Archives: மார்ச் 2019

கடினமான இடங்களில் மகிழ்ச்சி

அவளால் எப்பொழுதெல்லாம் தொலைபேசியை எடுக்கமுடியவில்லையோ, அப்பொழுதெல்லாம் என்னுடைய சிநேகிதியின் ஒலிப்பதிவு செய்தி என்னை ஒரு செய்தியை பதிவு செய்யும்படி அழைக்கும். அந்த அழைப்பின் முடிவில் 'இது ஒரு சிறப்பான நாளாக அமையட்டும்' என முடிக்கும். நான் அந்த வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்க்கும்போது, நம்முடைய நாட்களைச் சிறப்பானதாக்கிக் கொள்ளும் வல்லமை நம்மிடமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். உண்மையிலேயே சில சந்தர்ப்பங்கள் நம்மை அழிவுக்குள்ளாக்குவதாக இருக்கின்றன. ஆனால், சற்று ஆழமாகப் பார்க்கும்போது, நம்முடைய காரியங்கள் நன்றாகவோ மோசமானதாகவோ போனாலும், ஏதோவொரு விடுவிக்கும் வல்லமை நம்முடைய நாட்களை அழகானதாக்கி விடுகிறது என உணர்கின்றேன்.

ஆபகூக் இலகுவான சூழல்களை மட்டும் சந்திக்கவில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசியாகையால் தேவன் வரும்நாட்களில், ஜனங்கள் சார்ந்து வாழ்கின்ற விளைச்சலிலும், கால்நடைகளிலும் பலனில்லாமல் போகும் காலங்களைக் காட்டுகின்றார் (3:17). இக்காலங்களின் கொடுமையைத் தாங்குவதற்கு நம்பிக்கை மட்டுமே உதவமுடியும். ஒரு ஜனக்கூட்டமான இஸ்ரவேலர் கொடுமையான வறுமையை சந்திப்பர் என்பதைக் கேட்ட ஆபகூக்கின் இருதயம் வேதனையடைந்தது. உதடுகள் துடித்தன, கால்கள் பயத்தால் நடுங்கின (வச. 16).

இவையனைத்தும் இருந்தபோதும் ஆபகூக், 'நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்; என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்" (வச. 18) என்கின்றார். அவர் தேவன் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். கர்த்தர் தன்னை பெலப்படுத்தி, உயரமான ஸ்தலங்களில் தன்னை நடக்கப்பண்ணுவார் என நம்பிக்கையோடிருக்கின்றார் (வச. 9).

சில வேளைகளில் நாமும் ஆழ்ந்த வேதனைகளையும், கடின வேளைகளையும் கடக்க நேரிடும். ஆனால், எதை இழந்திருந்தாலும், எதை அடையாமற்போனாலும், ஆபகூக்கைப் போன்று நம்முடைய அன்பு தேவனில் களிகூருவோம். நமக்கு ஒன்றுமேயில்லாமல் போனாலும் அவர் நம்மைக் கைவிடுவதும் நம்மை விட்டு விலகுவதுமில்லை (எபி. 13:5). அவரே துயரப்படுகிறவர்களுக்கு நன்மையைத் தருபவர், அவரே நம்முடைய மகிழ்ச்சியின் காரணர்
(எபி. 61:3).

தைரியமாக நில்

ஜெர்மனியின் அநேக தேவாலயங்களின் தலைவர்கள் ஹிட்லருக்குச் சாதகமாக செயல்பட்ட போதும், வேத வல்லுநரும், போதகருமான மார்டின் நிமோலெர் என்பவர் நாசிக் கட்சியின் கொடுமைகளை எதிர்த்து நின்ற தைரியசாலிகளோடிருந்தார். நான் வாசித்ததில் 1970ல் மூத்த ஜெர்மானியர் ஒரு கூட்டமாக, ஒரு பெரிய விடுதியின் முன் நின்றுகொண்டிருக்க, ஓர் இளைஞன் அந்தக் குழுவின் சார்பாக பேசிக் கொண்டிருந்தார். ஒருவர், 'யார் அந்தக் குழுவினர்?" எனக் கேட்டபோது, 'ஜெர்மானிய போதகர்கள்" என பதில் வந்தது. 'அந்த இளைஞன் யார்?" என்று கேட்டபோது அது மார்டின் நிமோலெர், அவருக்கு வயது எண்பது என்றனர். ஆனால், அவர் இளமைத் துடிப்போடிருந்தார். ஏனெனில், அவரிடம் பயமில்லை.

நிமோலெருக்கு பயத்தை எதிர்த்து பெரிய, பயமற்ற மனிதனுக்கப்பாற்பட்ட வல்லமையிருந்தது. அது தேவனுடைய கிருபையே. உண்மையில் அவர் ஆரம்பத்தில் யூதருக்கு விரோதமான எண்ணங்களையே கொண்டிருந்தார். ஆனால், அவர் மனந்திரும்பியபோது தேவன் அவரை மீட்டுக் கொண்டார். அவர் உண்மைக்காக தைரியமாகப் பேசும்படிக்கு அவருக்கு தேவன் உதவினார்.

