ஒரு வேலையை முடித்துவிட்டால் அது திருப்தியைத் தரும். ஒவ்வொரு மாதமும் என்னுடைய வேலை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாறும். அதாவது “செயலிலிருக்கிறது” லிருந்து “முடிக்கப்பட்டது” என மாறும். “முடிக்கப்பட்டது” என்ற பொத்தானை அமுக்குவது எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால், சென்ற மாதம் நான் அந்த பொத்தானை அமுக்கிய போது சிந்தனைக்குள்ளானேன். நான் எனது விசுவாச வாழ்விலும் கடினமான இடங்களை இத்தனை இலகுவாக மேற்கொள்ள முடியுமா? கிறிஸ்தவ வாழ்வு எப்பொழுதும் செயலிலேயே இருக்கின்றது, அது ஒருநாளும் “முடிக்கப்பட்டது” என்ற நிலையை அடையாது.

அப்பொழுது நான் எபிரெயர் 10:14ஐ நினைத்துப் பார்த்தேன். கிறிஸ்துவின் தியாகம் எப்படி நம்மை முற்றிலுமாக விடுவிக்கின்றது என்பதை விளக்குகின்றது. ஆனால், ஒரு முக்கியமான செய்தியென்னவெனில் அந்த “முடிக்கப்பட்டது” என்ற பொத்தான் நமக்காக அமுக்கப்பட்டுவிட்டது. நம்மால் செய்ய முடியாத ஒன்றை இயேசுவின் மரணம் நமக்காக நிறைவேற்றிவிட்டது. நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைக்கும் போது, கிறிஸ்து நம்மை தேவனுடைய பார்வையில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களாக மாற்றிவிடுகின்றார். இயேசு “முடிந்தது” என்று சொல்கின்றார் (யோவா. 19:30) அவருடைய தியாகம் முழுமையாக நிறைவேற்றப்பட்டதன் மூலம், நாம் நம்முடைய எஞ்சிய நாட்களை அவருடைய ஆவியின் முழுமையாக்கலால் “பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக” வாழலாம் என எபிரெயரை ஆக்கியோன் குறிப்பிடுகின்றார்.

இயேசு கிறிஸ்து ஒன்றை முடித்தார் என்ற உண்மை நம் வாழ்வில் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை நம்மால் புரிந்து கொள்ள சற்றுக் கடினமாயிருக்கிறது. நாம், நம் ஆவியில் போராடிக் கொண்டிருக்கும் போது இயேசு எனக்காக, உனக்காக தன்னைத் தியாகம் செய்து முடித்துவிட்டார் என்ற செய்தி நம்மை ஊக்குவிப்பதாகவுள்ளது. அவருடைய சாயலை நம் வாழ்வின் மூலம் நாம் காண்பிக்கின்றோம். இது ஒரு செயலிலிருக்கும் வேலை. நாம் அவரைப் போல மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதனை நிறைவேற்றி முடிப்பது அவருடைய கரத்திலுள்ளது. நாம் முற்றிலும் அவரைப் போல மாற்றப்படும் போது, இந்த வேலையை அவர் முடிக்கின்றார்
(2 கொரி. 3:18).