முற்றிலும் பிரம்மிக்கச் செய்கிறது
என்னுடைய வாழ்வில் அடிக்கடி பரபரப்பையும், வெறித்தனத்தையும் உணருகின்றேன். நான் ஒரு வேலையிலிருந்து மற்றொன்றிற்கு வேகமாக மாறுகிறேன், அவசரமாக அலைபேசி அழைப்புகளில் பேசுவதும், போகின்ற வழியிலேயே. அன்று முடிக்கப்படவேண்டிய வேலைகளின் நீண்டபட்டியலை சரிபார்ப்பதுமாக இருப்பேன். மிகவும் சோர்வடைந்த நிலையில் ஒரு ஞாயிறு, எங்கள் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள ஊஞ்சல் படுக்கையில் சாய்ந்தேன். என்னுடைய கைப்பேசி வீட்டிலிருந்தது, என்னுடைய குழந்தைகளும் கணவரும் வீட்டிலிருந்தனர். நான் ஒருசில நிமிடங்கள் மட்டுமே உட்கார்ந்து விட்டு செல்லலாம் என்று அங்கு வந்தேன். ஆனால், அங்கிருந்த தடையில்லாத அமைதி, நான் அங்கு கண்ட காட்சிகளை மேலும் மேலும் பார்க்கத் தூண்டியது. என்னுடைய ஊஞ்சல் படுக்கையின் அசைவினால் ஏற்பட்ட மெல்லிய சத்தத்தையும், அருகிலுள்ள லாவண்டர் மலர்களைச் சுற்றிக் கொண்டிருந்த தேனீக்களின் ரீங்காரத்தையும், எனக்கு மேலே பறந்த பறவைகளின் இறக்கையொலியையும் என்னால் கேட்க முடிந்தது. பிரகாசமான நீல வானில், காற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேகங்களையும் கண்டு வியந்தேன்.
தேவன் படைத்த அனைத்தையும் பார்த்தபோது என் கண்கள் கண்ணீரால் நிரம்பிற்று. என் கண்களின் வழியேயும், செவியின் வழியேயும் இத்தனை அதிசயமான காரியங்களைப் பார்க்கவும், கேட்கவும் நான் அதிக நேரத்தைக் கொடுத்தபோது, நன்றி நிறைந்த உள்ளத்தோடு, தேவனுடைய படைப்பின் வல்லமையை வியந்து, ஆராதிக்க ஆரம்பித்தேன். சங்கீதம் 104ஐ எழுதியவரும், தேவனுடைய கரத்தின் கிரியைகளைக் கண்டு வியந்து, தன்னைத் தாழ்த்தி, 'உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது" என்கின்றார் (வச. 13).
ஓர் அவசரமான வாழ்வின் நடுவில், ஓர் அமைதியான நேரம் தேவனுடைய வல்லமையுள்ள படைப்பாற்றலை நம்முடைய நினைவில் கொண்டு வருகிறது. அவருடைய வல்லமையான படைப்பும், அவருடைய மென்மையும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றது. அவரே உயர்ந்த பர்வதங்களையும் பறவைகள் தங்கும் மரக்கிளைகளையும் படைத்தார். 'அவைகளையெல்லாம் ஞானமாய் படைத்தீர்" (வச. 24).
தேவனுடைய சித்தத்தின்படி வாழல்
எர்னஸ்ட் ஹெம்மிங்வேயிடம் ஒருமுறை ஆறு வார்த்தைகளில் ஒரு கதையை எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர், ''விற்பனைக்கு உள்ளன- குழந்தையின் ஷூ_க்கள், இதுவரை அணியப்படாதவை" என எழுதினார். ஹெம்மிங்வேயின் கதை மிகவும் வலிமை வாய்ந்தது, ஏனெனில் அது நம்மை, அதற்கான விளக்கங்களை நிரப்பும்படி சிந்திக்கச் செய்கின்றது. சுகமாய் வாழும் ஒரு குழந்தையால் அந்த ஷூ _க்களை பயன்படுத்த முடியவில்லையா? அல்லது அங்கு ஒரு கொடுரூரமான இழப்பா? ஏதோ ஓரிடத்தில் தேவனுடைய ஆழ்ந்த அன்பும் ஆறுதலும் தேவைப்படுகின்றதா?
மிகச் சிறந்த கதைகள் நம் கற்பனையில் தூண்டப்படுகின்றன. இதுவரை பேசப்படாத மிகப் பெரிய கதை நம்முடைய சிந்தனையில் உருவாகிறது. தேவனுடைய கதையிலும் ஒரு மத்திய கருத்து உள்ளது. தேவன் யாவையும் படைத்தார். நாம் (மனித குலம்) பாவத்தில் விழுந்தோம். இயேசு இவ்வுலகிற்கு வந்தார், மரித்தார், நம்மை பாவத்திலிருந்து விடுவிக்க, அவர் உயிர்த்தெழுந்தார், மீண்டும் நாம் அவருடைய வருகையையும் அனைத்தையும் மீட்டு புதுப்பிக்கும் நாளையும் எதிர்பார்த்திருக்கின்றோம்.
