என்னுடைய தந்தையின் வாழ்வு ஏக்கம் நிறைந்ததாகவேயிருந்தது. அவர் பார்க்கின்சன்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மனதிலும், உடலிலும் குறுகிக் கொண்டேயிருந்த போதிலும், அவர் ஒரு முழுமையைப் பெற ஏங்கினார், அவர் அமைதியைப் பெற விரும்பினார், ஆனால், மன அழுத்தத்தின் வேதனையால் அவதியுற்றார். அவர் அன்பைப் பெறவும், அனுபவிக்கவும் ஏங்கினார். ஆனால், எப்பொழுதும் தனிமையையேயுணர்ந்தார்.

அவர் தனக்கு விருப்பமான சங்கீதம் 42ன் வார்த்தைகளை வாசித்தபோது தன்னுடைய தனிமையுணர்விலிருந்து சற்றே விடுவிக்கப்பட்டார். அவரைப்போன்று சங்கீதக்காரனும் ஆற்றொணா ஏக்கத்தையும், சுகம் பெற வேண்டுமென்ற தீராத தாகத்தையும் அறிவார் (வச. 1-2). அவரைப் போன்று. சங்கீதக்காரனும் ஒருபோதும் தீராத துயரம் எப்படியிருக்கும் என்பதையறிவான் (வச. 3). உண்மையான மகிழ்ச்சியின் நாட்கள் என்பது என்றோ நடந்த ஒரு காரியம் என நினைக்கும்படி அவருடைய துயரம் இருந்தது (வச. 6). என் தந்தையைப் போன்று குழப்பத்தின் அலைகளும், வலியும் வேதனையும் அவரை மேற்கொண்டன (வச. 7). சங்கீதக்காரன் தான் தேவனால் கைவிடப்பட்டவனாக உணர்ந்து “ஏன்” எனக் கேட்கின்றான் (வச. 9).

இந்த சங்கீதத்தின் வார்த்தைகள் அவரின் துயரைத் துடைத்து, அவருக்குத் தான் தனிமைமையிலில்லை என்ற உறுதியைத் தந்தது. வேதனையின் மத்தியில் என்னுடைய தந்தைக்கு ஒரு சமாதானம் கிடைத்தது. ஓர் அன்பின் குரல் அவரைச் சூழ்ந்து கொண்டது. அக்குரல் அவருக்கு ஓர் உறுதியைக் கொடுத்தது, அவருக்குப் பதில் கிடைக்கவில்லையெனினும் அலைகள் அவர்மேல் புரண்டுவந்தாலும், அவர் இன்னமும் தேவனால் நேசிக்கப்படுகின்றார் (வச. 8).

எப்படியோ, இரவில் கேட்ட அந்த அன்பின்பாடல் அவருக்குப் போதுமானதாக இருந்தது, பற்றிக்கொள்ளும்படியான ஒரு சிறிய நம்பிக்கையை, அன்பை, மகிழ்ச்சியை என் தந்தைக்குக் கொடுக்கும்படி போதுமானதாக இருந்தது. அவருடைய எல்லா ஏக்கங்களும் நிறைவேறி திருப்தியைத்தரும் நாளுக்காக காத்திருக்கும்படி அவருக்குப் போதுமானதாக இருந்தது (வச. 5,11).