நீ அங்கிருக்கின்றாயா?
அவனுடைய மனைவி மீள முடியாதவகையில் நோய்வாய்ப்பட்டபோது, மைக்கேல் தான் தேவனோடு வைத்துள்ள உறவால் பெற்றுள்ள சமாதானத்தை தன் மனைவியும் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஏங்கினான். அவன் தன்னுடைய விசுவாசத்தை அவளோடு பகிர்ந்து கொண்டான். ஆனால், அவளோ அதில் எந்தவொரு ஆர்வத்தையும் காட்டவில்லை. ஒரு நாள் மைக்கேல் அருகிலுள்ள புத்தகக் கடைக்குள் சென்ற போது ஒரு புத்தகத்தின் தலைப்பு அவனுடைய கண்களை ஈர்த்தது. “தேவனே, நீர் அங்கிருக்கின்றீரா? என்பதே அப்புத்தகம். அந்த புத்தகத்திற்கு அவள் எவ்வாறு பதிலளிப்பாள் என்ற சந்தேகத்தோடு, அநேக முறை அந்த புத்தகக் கடைக்குள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்த மைக்கேல் கடைசியாக அப்புத்தகத்தை வாங்கினார். என்ன ஆச்சரியம்! அவள் அந்த புத்தகத்தை ஏற்றுக் கொண்டாள்.
அந்தப் புத்தகம் அவளுடைய இருதயத்தைத் தொட்டது. அன்றிலிருந்து அவள் வேதாகமத்தையும் வாசிக்க ஆரம்பித்தாள். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மைக்கேலின் மனைவி சமாதானமாக, தேவன் தன்னை விட்டு விலகவும், கைவிடவும் மாட்டார் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டவளாய் மரித்துப் போனாள்.
இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தை விட்டு வழிநடத்தும்படி மோசேயை தேவன் அழைத்தபோது, அவனுக்கு வல்லமையைத் தருவதாக தேவன் வாக்களிக்கவில்லை. மாறாக தேவனுடைய பிரசன்னம் அவனோடிருக்கும் என்றார். “நான் உன்னோடே இருப்பேன்” (யாத். 3:12) என்றார். இயேசு. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக, அவருடைய சீடர்களிடம் கடைசியாக பேசிய போது தேவனுடைய மாறாத பிரசன்னம் எப்பொழுதும் அவர்களோடு இருக்கும் எனவும், அதனை அவர்கள் பரிசுத்த ஆவியின் மூலம் பெற்றுக் கொள்வர் எனவும் வாக்களித்தார் (யோவா. 15:26).
நம் வாழ்வின் சவால்களைச் சந்திக்க தேவன் பல வகைகளில் நமக்கு உதவுகின்றார். உலகப் பிரகாரமான வசதிகளையும், சுகத்தையும், நம் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் தருகின்றார். சில வேளைகளில் அவர் பிரச்சனைகளை சரிசெய்கிறார். ஆனால் மிகச் சிறந்த ஈவாக அவர் தம்மையே தந்துள்ளார். இதுவே நாம் பெற்றுள்ள மிகப் பெரிய பாக்கியம். வாழ்வில் எது நடந்தாலும் அவர் நம்மோடிருக்கின்றார். அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை.
செலவழிக்கப்படல்
வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு விடுமுறையின் போது தன்னுடைய நண்பர்களுடன் பிரான்ஸ் தேசத்தின் தெற்குப் பகுதியில், ஒரு குளிர்ந்த இரவில் அனல் அடுப்பினருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார். அந்த நெருப்பினை உற்று நோக்கிய அந்த முன்னாள் பிரதம மந்திரி, பைன் மரத்துண்டுகள் எரியும்போது வெடித்து, ஸ்ஸ் என்ற ஓசையுடன் கொப்பளித்ததைக் கண்டார். உடனே அவர் தன்னுடைய கனத்த குரலில் “ஏன் இந்த மரத்துண்டுகள் கொப்பளிக்கின்றன எனத் தெரிந்து கொண்டேன். செலவழிக்கப்படுவதென்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன்”என்றார்.