முன்பு என்ன நடந்ததென்பதையும், இனிமேல் என்ன நடக்குமென்பதையும் தெரிந்து கொண்ட நாம், இப்பொழுது எப்படி வாழவேண்டும்? இயெசு தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் பொல்லாங்கனின் பிடியிலிருந்து மீட்டு புதிதாக்கும் போது, 'அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்" (ரோம. 13:12) இதன் மூலம், தேவ பெலத்தால் நாம் பாவத்தை விட்டுத் திரும்பி, அவரையும் மற்றவர்களையும் அன்புகூரத் தெரிந்து கொள்வோம் (வச. 8-10).
நாம் இயேசுவோடு சேர்ந்து என்னென்ன வழிகளில் பாவத்திற்கு எதிர்த்து நிற்கலாமென்பது, நமக்கிருக்கின்ற கொடைகளையும், என்ன தேவைகள் நமக்கிருக்கின்றன என்பதைச் சார்ந்ததேயாம். நாம் நம்முடைய கற்பனையை பயன்படுத்தி நம்மைச் சுற்றிலும் பார்ப்போம். நாம் காயமுற்றவர்களையும், அழுகின்றவர்களையும் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு தேவனுடைய நீதியையும் அன்பையும், ஆறுதலையும் தேவனுடைய வழிநடத்தலின்படி கொடுப்போம்.
அவர் நமது கரத்தைப் பிடித்திருக்கின்றார்
ஓர் அழகிய, துடுக்கான சிறுபெண், ஒரு ஞாயிறன்று, ஆலயத்தில் தனியாகப் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தாள். இரண்டு வயதிற்கு மிகாத அச்சிறுமி, ஒவ்வொருபடியாக இறங்கி, ஆலயத்தின் கீழ் தளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள். கீழ் தளத்திற்குச் செல்லவேண்டுமென்பதே அவளுடைய தீர்மானம் அதை நிறைவேற்றியும் விட்டாள். நான் இக்குழந்தையின் தைரியமான செயலை நினைத்துப் பார்த்து, எனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டேன். இக்குழந்தை பயப்படவேயில்லை, ஏனெனில், அக்குழந்தையின் தாயின் கண்கள் அக்குழந்தையை கவனித்துக் கொண்டேயிருக்கின்றன என்பதும் அத்தாயின் கரங்கள் எப்பொழுதும் உதவும்படி ஆயத்தமாயிருக்கின்றன என்பதும் அக்குழந்தைக்குத் தெரியும். இந்தக் காட்சி, நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய பிள்ளைகள் இந்த நிலையற்ற உலகினை கடந்து செல்வதற்கு உதவும்படி எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறாரென்பதை எனக்கு நினைவுபடுத்தியது.
இன்றைய வேதாகமப் பகுதி இருவகையான குறிப்புகளைத் தருகிறது. ஆதிமனிதரை பயப்படவும், சோர்ந்து போகவும் வேண்டாமெனக் கூறும் தேவன் அவர்களிடம், 'என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்" (ஏசாயா 41:10) என்கின்றார். அநேக ஆர்வமும், பயமும் உள்ள குழந்தைகள், தங்கள் பெற்றோருடைய பெலத்தால் நிலைப்படுத்தப்படுகின்றனர். இங்கு தேவனுடைய வல்லமை செயல்படுவதைக் காண்கின்றோம். இரண்டாவதாக தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பையளிக்கின்றார். 'உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப் பிடித்து பயப்படாதே" (வச. 13) என்கின்றார். வாழ்வின் சூழ்நிலைகளும், நேரமும் மாறலாம். ஆனால், தேவன் மாறாதவர். நாம் கலங்கத் தேவையில்லை (வச. 10). ஏனெனில், தேவனுடைய வாக்குகள் நமக்கு உறுதியைத் தருகின்றது. நம்முடைய அவலநிலையில் தேவன் நமக்குத் தேவையான வார்த்தைகளைத் தருகின்றார். 'பயப்படாதே" (வச. 10,13) என்கின்றார்.
ஜீவ பலி
என்னுடைய பெரிய அத்தை விளம்பரம் செய்கின்ற ஒரு நல்ல வேலையிலிருந்தார்கள். தன்னுடைய வேலையினிமித்தம் சிக்காகோவிற்கும் நியூயார்க்கிற்குமிடையே அடிக்கடி பிரயாணம் செய்வார்கள். ஆனால், தன்னுடைய பெற்றோரின் மீதிருந்த அன்பினால், தன்னுடைய சிறப்பான எதிர்காலத்திற்கு வழிவகுக்கக் கூடிய இந்த வேலையை விட்டுவிட எண்ணினார்கள். அவளுடைய பெற்றோர் மினிசோட்டா என்ற இடத்திலிருந்தபடியால் அங்கு அவர்களை கவனிக்க வேண்டியிருந்தது. அவளுடைய இரு சகோதரரும் இளம் வயதிலேயே சோகமாக மரித்ததால் இவர் மட்டுமே அவளுடைய பெற்றோரைக் கவனிக்க வேண்டியிருந்தது. அவரைப் பொருத்தவரை தன் பெற்றோருக்குப் பணி செய்வதையே தன் விசுவாசத்தின் வெளிப்பாடாக கருதினாள்.
