Archives: ஜனவரி 2019

உன்னால் எதை விட முடியவில்லை?

“உன்னால் விட முடியாத ஒன்று எது?" என வானொலி தொகுப்பாளர் கேட்டார். கேட்போர் சிலர் ஆர்வத்தோடு பதிலளித்தனர். சிலர் தங்கள் குடும்பங்களைக் குறிப்பிட்டனர். ஒரு கணவன், மரித்துப்போன தன் மனைவியின் நினைவுகளைக் குறிப்பிட்டார், வேறுசிலர் இசையின் மூலம் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் கனவையும், ஒரு தாயாகும் கனவையும் பகிர்ந்தனர். ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைப் பொக்கிஷமாக வைத்துள்ளோம். ஒரு நபர், ஒன்றை நிறைவேற்றல், ஒன்றை அடைதல் என நாம் ஏதோ ஒன்றை விட முடியாமல் வைத்திருக்கின்றோம்.

ஓசியா புத்தகத்தில். தேவன் தான் தெரிந்துகொண்ட ஜனங்களை கைவிடுவதில்லையெனவும், அவர்களைத் தனது விலையேறப்பெற்ற பொக்கிஷமாக வைத்திருப்பதாகவும் கூறுகின்றார். இஸ்ரவேலின், நேச மணவாளனான தேவன் அவளுக்குத் தேவையான யாவற்றையும், நிலம், ஆகாரம், தண்ணீர், உடை மற்றும் பாதுகாப்பையும் கொடுத்தார். ஆனால், இஸ்ரவேலோ வேசித்தனம் பண்ணி தேவனைப் புறக்கணித்து தங்களுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பையும் வேறு இடத்தில் தேடினர். தேவன் அவளை எவ்வளவுக்கு அதிகமாய் தேடினாரோ அவ்வளவு தூரமாய் அவள் சோரம் போனாள் (ஓசியா 11:2) எப்படியிருந்தாலும், அவள் தேவனை மிகவும் வேதனைப்படுத்தினாலும் தேவன் அவர்களைக் கைவிடுவதில்லை (வச. 8). அவர் இஸ்ரவேலை சீர்ப்படுத்தி, விடுவிப்பார். அவருடைய விருப்பமெல்லாம் அவளோடு தன்னுடைய உறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதே (வச. 11).

இன்று தேவனுடைய பிள்ளைகள் யாவருக்கும் இந்த உறுதியைத் தருகின்றார். அவர் நம்மீது வைத்துள்ள அன்பு நம்மை ஒருபோதும் கைவிடும் அன்பல்ல (ரோம. 8:37-39). நாம் அவரை விட்டு அலைந்து திரிந்தோமேயானால், அவர் நாம் மீண்டும் அவரிடம் வரும்படி ஏங்குகின்றார். அவர் நம்மை சீர்ப்படுத்தும் போது, நாம் தேற்றப்படுவோம், அதுவே அவர் நம்மை சேர்த்துக் கொள்வதின் அடையாளம், அவர் நம்மைத் தள்ளிவிடுபவரல்ல. நாம் அவருடைய பொக்கிஷம், அவர் நம்மைக் கைவிடுவதில்லை.

பொருளைவிட பகிர்தல் மேலானது

“ஆனால், நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை" எனக் கதறினான் என்னுடைய இளைய மகன். அவன் தன்னுடைய வீகோ துண்டுகளில் ஒன்றையாகிலும் கொடுக்கனேரிடும் என எண்ணி, உள்ளம் உடைந்தான். நான் அவனுடைய முதிர்ச்சியின்மையை வியந்து பார்த்தேன். ஆனால், உண்மையில் இந்த குணம் குழந்தைகளிடம் மட்டும் தானுள்ளதா? எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கொடுப்பதற்கு விடாப்பிடியான மறுப்பைத் தெரிவிக்கும் குணம் மனிதருக்கு உள்ளது என்பதை என்னுடைய வாழ்வின் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

