தேவன் நம்மைப் பராமரிக்கின்றார்
என்னுடைய சிறிய பேரன்கள் தாங்களாகவே உடையணிந்து கொள்ள விரும்புவர். சில வேளைகளில் அவர்கள் சட்டையை பின்புறமாக போட்டுக்கொள்வர், இளையவன் அடிக்கடி தன்னுடைய ஷ_வை மாற்றி போட்டிருப்பான். நான் எப்பொழுதுமே அதனைச் சுட்டிக்காட்ட விரும்புவதில்லை. ஆனால். நான் அவர்களின் கபடமற்ற செயலை நேசிப்பேன்.
நான், அவர்களுடைய கண்களின் வழியே இவ்வுலகைக் காண விரும்புவேன். அவர்களுக்கு எல்லாமே வினோதமாகத் தெரியும். கீழே விழுந்த மரத்தின் மீது நடப்பதும், ஒரு கட்டையின் மீதமர்ந்து சூரியக் கதிரைப் பெறும் ஒரு ஆமையைக் கண்டுபிடிப்பதும், தீ அணைப்பு வாகனம் உறுமிக் கொண்டு செல்வதை ஆர்வத்தோடு கவனிப்பதும் அவர்களுக்கு வினோதமானவை. ஆனால், என்னுடைய சிறிய பேரன்கள் முற்றிலும் கபடற்றவர்களல்ல. அவர்கள் இரவில் தங்கள் படுக்கையிலிருந்து இறங்குவதற்கும், அடுத்தவனின் விளையாட்டுச் சாமானைப் பறித்துக் கொள்வதற்கும் ஒரு டஜன் காரணங்களைக் கூறுவர், ஆனாலும் நான் அவர்களை அதிகம் நேசிக்கின்றேன்.
தேவனுடைய முதல் மக்களான ஆதாமையும், ஏவாளையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களும் தேவனுக்கு என்னுடைய பேரப்பிள்ளைகளைப் போன்றேதான் இருந்திருப்பர். அவர்கள் தேவனோடு உலாவந்தபோது அந்தத் தோட்டத்தில் கண்ட ஒவ்வொன்றும் அவர்களுக்கு அதிசயமாகத்தான் தோன்றியிருக்கும். ஆனால், ஒரு நாள் அவர்கள் மனமறிய, தேவனுடைய வார்த்தையை மீறி கீழ்படியாதவராயினர். அவர்களுக்கு விலக்கப்பட்ட ஒரு மரத்தின் கனியை உண்டனர் (ஆதி. 2:15-17, 3:6). அந்த கீழ்படியாமை அவர்களைப் பொய்க்கும், மற்றவரைக் குற்றப்படுத்தவும் வழிவகுத்தது (3:8-13).
அப்படியிருந்தும் தேவன் அவர்களை நேசித்து, அவர்கள் மீது கரிசனை கொண்டார். அவர்களை உடுத்துவிப்பதற்காக மிருகங்களை பலியாக்கினார் (வச. 21). பின்னர், தன்னுடைய ஒரே மகனை பலியாகக் கொடுத்து அதன் மூலம் எல்லா பாவிகட்கும் ஒரு மீட்பின் வழியைக் கொடுத்தார் (யோவா. 3:16). அவர் நம்மை அவ்வளவு நேசிக்கின்றார்!
நம்முடைய வீட்டிற்கு வழிநடத்தும் ஜெபம்
“தேவனே, என்னுடைய ஆன்மாவை உம்மிடம் வைத்துக் கொள்ளும், நான் இப்பொழுது படுத்து உறங்குவேன்” என்பது நான் சிறுவனாக இருந்தபோது கற்றுக் கொண்ட முதல் ஜெபம். என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்த ஜெபம். நான் இதனை என்னுடைய மகனும், மகளும் சிறியவர்களாயிருக்கும் போதே கற்றுக் கொடுத்தேன். நான் குழந்தையாயிருந்த போது நான் தூங்குவதற்கு முன்பு என்னை தேவனுடைய கரத்தில் கொடுப்பது மிகவும் ஆறுதலாக இருக்கும்.