ரோமாபுரியிலுள்ள சபைகளுக்கு பவுல் எழுதும் போது விசுவாசிகள் தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கும்படி வேண்டிக்கொள்கின்றார் (ரோம. 12:1). கிறிஸ்துவின் அன்போடு கூடிய தியாகத்தை அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒருவருக்கொருவர் கொடுக்கும்படி விரும்புகின்றார். உங்களில் ஒருவனும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ண வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கின்றார் (வச. 3). அவர்களுக்குள்ளே வாக்குவாதங்களும் பிரிவினைகளும் வராதபடிக்கு பெருமையானவற்றை விட்டு விடவும் ஆலோசனைக் கூறுகின்றார். 'அநேகராகிய நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்" (வச. 5) எனவே நாம் ஒருவருக்கொருவர் மாயமற்ற அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றார்.
ஒவ்வொரு நாளும், நாம் பிறருக்குப் பணிசெய்யும்படி அநேக வாய்ப்புகள் கிடைக்கின்றன. நாம் ஏதோவொரு வரிசையில் நமக்குப் பிந்தி நிற்பவரை நமக்கு முன்னே செல்ல வழிவிடலாம் அல்லது எனது அத்தையைப் போன்று சுகவீனமான ஒருவனைக் கவனிக்கலாம், அல்லது நம்முடைய அநுபவங்களிலிருந்து மற்றவருக்கு ஆலோசனைகளைத் தந்து வழிகாட்டலாம். நம்மை இவ்வாறு ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கும் போது, நாம் தேவனைக் கனப்படுத்துகின்றோம்.
ஒரு கடிதத்தில் எழுதி அனுப்பு
அநேக நான்கு வயது சிறுமிகளைப் போன்று ரூபியும் ஓடவும், பாடவும், நடனமாடவும், விளையாடவும் விரும்புவாள். ஆனால், அவள் அவ்வப்போது தனது முழங்காலில் ஏற்படும் வலியைப் பற்றிக் கூறிக் கொண்டேயிருந்தாள். ரூபியின் பெற்றோர் அவளை மருத்துவ ஆய்வுக்கு கொண்டு சென்றனர். அதன் அறிக்கை மிகவும் அதிர்ச்சியூட்டுவதாகயிருந்தது. அந்த மருத்துவ ஆய்வறிக்கை அவளுக்கு புற்றுநோயிருப்பதைத் தெரிவித்தது. நரம்பில் ஏற்பட்டுள்ள புற்றுநோய், அதுவும் நான்காவது நிலை. ரூபி பிரச்சனைக்குள்ளாயினாள். வெகு சீக்கிரம் அவளை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
மருத்துவமனையில் ரூபியைப் பார்க்க அநேகர் வந்தனர். அது கிறிஸ்மஸ் காலமாகையால் வீட்டை விட்டு மருத்துவமனையில் இருப்பது கடினமாயிருந்தது. ரூபியின் செவிலியர் ஒரு யோசனையைக் கொடுத்தனர். அவளுடைய அறைக்கு வெளியே ஒரு தபால் பெட்டியை வைப்போம். அதில் உறவினரும் நண்பர்களும் கடிதங்களில் தங்கள் ஜெபங்களையும், உற்சாகப்படுத்தும் வாசகங்களையும் எழுதிப் போடலாம் என்றார்கள். அந்த வேண்டுதல் முக நூலில் தெரிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து நண்பர்கள், உறவினர்கள், மற்றும் அறியாத நபர்களிடமிருந்தும் கடிதங்கள் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. ரூபிக்கும் அது ஆச்சரியமாயிருந்தது. ஒவ்வொரு கடிதம் வந்த போதும் (மொத்தத்தில் 100,000க்கும் மேல்) ரூபி உற்சாகப்படுத்தப்பட்டாள். கடைசியாக அவளால் வீட்டிற்கு வர முடிந்தது.
பவுல் கொலோசெ சபையினருக்கு எழுதிய கடிதமும் இதேப் போன்றதே (கொலோ. 1:2). அந்தப் பக்கங்களில் எழுதப்பட்ட வார்த்தைகள் நம்பிக்கையைக் கொண்டு வந்தன. தொடர்ந்து கனிதரும் வாழ்க்கை வாழவும், தேவனை அறிகிற அறிவோடு வல்லமையையும், பொறுமையையும், நீடிய சாந்தத்தையும் பெற்றுக்கொள்ள நம்பிக்கை கொடுத்தது (வச. 10-11). கொலோசெ சபை விசுவாசிகளுக்கு வளர்ச்சியடைய நல்ல மருந்தாக அமைந்தது. நமக்காக ஒருவர் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி கொலோசெ சபை விசுவாசிகளை இயேசு கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்தில் நிலைத்திருக்க, பெலப்படுத்தியது.
ஊக்கத்தைக் கொடுக்கும் நம்முடைய வார்த்தைகள், தேவையோடிருப்பவர்களிடம் அற்புதமாக வேலை செய்யும்.