இஸ்ரவேலரும் பயத்தை மேற்கொண்டு தேவனை உண்மையாய் தொடரும்படி, அவர்களுக்கு மோசே ஊக்கமளிக்கின்றார். மோசேயும் அவர்களை விட்டு எடுபட்டு விடுவார் என அவர்கள் கேள்விப்பட்ட போது, அவர்கள் பயத்தால் பின் வாங்காதபடி அவர்களுக்கு மோசே, 'நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள். அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடே கூட வருகிறார்" (உபா. 31:6) என தைரியப்படுத்துகின்றார். இஸ்ரவேலர் தங்கள்

எதிர்காலத்தைக் குறித்து பயப்படத் தேவையில்லை. ஏனெனில், தேவன் அவர்களோடிருக்கின்றார்.

எத்தகைய இருள் உன்னைச் சூழ்ந்துகொண்டாலும், எத்தனை பயங்கரம் உன்னைத் தாக்கினாலும் தேவன் உன்னோடிருக்கின்றார். தேவனுடைய கிருபையால் நீ பயத்தை மேற்கொள்வாய். ஏனெனில் 'தேவன் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" (வச. 6,8).

ஓர் அடையாளத்தைக் காட்டிலும் மேலானது

தன்னுடைய குழு ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த கடைசி நேரத்தில், ஐயோவா பல்கலைக்கழகத்தின் மிகச்சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஜோர்டன் பொகனன் தடையில்லா ஓர் பந்து எறிதலை வேண்டுமென்றே தவறவிட்டு, தன் பள்ளியின் 25 வருட ரெக்கார்டை முறியடிப்பதை விட்டுவிட்டான். ஏன்? 1993 ஆம் ஆண்டு ஐயோவாவின் கிறிஸ்ட்ரீட் குழுவில் முப்பத்துநான்கு தடையில்லா பந்து எறிவுகளை தொடர்ந்து போட்டான்.. பின்னர் அவன் ஒரு கார் விபத்தில் மரித்துப் போனான். போகனன் ஸ்டீரிட்டை கௌரவித்து மகிழ்ந்தானேயன்றி, தன்னுடைய பள்ளிப் பதிவை முறியடிக்க விரும்பவில்லை.

போகனன் தன்னுடைய சொந்த முன்னேற்றத்தைவிட, சில விழிப்புணர்வை ஏற்படுத்தும் காரியங்களுக்கு அதிக கவனம் செலுத்தினான். இதே போன்ற மதிப்பீடுகளை இளம் வீரரான தாவீதின் வாழ்விலும் காணலாம். ஒரு குகையில் தன்னுடைய தரமற்ற படைகளோடு ஒளிந்திருந்த தாவீது, தன்னுடைய சொந்த ஊரான பெத்லகேமின் கிணற்று நீரைப் பருக ஏங்கினான். ஆனால், அந்தப் பகுதி பெலிஸ்தரின் கைவசமிருந்தது (2 சாமுவேல் 23:14-15).

தாவீதின் மூன்று யுத்த வீரர்கள் பெலிஸ்தரின் எல்லைக்குள் துணிந்து புகுந்து, அந்தக் கிணற்று நீரை மொண்டு தாவீதுக்குக் கொண்டு வந்தனர். ஆனால், தாவீதால் அந்த நீரைப் பருக முடியவில்லை. 'அவன் அதைக் குடிக்க மனதில்லாமல், அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப் போட்டான்" அவன், 'கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக" என்றான் (வச. 16-17).

தங்களுக்கு அகப்பட்டதையெல்லாம் கையகப்படுத்திக் கொள்வதையே பாராட்டும் இந்த உலகில் அன்பினாலும், தியாகத்தாலும் நிறைவேற்றப்படும் செயல்கள் எத்தனை வல்லமையுள்ளவை! அத்தகைய செயல்கள் ஓர் அடையாளத்தை ஏற்படுத்துவதைக் காட்டிலும் மேலானவை.

தொடர்ந்து போய்க் கொண்டிரு

பல வகையான ஜனங்கள் நிறைந்த இவ்வுலகில் வெவ்வேறு திறமைகளும், வெவ்வேறு தலைமைத்துவ பண்பும் கொண்ட அநேகரோடு தொடர்புகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் பட்டணத்திற்கு வெளியே ஒரு மேற்பார்வையாளரால் நடத்தப்படும் ஒரு செயல்திட்டம் சற்று மாறுபட்டது. எங்களுடைய வேலையைக் குறித்து கடுமையாக குற்றம்சாட்டியதோடு, ஒவ்வொரு வார இறுதியிலும் எங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இன்னும் அதிக வேலையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினார். இந்த குறுக்கீட்டால் நான் ஊக்கமிழந்தேன். பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. சில வேளைகளில் இதனை விட்டுவிடலாமா என்று கூட சிந்திக்கலானேன்.