இயேசுவின் விசுவாசிகளான நாம் நம்முடைய வாழ்வை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். இதனையே ரூத் தன்னுடைய மாமியோடு செய்தாள். கைவிடப்பட்ட விதவையான நகோமியிடம் ரூத்துக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. இருந்தாலும் ரூத் தன் வாழ்வை தன் மாமியாரோடு இணைத்துக் கொண்டாள். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிப்போம், மரணம் வரை சேர்ந்தே வாழ்வோம் என்கின்றாள். அவள் நகோமியிடம், “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்" (ருத். 1:16) என்கின்றாள். அவள் தனக்குள்ளதையெல்லாம் தாராளமாக அந்த முதிய பெண்மணிக்குக் கொடுத்தாள், தன்னுடைய அன்பையும், கரிசனையையும் காட்டினாள்.

நம்முடைய வாழ்வை இத்தகைய முறையில் பகிர்ந்துகொள்வதென்பது சற்று கடினமானதுதான். ஆனால், அந்த தாராள குணத்தின் விளைவு என்ன என்பதை நாம் நினைவு கூரவேண்டும். ரூத் தன் வாழ்வை நகோமியோடு பகிர்ந்து கொண்டாள். பின்னர், அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவன்தான் தாவீது அரசனின் தாத்தா. இயேசு தம்முடைய சொந்த வாழ்வை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர் நிராகரிக்கப்பட்ட போதும் பிதாவினால் அவர் மகிமைப்படுத்தப்பட்டார். இப்பொழுது அவர் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து அரசாட்சி செய்கின்றார். நாமும் நம் வாழ்வை பிறரோடு தாராளமாகப் பகிர்ந்து கொள்ளும்போது நிச்சயமாக ஓர் நாள் ஒரு பெரிய வாழ்வை அனுபவிப்போம் என்பதில் எந்த ஐயமுமில்லை.

இரவில் கேட்ட பாடல்

என்னுடைய தந்தையின் வாழ்வு ஏக்கம் நிறைந்ததாகவேயிருந்தது. அவர் பார்க்கின்சன்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மனதிலும், உடலிலும் குறுகிக் கொண்டேயிருந்த போதிலும், அவர் ஒரு முழுமையைப் பெற ஏங்கினார், அவர் அமைதியைப் பெற விரும்பினார், ஆனால், மன அழுத்தத்தின் வேதனையால் அவதியுற்றார். அவர் அன்பைப் பெறவும், அனுபவிக்கவும் ஏங்கினார். ஆனால், எப்பொழுதும் தனிமையையேயுணர்ந்தார்.

அவர் தனக்கு விருப்பமான சங்கீதம் 42ன் வார்த்தைகளை வாசித்தபோது தன்னுடைய தனிமையுணர்விலிருந்து சற்றே விடுவிக்கப்பட்டார். அவரைப்போன்று சங்கீதக்காரனும் ஆற்றொணா ஏக்கத்தையும், சுகம் பெற வேண்டுமென்ற தீராத தாகத்தையும் அறிவார் (வச. 1-2). அவரைப் போன்று. சங்கீதக்காரனும் ஒருபோதும் தீராத துயரம் எப்படியிருக்கும் என்பதையறிவான் (வச. 3). உண்மையான மகிழ்ச்சியின் நாட்கள் என்பது என்றோ நடந்த ஒரு காரியம் என நினைக்கும்படி அவருடைய துயரம் இருந்தது (வச. 6). என் தந்தையைப் போன்று குழப்பத்தின் அலைகளும், வலியும் வேதனையும் அவரை மேற்கொண்டன (வச. 7). சங்கீதக்காரன் தான் தேவனால் கைவிடப்பட்டவனாக உணர்ந்து “ஏன்" எனக் கேட்கின்றான் (வச. 9).

