திரும்பி வர முடியாத எல்லை
இது ஒரு நதியைக் கடப்பது போன்று எளிதானதல்ல. சட்டப்படி, எந்த ஒரு ரோம இராணுவ அதிகாரியும் ஓர் ஆயுதமணிந்த படையினரை ரோம சாம்ராஜ்ஜியத்திற்குள் வழி நடத்திச் செல்ல முடியாது. கி.மு. 49ல் ஜூலியஸ் சீசர் அவருடைய பதின்மூன்றாம் இராணுவப்படையை ரூபிக்கான் நதியைத் தாண்டி இத்தாலிக்குள் வழி நடத்தினார். இது ஒரு தேச துரோகச் செயல். சீசரின் அந்த முடிவின் விளைவு மாற்ற முடியாததொன்றாகி விட்டது. இதன் விளைவாக பல ஆண்டுகள் உள்நாட்டு யுத்தம் நடந்தது. பின் ரோம இராணுவ பிரதான அதிகாரி சக்ரவர்த்தியானார். இன்று வரை ‘‘ரூபிக்கானை கடத்தல்” என்ற சொற்றொடர் மீண்டும் திரும்பி வர முடியாத எல்லையைக் குறிப்பிட பயன்படும் ஓர் உருவகமாயுள்ளது.
சில வேளைகளில் நாம் பிறரிடம் பேசும் சில வார்த்தைகளால் நம் உறவின் ரூபிக்கானைத் தாண்டி விடுகிறோம். பேசிய வார்த்தைகள் மீண்டும் வாங்கிக் கொள்ள முடியாதவை. அந்த வார்த்தைகள் நம் உதட்டிலிருந்து வெளி வந்ததும் ஓர் உதவியைச் செய்யலாம். ஆறுதலைக் கொடுக்கலாம் அல்லது சீசர் ரோம சாம்ராஜ்ஜியத்திற்குள் படையுடன் சென்றதைப் போன்று மாற்ற முடியாத பாதிப்பை ஏற்படுத்தலாம். யாக்கோபு வார்த்தைகளைக் குறித்து மற்றொரு விளக்கத்தைத் தருகின்றார். ‘‘நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைபடுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்தி விடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது (யாக். 3:6).
நாம் யாரிடமாகிலும் ரூபிக்கான் எல்லையைத் தாண்டி விட்டோம் என நினைப்போமேயாகில் அவர்களுடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தேவனிடமும் மன்னிப்பைப்
பெற்றுக்கொள்ள வேண்டும். (மத். 5;:23-24 ; 1 யோவான் 1:9). இதையும் விட சிறந்ததென்னவெனின் தேவனுடைய ஆவியானவரைச் சார்ந்து வாழ்தல். பவுலின் சவால்களைக் கேட்போமாகில், ‘‘அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவுசொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” (கொலோ. 4:6) நம்முடைய வார்த்தைகள் தேவனைக் கனப்படுத்துவதாகவும் மற்றவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதாயும் அமைய வேண்டும்.
தேவனுடைய வழி நடத்தலுக்கு நம்முடைய பதில்
2015 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதத்தில் என்னுடைய வீட்டிலிருந்து இரண்டு மணி நேர பயணத் தொலைவிலுள்ள ஒரு பல்கலைகழகத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன். என்னுடைய பட்டமளிப்பு முடிந்து மீண்டும் நான் வீட்டிற்கு வர இயலாததென உணர்ந்தேன். என் சிந்தனைகள் வட்டமிட்டன. எப்படி வீட்டை விட்டுச் செல்வது? என்னுடைய குடும்பம்? என்னுடைய தேவாலயம்? ஒரு வேளை தேவன் என்னை வேறொரு மாநிலம் அல்லது தேசத்திற்கு அழைத்தால் என்னவாகும்? என என் சிந்தனையில் ஓடியது.
மோசேயிடம் தேவன் ‘‘நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா” என்று சொன்னபோது மோசே பயந்தான் (யாத். 3:10). நானும் மிகவும் பயந்தேன். நான் என்னுடைய வசதி எல்லையை விட்டுச் செல்ல விரும்பவில்லை. ஆனால் மோசே கீழ்ப்படிந்து தேவனைப் பின்பற்றினான். ஆனாலும் அதற்கு முன் தேவனை வினாவவும், வேறொருவரை தனக்குப் பதிலாக அனுப்பும்படியும் கேட்டபின் தான், தேவனுக்குக் கீழ்ப்படிந்தான் (வச. 11-13; 4:13).
