அன்பான உபசரிப்பு
சமீபத்திய விடுமுறைப் பயணத்தின்போது, நானும் என் மனைவியும் ஒரு புகழ்பெற்ற விளையாட்டு அரங்கைப் பார்க்கச் சென்றோம். அரங்கின் வாயில்கதவு நன்றாக திறந்து இருந்ததால், பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டோம். அந்தத் திடலையும், அழகாகப் பராமரிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களையும் பார்த்து ரசித்தோம். நாங்கள் பார்த்து முடித்தபோது, ‘இந்த மைதானத்திற்குள் வர உங்களுக்கு அனுமதி இல்லை’ என்று ஒருவர் சற்றுக் கடுமையாகக் கூறினார். அவர் அப்படிக் கூறியது நாங்கள் வெளி ஆட்கள் என்று உணர்த்தி, எங்களுக்கு வருத்தத்தைத் தந்தது.
அந்த விடுமுறையின்போது ஒரு தேவாலயத்திற்கும் சென்றோம். ஆலயத்தின் வாசலும் முழுதும் திறந்திருந்ததால் நாங்கள் உள்ளே சென்றோம். ஆனால் என்ன ஒரு வித்தியாசம்! பலர் எங்களை அன்பாக வரவேற்றனர். நாங்கள் வெளி ஆட்கள் என்ற உணர்வே இல்லை. ஆலய ஆராதனை முடிந்தபோது, எங்களை அங்கே இருந்தவர்கள் அன்போடு ஏற்றுக்கொண்டார்கள் என்ற உணர்வுடன் வெளியே வந்தோம்.
ஆனால் பல சமயங்களில் “உங்களுக்கு இங்கே அனுமதி இல்லை” என்ற உணர்வை ஆலயத்திற்கு வருபவர்கள் பெறும்படியாக இருக்கிறது என்பது மிக வருத்தமான உண்மை. ஆனால் வேதாகமம் நாம் அனைவரையும் உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறது. இயேசு நம்மைப் போல நாம் பிறரையும் நேசிக்கவேண்டும் என்று கூறுகிறார். அவர்களை உபசரித்து, நம் வாழ்வில், நம் தேவாலயங்களில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே அது குறிக்கிறது (மத்தேயு 22:39). எபிரேயரில் “அந்நியரை உபசரிக்கும்படி” அழைக்கப்படுகிறோம் (13:2). சமூகத்தில் பின் தங்கியவர்கள், மற்றும் உடல் ஊனமுற்றவர்களிடத்தில் அன்பாக இருக்கும்படி லூக்காவும், பவுலும் நம்மை அறிவுறுத்துகிறார்கள் (லூக்கா 14:13-14; ரோமர் 12:13). விசுவாசிகளிடத்தில் அன்பு செலுத்த நமக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது (கலாத்தியர் 6:10).
கிறிஸ்துவைப் போல் நாம் அனைத்து மக்களையும் உபசரிக்கும்போது, நமது இரட்சகரின் அன்பையும், பரிவையும் நாம் பிரதிபலிக்கிறோம்.
விண்மீன் பிரகாசம்
“ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” என்பது ஒரு ஆங்கில தாலாட்டுப் பாடல். நட்சத்திரங்கள் “உலகத்திற்கு மேலே உயரத்தில்” இருக்கின்றன என்று அதிசயத்தக்க கடவுளின் பிரபஞ்சத்தைப் பற்றிய இந்த வரிகளை ஜேன் டேய்லர் முதலில் ஒரு கவிதையாக எழுதினார். அதிகம் அறியப்படாத மற்ற சரணங்களில் “உன்னுடைய வெளிச்சமான சிறிய பொறி, இருட்டில் செல்லும் பயணிக்கு ஒளி” என்று நட்சத்திரம் ஒரு வழிகாட்டியாக சித்தரிக்கப்படுகிறது.
பிலிப்புவில் உள்ள விசுவாசிகள் தங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு சுவிசேஷத்தின் நற்செய்தியை அறிவிக்கும்போது “சுடர்களைப்போல பிரகாசித்து” குற்றமற்றவர்களும் கபடற்றவர்களுமாக இருக்கும்படி பவுல் பிலிப்பியரில் அறைகூவல் விடுக்கிறார் (வச. 15-16). நாம் எப்படி நட்சத்திரங்களைப் போல் பிரகாசிக்க முடியும் என்று நினைக்கிறோம். ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நம் “ஒளி” வெளிச்சமாக இருக்கிறதா என்று நம்ப முடியாமல் தவிக்கிறோம். நாம் குறைவுள்ளவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் நட்சத்திரங்கள் நட்சத்திரங்களாக இருக்க முயற்சி செய்வதில்லை. அவை நட்சத்திரங்களாக இருக்கின்றன, அவ்வளவே. ஒளி நம் உலகத்தை மாற்றுகிறது. அது நம்மையும் மாற்றுகிறது. ஆண்டவர் உலகத்திற்கு ஒளியைத் தந்தார் (ஆதியாகமம் 1:3). இயேசுவின் மூலமாக, கடவுள் நம் வாழ்க்கையில் ஆவிக்குரிய ஒளியைத் தருகிறார் (யோவான் 1:1-4).
