“ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” என்பது ஒரு ஆங்கில தாலாட்டுப் பாடல். நட்சத்திரங்கள் “உலகத்திற்கு மேலே உயரத்தில்” இருக்கின்றன என்று அதிசயத்தக்க தேவனின் பிரபஞ்சத்தைப் பற்றிய இந்த வரிகளை ஜேன் டேய்லர் முதலில் ஒரு கவிதையாக எழுதினார். அதிகம் அறியப்படாத மற்ற சரணங்களில் “உன்னுடைய வெளிச்சமான சிறிய பொறி, இருட்டில் செல்லும் பயணிக்கு ஒளி” என்று நட்சத்திரம் ஒரு வழிகாட்டியாக சித்தரிக்கப்படுகிறது.

பிலிப்புவில் உள்ள விசுவாசிகள் தங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு சுவிசேஷத்தின் நற்செய்தியை அறிவிக்கும்போது “சுடர்களைப்போல பிரகாசித்து” குற்றமற்றவர்களும் கபடற்றவர்களுமாக இருக்கும்படி பவுல்  பிலிப்பியரில் அறைகூவல் விடுக்கிறார் (வச. 15-16). நாம் எப்படி நட்சத்திரங்களைப் போல் பிரகாசிக்க முடியும் என்று நினைக்கிறோம். ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நம் “ஒளி” வெளிச்சமாக இருக்கிறதா என்று நம்ப முடியாமல் தவிக்கிறோம். நாம் குறைவுள்ளவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் நட்சத்திரங்கள் நட்சத்திரங்களாக இருக்க முயற்சி செய்வதில்லை. அவை நட்சத்திரங்களாக இருக்கின்றன, அவ்வளவே. ஒளி நம் உலகத்தை மாற்றுகிறது. அது நம்மையும் மாற்றுகிறது. ஆண்டவர் உலகத்திற்கு ஒளியைத் தந்தார் (ஆதியாகமம் 1:3).  இயேசுவின் மூலமாகத், தேவன் நம் வாழ்க்கையில் ஆவிக்குரிய ஒளியைத் தருகிறார் (யோவான் 1:1-4).

தேவனின் ஒளியைக் கொண்டுள்ள நாம், நம்மைக் காண்பவர்கள் ஒளியைக் கண்டு, அதன் மூல ஆதாரத்தை நோக்கி ஈர்க்கப்படும்படி, ஒளிவீச வேண்டும். இரவில், வானத்தில் நட்சத்திரம் எப்படி எளிதாக ஒளிவீசுகிறதோ, நம் ஒளியும், அது ஒளி என்கிற காரணத்தினாலேயே ஓரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். நாம் இருட்டான உலகில் ஒளி வீசும்போது, “ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு” என்ற பவுலின் அறிவுரையைப் பின்பற்றுகிறோம். இதனால் நம் நம்பிக்கையின் மூல ஆதாரமான இயேசுவிடம் நாம் மற்றவர்களை ஈர்க்கிறோம்.