இந்த சங்கீதத்தின் வார்த்தைகள் அவரின் துயரைத் துடைத்து, அவருக்குத் தான் தனிமைமையிலில்லை என்ற உறுதியைத் தந்தது. வேதனையின் மத்தியில் என்னுடைய தந்தைக்கு ஒரு சமாதானம் கிடைத்தது. ஓர் அன்பின் குரல் அவரைச் சூழ்ந்து கொண்டது. அக்குரல் அவருக்கு ஓர் உறுதியைக் கொடுத்தது, அவருக்குப் பதில் கிடைக்கவில்லையெனினும் அலைகள் அவர்மேல் புரண்டுவந்தாலும், அவர் இன்னமும் தேவனால் நேசிக்கப்படுகின்றார் (வச. 8).

எப்படியோ, இரவில் கேட்ட அந்த அன்பின்பாடல் அவருக்குப் போதுமானதாக இருந்தது, பற்றிக்கொள்ளும்படியான ஒரு சிறிய நம்பிக்கையை, அன்பை, மகிழ்ச்சியை என் தந்தைக்குக் கொடுக்கும்படி போதுமானதாக இருந்தது. அவருடைய எல்லா ஏக்கங்களும் நிறைவேறி திருப்தியைத்தரும் நாளுக்காக காத்திருக்கும்படி அவருக்குப் போதுமானதாக இருந்தது (வச. 5,11).

நம்பிக்கையே உறுதியான அஸ்திபாரம்

விசுவாசத்தைக் குறித்துப் பாடங்களை நாம் எதிர்பாராத இடங்களிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம். சமீபத்தில் நான் எனது 110 பவுண்டு எடையுள்ள, கருப்பு நிற, “கரடி” (டீநயச) என்று நான் பெயரிட்டுள்ள, லேப்ரடார் வகை நாயிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். தண்ணீர் குடிக்கும் பெரிய, உலோகப் பாத்திரம் சமையலறையில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும். எப்பொழுதெல்லாம் அது காலியாகின்றதோ அப்பொழுதெல்லாம் அது குரைப்பதோ, தன் பாதங்களால் அதைச் சுரண்டுவதோ கிடையாது. ஆனால், அதனருகில் அமைதியாகப் படுத்து, காத்திருக்கும். சில நேரங்களில் நீண்ட நேரம் வரைக் கூட காத்திருக்க நேரிடும். ஆனால், கரடி நம்பிக்கையோடிருக்கக் கற்றுக்கொண்டது. நான் எப்படியும் அந்த அறைக்குள் வருவேன், அதனை அங்கு பார்த்து, அதற்குத் தேவையானவற்றைத் தருவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும். அது என் மீது வைத்துள்ள அந்த விசுவாசம், என்னையும் என்னுடைய தேவைகளுக்காக தேவன் மீது நம்பிக்கையோடு காத்திருக்கக் கற்றுக் கொடுத்தது.

“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது" (எபி. 11:1) என வேதாகமம் நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த நம்பிக்கை மற்றும் உறுதியான அஸ்திபாரம் தேவனே. அவர் “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும்" காண்கின்றோம். இயேசுவின் மூலம் தம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களுக்கு, தேவன் தாம் வாக்களித்துள்ளவற்றை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார்.

சில வேளைகளில் நாம் காணாதவைகளின் மீது விசுவாசமாயிருப்பது எளிதாகத் தோன்றாது. ஆனால். நாம் தேவனுடைய நன்மையின் மீதும் அன்பின் மீதும் அமர்ந்திருந்து, அவருடைய ஞானம் எல்லாவற்றிலும் பூரணமாய் விளங்கும் என்பதை நம்பி காத்திருக்க வேண்டும். அவர் சொன்னதை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார். நம்முடைய அழிவில்லாத ஆன்மாவைக் காப்பாற்றவும், நம்முடைய அனைத்து தேவைகளையும் இப்பவும், எப்பவும் சந்திக்கவும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.