கடவுளின் ஒளியைக் கொண்டுள்ள நாம், நம்மைக் காண்பவர்கள் ஒளியைக் கண்டு, அதன் மூல ஆதாரத்தை நோக்கி ஈர்க்கப்படும்படி, ஒளிவீச வேண்டும். இரவில், வானத்தில் நட்சத்திரம் எப்படி எளிதாக ஒளிவீசுகிறதோ, நம் ஒளியும், அது ஒளி என்கிற காரணத்தினாலேயே ஓரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். நாம் இருட்டான உலகில் ஒளி வீசும்போது, “ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு” என்ற பவுலின் அறிவுரையைப் பின்பற்றுகிறோம். இதனால் நம் நம்பிக்கையின் மூல ஆதாரமான இயேசுவிடம் நாம் மற்றவர்களை ஈர்க்கிறோம்.
எப்போதும் இல்லாத நல்ல மாற்றம்
சால்மன் மீன் பிடிக்கும் ஒரு குழுவைப் பற்றிய ஒரு கதை உண்டு. மீன் பிடிப்பதற்காக நாள் முழுதும் செலவழித்துவிட்டு, ஒரு ஸ்காட்லாந்து விடுதியில் கூடி இருந்தார்கள். அந்தக் குழுவில் ஒருவர் தான் பிடித்த மீனைப் பற்றிக் கூறும்போது, கையை ஆட்டிப் பேசியதில், ஒரு கண்ணாடிக் குவளை சுவரில் பட்டு நொறுங்கி, வெள்ளைச் சுவரில் கறையை ஏற்படுத்தியது. அந்த மனிதர் விடுதிக் காப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டதோடு, தான் ஏற்படுத்திய சேதத்திற்கு பணம் செலுத்துவதாகக் கூறினார். ஆனாலும் சேதமடைந்த அந்தச் சுவரை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அருகில் உட்கார்ந்திருந்த ஒருவர் “கவலைப் படவேண்டாம்” என்று சொல்லி, எழுந்து வந்து, தன்னிடமிருந்த ஒரு தூரிகையால், அந்த கறையைச் சுற்றி வரைய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அந்தக் கறை ஒரு கலைமானாக மாறி இருந்தது. அந்த மனிதர் விலங்குகளை அழகாகப் படம் வரையக்கூடிய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த
சர் இ. ஹெச். லேண்ட்ஸியர்.
சங்கீதம் 51ஐ எழுதிய, இஸ்ரவேலின் மிகச் சிறந்த இராஜாவான தாவீது, தன்னுடைய பாவங்கள் காரணமாக, தன் மீதும், தன் இராஜ்யத்தின் மீதும் அவமானத்தை வரப்பண்ணினான். தன்னுடைய நண்பர்களில் ஒருவனின் மனைவியை அபகரித்ததோடு, அந்த நண்பன் மரணம் அடையும்படி செய்தான். இந்த இரண்டு செயல்களுக்குமே மரணம்தான் தண்டனை. அவன் வாழ்க்கையே பாழானதாகத் தோன்றியது. ஆனால் அவன் கடவுளிடம் மன்றாடினான்: “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” (வச. 12).
தாவீதைப் போல, நாமும் கடந்த காலத்தில் ஏதோ அவமானமான செயல்களைச் செய்திருக்கலாம். அந்த நினைவுகள் நம்மைத் துரத்தி, இரவில் நம்மை தூக்கம் இழக்கச் செய்யலாம். நாம் செய்த காரியங்களை அழிக்க முடியாதா அல்லது சரியாக மீண்டும் செய்ய முடியாதா என்று நினைக்கலாம்.
ஆனால் கடவுளின் கிருபை நம் பாவங்களை மன்னிப்பதோடு, அவற்றின்மூலம் நம்மை முன்பை விட நல்லபடியாக மாற்றக்கூடியது. கடவுள் எதையுமே வீண் செய்வதில்லை.
தைரியமான நிலைப்பாடு
இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில், ஜெர்மானிய நாசிக்கள் (Nazis) தெரஸா ப்ரெகெரோவாவின் நாடான போலந்தை முற்றுகையிட்டபோது, அவள் பதின்பருவத்தில் இருந்தாள். நாசிக்களால் கைது செய்யப்பட்ட யூதர்கள் காணாமல் போன, ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்பட்ட அழிவின் காலத்தின் ஆரம்பம் அது. தெரஸாவும் அவள் நாட்டைச் சேர்ந்த பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, நாசிக்களின் அழிவிலிருந்து, வார்ஸா நகரில் இருந்த யூதர்களுக்கான சிறையிருப்பிலிருந்து, தங்கள் அயலகத்தார்களைக் காப்பாற்றினார்கள். பிற்காலத்தில் தெரஸா இந்த போர் குறித்த ஒரு சிறந்த வரலாற்று வல்லுனராக விளங்கினார். ஆனால் எருசலேமின் யாத் வாஷேம் ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் (Yad Vashem Holocaust Memorial) அவள் பெயர் இடம்பெறுவதற்கு, கொடுமைக்கு எதிராக அவள் தைரியமாக எதிர்த்து நின்றதே காரணம்.