நம்முடைய தவறான செயல்களால் வரும் துன்பங்களும், விரக்தியும், ஆபாயங்களும், துயரங்களும் நாம் செலவழிக்கப்படுவதைக் காட்டுகின்றன. சூழ்நிலைகள் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் மெல்ல நம் இருதயத்தை விட்டு எடுத்துவிடும். தாவீது, தன்னுடைய பாவச் செயலால் தான் செலவழிக்கப்படுவதை உணர்ந்தபோது, “நான் அடக்கிவைத்தமட்டும் நித்தம் என கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று… என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டு போயிற்று” (சங். 32:3-4) என எழுதினார்.
இத்தகைய துன்ப நேரங்களில் நாம் யாரிடம் உதவி கேட்போம்? யார் நமக்கு நம்பிக்கை தருவார்? ஊழிய பாரத்தினாலும், உடைக்கப்பட்ட உள்ளத்தாலும் நிறைந்த அநுபவங்களைக் கொண்ட பவுல், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி போகிறதில்லை கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை;” என்றார் (2 கொரி. 4:8-9).
இது எப்படி சாத்தியமாகும்? நாம் இயேசுவைச் சார்ந்து வாழ்வோமாயின், நல் மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்து நம் ஆத்துமாவை மீட்டு (சங். 23:3) நம்முடைய பயணத்தில் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டிய பெலனைத் தருவார். அவர் நம் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் நம்மோடு நடந்து வருகின்றார் (எபி. 13:5).
சமாதானத்தால் நிறைந்த இருதயங்கள்
நாற்பத்தைந்து ஆண்டுகளாக, விளையாட்டையே தன் தொழிலாகக் கொண்டு, வாழ்ந்த வீரர் ஜெரி கிரேமர், விடுபட்டபோது, தன்னுடைய விளையாட்டுத் துறையில் (புகழின் உச்சநிலை மரியாதையை) அடையவில்லை. ஆனால், அநேக வேறுவகையான சாதனைகளையும், புகழ்ச்சியையும் அவர் பெற்றிருந்தார். இந்த துறையின் உச்ச விருது அவருக்குக் கிடைக்காமல் போய்விட்டது. அந்த மரியாதைக்கு அவர் பத்துமுறை சிபாரிசு செய்யப்பட்டும், அது அவருக்கு வாய்க்கவேயில்லை. அவருடைய நம்பிக்கை அநேக முறை உடைக்கப்பட்ட போதும் கிரேமர், “தேசிய கால்பந்து கழகம் என்னுடைய வாழ்வில் நூறு பரிசுகளை வழங்கியுள்ளது. ஆனால், எனக்குத் தரப்படாத ஒன்றினைத் குறித்து நான் கோபப்படுவதும் மனம் வருந்துவதும் முட்டாள்தனம்” என்றார்.
யாராயிருந்தாலும், இத்தனை அதிக முறை தனக்குச் சேர வேண்டிய மரியாதையை மற்ற விளையாட்டு வீரருக்குச் சாதகமாக வழங்கிய போது தனக்குள் கசப்பையும், வெறுப்பையும் வளர்த்துக் கொள்ளக் கூடும். ஆனால், கிரேமர் அவ்வாறில்லை. அவர் நடந்து கொண்ட விதம், நாம் எவ்வாறு நம்முடைய இருதயத்தை பொறாமையான எண்ணங்களால் கறைபடாதபடி பாதுகாப்பது என்பதை விளக்குகின்றது. “பொறாமையோ எலும்புருக்கி” (நீதி. 14:30) என வேதாகமம் கூறுகின்றது. நமக்குச் சொந்தமல்லாத ஒன்றின்மீது அதிக நாட்டம் உடையவராய், அதனையே சிந்தித்துக் கொண்டு, நாம் பெற்றுள்ள பல நன்மைகளை உணராதிருப்போமாயின் தேவன் தரும் சமாதானத்தை இழந்து விடுவோம்.