இதேபோன்றுதான் மோசேயும் துன்பங்கள் சூழ்ந்த இருண்ட வேளையில், பார்வோனைச் சந்திக்காமல் போய்விட எண்ணியிருப்பான். தேவன் மேலும் எட்டு பேரழிவுகளை எகிப்தியர் மீது அனுப்பிய பின், பார்வோன் மோசேயிடம் 'என்னை விட்டு அப்பாலே பேர் நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய்" என வெடிக்கின்றான் (யாத். 10:28).

இந்த மாதிரி எச்சரிப்பு இருந்தபோதிலும் இஸ்ரவேலரை பார்வோனின் கையிலிருந்து மீட்பதற்கு தேவன் மோசேயை பயன்படுத்தினார். 'விசுவாசத்தினாலே மோசே... ராஜாவின் கோபத்துக்கு பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்" (எபி. 11:27). தேவன், தான் விடுவிப்பேன் என வாக்களித்ததை நிறைவேற்றுவார் என்று தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையால் மோசே, பார்வோனை மேற்கொண்டான் (யாத். 3:17).

நம்முடைய வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் நம்மோடிருந்து, பரிசுத்த ஆவியானவர் மூலம் நம்மை வழி நடத்துவார் என்ற அவருடைய வாக்குத்தத்தத்தை உறுதியாகப் பற்றிக்கொள்வோம். 'தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2 தீமோ. 1:7) நம்முடைய வாழ்வில் தேவன் காட்டும் வழியில் தொடர்ந்து செல்ல தேவையான தைரியத்தை பரிசுத்த ஆவியானவர் தந்து நம்மை வழிநடத்துவார்.

ஒப்பிட முடியாத வாழ்வு

ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில், நடுத்தர வயதினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களைப் போல நடித்தனர். இளைஞர்களின் வாழ்வை நன்கு புரிந்துகொள்வதற்காக அப்படிச் செய்தனர். இளைஞர்கள் தங்களுடைய சுயமதிப்பை அளப்பதில் சமுதாயத் தொடர்பு சாதனங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒரு நபர், 'மாணவர்களின் சுயமதிப்பு, தொடர்பு சாதனங்களோடு இணைந்துள்ளது. தங்களுடைய ஒரு புகைப்படத்திற்கு எத்தனை 'விருப்பங்கள்" கொடுக்கப்பட்டுள்ளன என்பதையே அது சார்ந்துள்ளது" என்றார். மற்றவர்கள் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் தேவை, இளைஞர்களை அதிக நேரம் வலைதளங்களில் தொடர்புகொள்ளத் தூண்டுகின்றது.

நாம் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஏக்கம் எப்பொழுதும் இளைஞர்களுக்குள் இருக்கின்றது. ஆதியாகமம் 29ல் லேயாள், தன்னுடைய கணவன் யாக்கோபின் அன்பினைப் பெற ஏங்குவதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதன் வெளிப்பாட்டை தன்னுடைய முதல் மூன்று குமாரரின் பெயர்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அத்தனையும் அவளுடைய தனிமையை வெளிக்காட்டுகின்றன (வச. 31-34). ஆனால், வருத்தத்திற்குரியது என்னவெனில், யாக்கோபு தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவள் எதிர்பார்த்த எண்ணம் நிறைவேறியதாகத் தெரியவில்லை.

லேயாளுக்கு நான்காவது மகன் பிறந்தபோது அவள் தன் கணவனிடமல்ல, தேவனிடம் திரும்பி, தன் மகனுக்கு யூதா என்று பெயரிடுகின்றாள். அதற்கு 'கர்த்தரைத் துதிப்பேன்" என அர்த்தம் (வச. 35). லேயாள் தனக்குரிய முக்கியத்துவம் தேவனிடம் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டாள். அவள் தேவனுடைய இரட்சிப்பின் வரலாற்றில் இடம் பெறுகின்றாள். தாவீது அரசனின் முன்னோர்களின் பட்டியலில் யூதா இடம்பெறுகின்றார். பின்;னர் இயேசு கிறிஸ்துவும் தாவீதின் வம்சத்தில் தோன்றுகின்றார்.

நாமும் நம்முடைய முக்கியத்துவத்தைப் பெற பலவகைகளில், பல வழிகளில் முயற்சிக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே, நாம் தேவனுடைய பிள்ளைகள், இயேசு கிறிஸ்துவின் சந்ததியின், பரலோகத் தந்தையோடு நித்தியமாக வாழப் போகின்றவர்கள் என்ற அடையாளத்தைப் பெற முடியும். பவுல் எழுதுவது போல, 'என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்று நாமும் சொல்வோமாக (பிலி. 3:8).