தீங்கை எதிர்த்து நிற்க தைரியம் தேவை. “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அதிகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என்று பவுல் எபேசு சபைக்குக் கூறினார். கண்களுக்குப் புலப்படாத இந்த எதிர்ப்புகளை நம்மால் தனியே எதிர்கொள்ள முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் “பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி” (வச. 11) கடவுள் நமக்குத் தேவையான ஆவிக்குரிய ஆயுதங்களைக் (தேவனுடைய சர்வாயுத வர்க்கம்) கொடுத்துள்ளார்.
அப்படிப்பட்ட தைரியமான நிலைப்பாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்? அநீதியை எதிர்த்து வேலை செய்ய வேண்டியதிருக்கலாம். பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்தில் இருக்கும் நமக்குத் தெரிந்த ஒருவருக்காக நாம் தலையிட்டு உதவ வேண்டியதிருக்கலாம். எந்த விதமான குழப்பமாக இருந்தாலும், நாம் தைரியமாக இருக்க முடியும் – ஏனென்றால், கடவுளுக்காக தீமையை எதிர்த்து நிற்கத் தேவையானவற்றை அவர் ஏற்கனவே கொடுத்துவிட்டார்.
உதவி கேட்பது
அதிக நேரம் வேலை செய்த ஒரு நாளின் முடிவில் அவளது மின்னஞ்சல் வந்தது. உண்மையைச் சொன்னால், நான் அதைப் படிக்கவில்லை. அதிக சுகவீனமாய் இருந்த குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அதை சமாளிக்க உதவும் வகையில் நான் கூடுதல் நேரம் பணிசெய்து கொண்டிருந்தேன். அதனால் கவனத்தைத் திசைதிருப்பும் விஷயங்களுக்கு எனக்கு நேரமில்லை.
அடுத்த நாள் என் தோழியின் மின்னஞ்சலைப் படித்தபோது “உனக்கு என்ன உதவி தேவை?” என்ற கேள்வியைப் பார்த்தேன். என் எண்ணத்தைக் குறித்து வெட்கப்பட்டு, எந்த உதவியும் தேவை இல்லை என்று பதில் அனுப்ப ஆரம்பித்தேன். பின்னர் ஆழ்ந்த மூச்செடுத்து மீண்டும் பார்த்தபோது, அவள் கேள்வி நன்றாகத் தெரிந்ததாக – தெய்வீகத்தன்மை கொண்டதாகத் தோன்றியது.
ஏனென்றால் இயேசு அதே கேள்வியைக் கேட்டார். எரிகோவுக்குப் போகும் வழியில், கண் பார்வையற்ற ஒரு பிச்சைக்காரன் கூப்பிடுவதைக் கேட்ட இயேசு நின்று, பர்திமேயு என்று பெயர்கொண்ட அவனிடம், இதேபோன்ற கேள்வியைக் கேட்டார். என்ன உதவி தேவை? அல்லது இயேசு கேட்டதுபோல் “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” (மாற்கு 10:51).
இந்தக் கேள்வி திகைப்பூட்டுகிறது. சுகமாக்கும் இயேசு நமக்கு உதவ ஆர்வமாய் இருப்பதை அது காட்டுகிறது. ஆனால் முதலில் தாழ்மையை உணர்த்தும் விதமாக, நமக்கு அவர் உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். பர்திமேயு என்ற பிச்சைக்காரன் தேவை உள்ளவனாய் இருந்தான் – ஏழ்மையாக, யாருமற்றவனாக, ஒருவேளை பசியுற்றவனாக இருந்தான். ஆனால் ஒரு புதிய வாழ்க்கையை விரும்பியவனாக, தன்னுடைய அடிப்படைத் தேவையைக் கூறினான். அவன் “ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்” என்றான்.
பார்வையற்ற ஒருவனுக்கு அது ஒரு உண்மையான வேண்டுதல். இயேசு அவனை உடனே சுகப்படுத்தினார். என் தோழி என்னிடம் அதே உண்மையை விரும்பினாள். என் அடிப்படைத் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ள ஜெபிக்கிறேன் என்றும், பின்னர் தாழ்மையுடன் அவளிடம் சொல்வேன் என்றும் அவளிடம் வாக்களித்தேன். இன்று உங்கள் அடிப்படைத் தேவை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் நண்பர் கேட்கும்போது அதைச் சொல்லுங்கள். அதன்பின் உங்கள் வேண்டுதலை அதற்கும் மேலாக எடுத்துச் செல்லுங்கள். அதை கடவுளிடம் தெரிவியுங்கள்.