ஓர் அழகிய, துடுக்கான சிறுபெண், ஒரு ஞாயிறன்று, ஆலயத்தில் தனியாகப் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தாள். இரண்டு வயதிற்கு மிகாத அச்சிறுமி, ஒவ்வொருபடியாக இறங்கி, ஆலயத்தின் கீழ் தளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள். கீழ் தளத்திற்குச் செல்லவேண்டுமென்பதே அவளுடைய தீர்மானம் அதை நிறைவேற்றியும் விட்டாள். நான் இக்குழந்தையின் தைரியமான செயலை நினைத்துப் பார்த்து, எனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டேன். இக்குழந்தை பயப்படவேயில்லை, ஏனெனில், அக்குழந்தையின் தாயின் கண்கள் அக்குழந்தையை கவனித்துக் கொண்டேயிருக்கின்றன என்பதும் அத்தாயின் கரங்கள் எப்பொழுதும் உதவும்படி ஆயத்தமாயிருக்கின்றன என்பதும் அக்குழந்தைக்குத் தெரியும். இந்தக் காட்சி, நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய பிள்ளைகள் இந்த நிலையற்ற உலகினை கடந்து செல்வதற்கு உதவும்படி எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறாரென்பதை எனக்கு நினைவுபடுத்தியது.

இன்றைய வேதாகமப் பகுதி இருவகையான குறிப்புகளைத் தருகிறது. ஆதிமனிதரை பயப்படவும், சோர்ந்து போகவும் வேண்டாமெனக் கூறும் தேவன் அவர்களிடம், ‘என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்கின்றார். அநேக ஆர்வமும், பயமும் உள்ள குழந்தைகள், தங்கள் பெற்றோருடைய பெலத்தால் நிலைப்படுத்தப்படுகின்றனர். இங்கு தேவனுடைய வல்லமை செயல்படுவதைக் காண்கின்றோம். இரண்டாவதாக தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பையளிக்கின்றார். ‘உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப் பிடித்து பயப்படாதே” (வச. 13) என்கின்றார். வாழ்வின் சூழ்நிலைகளும், நேரமும் மாறலாம். ஆனால், தேவன் மாறாதவர். நாம் கலங்கத் தேவையில்லை (வச. 10). ஏனெனில், தேவனுடைய வாக்குகள் நமக்கு உறுதியைத் தருகின்றது. நம்முடைய அவலநிலையில் தேவன் நமக்குத் தேவையான வார்த்தைகளைத் தருகின்றார். ‘பயப்படாதே” (வச. 10,13) என்கின்றார்.