பதினொன்றாவது முறை ஜெரி கிரேமர் தேர்வு செய்யப்பட்டபோது, தேசிய கால்பந்து கழகத்தின் மிக உயர்ந்த மரியாதையை பிப்ரவரி 2018ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். நம்முடைய உலக ஆசைகளும் இறுதிவரை நிறைவேற்றப்படாமலிருக்கலாம். தேவன் நமக்கு தாராளமாகத் தந்துள்ள அநேகக் காரியங்களில் நாம் கவனத்தைச் செலுத்துவோமாயின் தேவன் நமக்குத் தரும் அமைதியான இருதயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நாம் எதை அடைய விரும்பினோம், எதை அடையவில்லை என்பது காரியமல்ல, தேவன் நம் வாழ்வில் கொண்டு வரும் சமாதானத்தைப் பெற்று அதில் மகிழ்ச்சியாயிருப்பதே சிறந்த வாழ்வு.
பள்ளத்தாக்கினூடே
ஹே வூ (அது அவளுடைய சொந்த பெயரல்ல) வட கொரியாவிலுள்ள தொழிலாளர் கேம்பில் சிறையிலடைக்கப்பட்டாள். அவள் அந்நாட்டு எல்லையைத் தாண்டி சீனாவிற்குள் செல்ல முயற்சித்ததால் பிடிபட்டாள். அங்கு அவள் இரவும் பகலும் பல கொடுமைகளைச் சகித்தாள். மிருகத்தனமான காவலாளிகளாலும், முதுகை உடையச் செய்யும் வேலையாலும், பனி போல குளிரும் தரையில் பூச்சிகள் பேன்களோடும், எலிகளோடும் போராடி குறைந்த நேரமே தூங்க முடிந்தததாலும் மிகவும் துன்பப்பட்டாள். ஆனால், தேவன் ஒவ்வொருநாளும் அவளோடிருந்து அவளுக்கு உதவினார். அந்தச் சூழலிலும் தேவன், எந்த கைதிகளோடு நம்மோடு பேச முடியும் என்பதைக் காட்டி, அவர்களோடு தன்னுடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள உதவினார்.
அந்த காப்பகத்திலிருந்து விடுதலை பெற்ற பின்பு தென் கொரியாவில் வாழ்ந்தாள். வூ தான் சிறையிலிருந்த நாட்களைக் குறித்து எண்ணிப்பார்த்தாள். தன்னுடைய வாழ்வின் அநுபவம் முழுவதும் சங்கீதம் 23ல் தொகுக்கப்பட்டுள்ளது என்றாள். அவள் ஓர் இருளடைந்த பள்ளத்தாக்கில் அடைக்கப்பட்டிருந்தாலும் இயேசு அவளுடைய மேய்ப்பனாக இருந்து சமாதானம் கொடுத்தார். “சாவின் பள்ளத்தாக்கு போன்ற ஓரிடத்தில் தான் தங்க நேர்ந்தாலும் நான் எதைக் குறித்தும் அஞ்சவில்லை. ஒவ்வொரு நாளும் தேவன் என்னைத் தேற்றினார்” அவள் தேவனுடைய நன்மையையும் அன்பையும் ருசித்தபடியால், தேவன் அவளுக்கு தான் தேவனுடைய அன்பு மகள் என்ற உறுதியைக் கொடுத்தார். “நான் ஒரு பயங்கரமான இடத்திலிருந்தேன். ஆனாலும் தேவனுடைய நன்மையையும் அன்பையும் நான் உணர்ந்தேன்” என்றாள். அவள் தேவனுடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் இருப்பதாக அறிந்து கொண்டாள்.
வூவின் கதையைக் கேட்கும் போது நமக்கு அது ஊக்கத்தையளிக்கின்றது. அவள் பயங்கரமான சூழலிலிருந்த போதும் தேவனுடைய அன்பையும் வழிநடத்துதலையும் உணர முடிந்தது. தேவன் அவளைத் தாங்கி அவளுடைய பயத்துக்கு விலக்கிக் காத்தார். நாமும் இயேசுவைப் பின்பற்றுவோமாயின், அவர் நம்முடைய துன்பங்களின் வழியே நம்மை மென்மையாக நடத்துவார். நாம் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், “நாம் கர்த்தருடைய விட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்போம்” (23:6)