விசுவாசத்தைக் குறித்துப் பாடங்களை நாம் எதிர்பாராத இடங்களிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம். சமீபத்தில் நான் எனது 110 பவுண்டு எடையுள்ள, கருப்பு நிற, “கரடி” (டீநயச) என்று நான் பெயரிட்டுள்ள, லேப்ரடார் வகை நாயிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். தண்ணீர் குடிக்கும் பெரிய, உலோகப் பாத்திரம் சமையலறையில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும். எப்பொழுதெல்லாம் அது காலியாகின்றதோ அப்பொழுதெல்லாம் அது குரைப்பதோ, தன் பாதங்களால் அதைச் சுரண்டுவதோ கிடையாது. ஆனால், அதனருகில் அமைதியாகப் படுத்து, காத்திருக்கும். சில நேரங்களில் நீண்ட நேரம் வரைக் கூட காத்திருக்க நேரிடும். ஆனால், கரடி நம்பிக்கையோடிருக்கக் கற்றுக்கொண்டது. நான் எப்படியும் அந்த அறைக்குள் வருவேன், அதனை அங்கு பார்த்து, அதற்குத் தேவையானவற்றைத் தருவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும். அது என் மீது வைத்துள்ள அந்த விசுவாசம், என்னையும் என்னுடைய தேவைகளுக்காக தேவன் மீது நம்பிக்கையோடு காத்திருக்கக் கற்றுக் கொடுத்தது.

“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபி. 11:1) என வேதாகமம் நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த நம்பிக்கை மற்றும் உறுதியான அஸ்திபாரம் தேவனே. அவர் “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும்” காண்கின்றோம். இயேசுவின் மூலம் தம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களுக்கு, தேவன் தாம் வாக்களித்துள்ளவற்றை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார்.

சில வேளைகளில் நாம் காணாதவைகளின் மீது விசுவாசமாயிருப்பது எளிதாகத் தோன்றாது. ஆனால். நாம் தேவனுடைய நன்மையின் மீதும் அன்பின் மீதும் அமர்ந்திருந்து, அவருடைய ஞானம் எல்லாவற்றிலும் பூரணமாய் விளங்கும் என்பதை நம்பி காத்திருக்க வேண்டும். அவர் சொன்னதை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார். நம்முடைய அழிவில்லாத ஆன்மாவைக் காப்பாற்றவும், நம்முடைய அனைத்து தேவைகளையும் இப்பவும், எப்பவும் சந்திக்கவும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.