார். இதற்கு மாறாக நம்முடைய அன்புள்ள பரம தந்தை, நம்மீது அதிக கரிசனையுடன் அவரிடம் வரும்படி விரும்புகின்றார். நாம் எப்பொழுதுதெல்லாம் அவரிடம் ஜெபிக்கின்றோமோ அப்பொழுது அவர் நம் ஜெபத்தைக் கேட்க விரும்புகின்றார் என்பது நமக்கு அதிக ஊக்கமளிப்பதாகவுள்ளதல்லவா!