இதேப் போன்று மற்றொரு அருமையான ஜெபம் வேதாகமத்திலுள்ள “ஜெப புத்தகம்” என்றழைக்கப்படும் சங்கீதங்களின் புத்தகத்தில் காணப்படுகிறது. “உமது கையில் என் ஆவியை ஒப்பிவிக்கிறேன்” (சங். 31:5) என்ற வாக்கியம் ஒரு படுக்கை நேர ஜெபம். இது இயேசுவின் காலத்தில் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட ஜெபம் என சில வேத வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்த ஜெபத்தையே இயேசுவும் சிலுவையில் கடைசியாகச் சொன்னார் என்பதை நாமறிவோம். ஆனால், இயேசு அதனோடு “பிதாவே” என்ற வார்த்தையைச் சேர்த்துக் கூறினார் (லூக். 23:46) இந்த வார்த்தைகளை, இயேசு மரிக்குமுன் ஜெபித்தார். இயேசு, தனக்கும் பிதாவுக்குமுள்ள நெருங்கிய உறவை இந்த வார்த்தைகளால் நமக்குக் காண்பித்து, அவரை விசுவாசிக்கின்ற நமக்கு பிதாவின் வீட்டையடைய வழியையும் காண்பித்தார் (யோவா. 14:3).
இயேசு சிலுவையில் மரித்ததின் மூலம், நாமும் நம்முடைய பரலோகத் தந்தையாம் பிதாவோடுள்ள அற்புதமான உறவில் வாழும்படி செய்தார். இயேசு நமக்காகச் செய்த தியாக அன்பினாலேயே நாம் தேவனுடைய பராமரிப்பில் அவருடைய பிள்ளைகளாக அமர்ந்திருக்கின்றோம், என்பது எத்தனை ஆறுதலாக இருக்கின்றது. நாம் நம் கண்களை பயமின்றி மூடித் தூங்கலாம், ஏனெனில்ஸ்ர, நம் தந்தை நம்மை விழிப்போடு கவனிக்கின்றார். அவரோடுகூட நாம் வாழும்படி ஒரு நாள் நம்மை எழுப்புவேன் என வாக்களித்துள்ளார்
(1 தெச. 4:14).
செயலிலிருக்கிறதா அல்லது முடிவடைந்துவிட்டதா?
ஒரு வேலையை முடித்துவிட்டால் அது திருப்தியைத் தரும். ஒவ்வொரு மாதமும் என்னுடைய வேலை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாறும். அதாவது “செயலிலிருக்கிறது” லிருந்து “முடிக்கப்பட்டது” என மாறும். “முடிக்கப்பட்டது” என்ற பொத்தானை அமுக்குவது எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால், சென்ற மாதம் நான் அந்த பொத்தானை அமுக்கிய போது சிந்தனைக்குள்ளானேன். நான் எனது விசுவாச வாழ்விலும் கடினமான இடங்களை இத்தனை இலகுவாக மேற்கொள்ள முடியுமா? கிறிஸ்தவ வாழ்வு எப்பொழுதும் செயலிலேயே இருக்கின்றது, அது ஒருநாளும் “முடிக்கப்பட்டது” என்ற நிலையை அடையாது.
அப்பொழுது நான் எபிரெயர் 10:14ஐ நினைத்துப் பார்த்தேன். கிறிஸ்துவின் தியாகம் எப்படி நம்மை முற்றிலுமாக விடுவிக்கின்றது என்பதை விளக்குகின்றது. ஆனால், ஒரு முக்கியமான செய்தியென்னவெனில் அந்த “முடிக்கப்பட்டது” என்ற பொத்தான் நமக்காக அமுக்கப்பட்டுவிட்டது. நம்மால் செய்ய முடியாத ஒன்றை இயேசுவின் மரணம் நமக்காக நிறைவேற்றிவிட்டது. நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைக்கும் போது, கிறிஸ்து நம்மை தேவனுடைய பார்வையில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களாக மாற்றிவிடுகின்றார். இயேசு “முடிந்தது” என்று சொல்கின்றார் (யோவா. 19:30) அவருடைய தியாகம் முழுமையாக நிறைவேற்றப்பட்டதன் மூலம், நாம் நம்முடைய எஞ்சிய நாட்களை அவருடைய ஆவியின் முழுமையாக்கலால் “பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக” வாழலாம் என எபிரெயரை ஆக்கியோன் குறிப்பிடுகின்றார்.
இயேசு கிறிஸ்து ஒன்றை முடித்தார் என்ற உண்மை நம் வாழ்வில் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை நம்மால் புரிந்து கொள்ள சற்றுக் கடினமாயிருக்கிறது. நாம், நம் ஆவியில் போராடிக் கொண்டிருக்கும் போது இயேசு எனக்காக, உனக்காக தன்னைத் தியாகம் செய்து முடித்துவிட்டார் என்ற செய்தி நம்மை ஊக்குவிப்பதாகவுள்ளது. அவருடைய சாயலை நம் வாழ்வின் மூலம் நாம் காண்பிக்கின்றோம். இது ஒரு செயலிலிருக்கும் வேலை. நாம் அவரைப் போல மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதனை நிறைவேற்றி முடிப்பது அவருடைய கரத்திலுள்ளது. நாம் முற்றிலும் அவரைப் போல மாற்றப்படும் போது, இந்த வேலையை அவர் முடிக்கின்றார்
(2 கொரி. 3:18).
அற்புதமான படைப்பாளர்
பணத்திற்காக அல்ல, என்னுடைய ஆர்வத்தினால், நான் ஒரு போட்டோகிராபர் ஆனேன். நான் தேவனுடைய படைப்பின் காட்சிகளை என்னுடைய கேமராவில் படம் எடுத்து மகிழ்பவன். நான் தேவனுடைய விரல் பதிவுகளை ஒவ்வொரு மென்மையான பூவிதழிலும், வண்ணமயமான சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவிலும், கலர் பூசப்பட்ட மேகங்களிலும், வானமென்ற விரிப்பில் புள்ளியிட்டுள்ள நட்சத்திரங்களிலும் காண்கின்றேன்.
என்னுடைய கேமராவிலுள்ள வலிமையான ஜூம் பண்பினால், தேவனுடைய படைப்பாகிய அனைத்து உயிரினங்களையும் படமெடுக்க முடிகிறது. மலர்கள் நிறைந்த செரி மரங்களில் அணில்களின் தாவலையும், வண்ணத்துப் பூச்சிகள் மலர் விட்டு மலர் நகர்வதையும், பாறைகள் நிறைந்த கரும் கடற்கரையில் ஆமைகளின் சூரிய குளியலையும் நான் படமாக்கினேன். ஓவ்வொரு படமும், அதனைப் படைத்த அற்புதரைப் போற்றத் தூண்டியது.
அவருடைய படைப்பின் தனிச்சிறப்பினை வியந்து, அவரைத் துதிக்கும் மக்களில் நான் முதலானவனல்ல. 104 ஆம் சங்கீதத்தில், தாவீது தேவனுடைய கலைத்திறனை வியந்து பாடியுள்ளார் (வச. 24). “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது. அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” (வச. 25). அவருடைய மிகச்சிறந்த படைப்புகளுக்கு ஏற்ற வேளையில் உணவளித்து, அவற்றை முழுமையாக பராமரிக்கின்றார் (வச. 27-31). தேவன் படைத்த அத்தனை ஜீவன்களையும் தன்னைச் சுற்றியிருக்கக் காணும்போது, சங்கீதக்காரனின் உள்ளம் நன்றியால் நிரம்பி வழிந்து அவரைப் போற்றுகின்றது. “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன். நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்” (வச. 32) என்கின்றார்.
தேவனுடைய மிகப்பெரிய, எண்ணிலடங்காத படைப்புகளை நாம் காணும் போது, அவருடைய படைப்பின் நோக்கத்தையும், அவர் அவற்றை பராமரிக்கும் விதத்தையும் தெரிந்துகொள்ளலாம். சங்கீதக்காரனைப் போன்று நாமும் நம்மை உருவாக்கியவரைப் பாடுவோம். அவருடைய வல்லமை, மாட்சிமை, அன்பினை நினைத்து நன்றியோடு பாடி, அவர் இன்றும் போற்றப்படுபவர், இனிமேலும் போற்றப்படுபவர் எனப்பாடுவோம். அல்லேலூயா.