மோசேயின் எடுத்துக்காட்டிலிருந்து, நமக்கொரு தெளிவான அழைப்பு இருக்கும் பொழுது நாம் எதைச் செய்யக் கூடாதென்பதைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் நாம் சீடர்களைப் போல இருக்க முயற்சிப்போம். இயேசு அவர்களை அழைத்த போது, அவர்கள் யாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள் (மத். 4:20-22; லூக். 5:28). பயம் வருவது இயல்புதான். ஆனால் தேவத் திட்டத்தை நம்பலாம்.
வீட்டை விட்டு அதிகத் தொலைவில் செல்வதென்பது கடினமாகத்தானிருந்தது. ஆனால் நான் தொடர்ந்து தேவனைத் தேட ஆரம்பித்தபோது, அவர் எனக்கு கதவுகளைத் திறந்தார். அது, நான் தேவன் குறித்த இடத்தில்தான் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தியது.
வசதி எல்லையிலிருந்து நம்மை வெளியேற்றி, வழி நடத்தப்படும்போது நாம் மோசேயைப் போன்று தயக்கத்தோடு செல்லலாம் அல்லது சீடர்களைப் போன்று மனப்பூர்வமாகச் செல்லலாம். சில வேளைகளில் நம்முடைய வசதி வாழ்க்கையை விட்டு சில நூறு மைல்கள் அல்லது ஆயிரம் மைல்கள் கூட செல்ல நேரலாம். அது எத்தனை கடினமானதாயினும் தேவனைப் பின்பற்றுவது மதிப்பு மிக்கது.
தேவனின் கைரேகை
லீகன் ஸ்டீவன்ஸ் தன்னுடைய சகோதரன் நிக்கோடு சேர்ந்து மலையேறுவதில் ஆர்வமுள்ளவள். அவர்கள் இருவரும் மலையேறுவதில் அனுபவமிக்கவர்கள். வட அமெரிக்காவிலுள்ள மிக்கின்லெ என்ற மிக உயரமான மலையுச்சியை அடைந்தவர்கள். ஜனவரி 2008ல் கொலொரடோ மலையில் ஏற்பட்ட ஒரு பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் நிக் காயமடைந்தான், இருபது வயது நிரம்பிய லீகன் மரித்துப் போனாள். பின் நாட்களில் நிக், தன் சகோதரி லீகனின் பையொன்றிலிருந்து பயணக் குறிப்பொன்றைக் கண்டெடுத்தான். அதின் உள்ளடக்கத்தை வாசித்தபோது அவன் மிகவும் ஆறுதலையடைந்தான். அது முழுவதும் தியானங்கள், ஜெபங்கள், தேவனை மகிமைப்படுத்தல் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. அதில் ‘‘நான் தேவனுடைய கரத்தால் செய்யப்பட்ட ஒரு கலை. ஆனால் தேவன் அதை இன்னமும் முடிக்கவில்லை. இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கின்றார்.... நான் என்மீது தேவனின் விரல் ரேகைகளைப் பதியப் பெற்றிருக்கிறேன். என்னைப் போல மற்றொருவர் ஒருபோதும் இருக்க முடியாது... என்னுடைய இந்த வாழ்வில் எனக்கொரு வேலையுள்ளது. அதனை வேறொருவர் நிறைவேற்ற முடியாது” என எழுதியிருந்தார்.
லீகன் இந்த உலகில் உடல் ரீதியாக இல்லையெனினும் அவள் விட்டுச் சென்ற பாரம்பரியம், அவளுடைய பயணக் குறிப்புகள் மற்றும் சவால்கள் யாவும் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன.
நாம் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்டுள்ளோம். (ஆதி. 1:26) ஒவ்வொருவரும் ‘‘தேவனுடைய கரத்தினால் செய்யப்பட்ட கலை”. பவுல் அப்போஸ்தலன் கூறுவது போல. ‘‘நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (எபே. 2:10).
தேவன் நம்மை அவர் குறித்த நேரத்தில் அவருடைய சொந்த வழியில் பிறருக்கு உதவும்படி பயன்படுத்துகின்றார். எனவே நாம் அவரை மகிமைப்படுத்துவோம்.
வாக்குத்தத்தங்களில் உறுதியாய் நிற்றல்
என்னுடைய சிநேகிதியின் சகோதரன் அவளிடம் (அவர்கள் இருவரும் குழந்தைகளாயிருந்த போது) ஒரு குடையினால் அவளைத் தாங்க முடியும் எனவும், அவள் நம்பினால் செய்து பார்க்கலாம் எனவும் உறுதியளித்தான். அவளும் நம்பிக்கையோடு ஒரு கிடங்கின் கூரையிலிருந்து குடையைப் பிடித்து கொண்டு குதித்து, கீழே தரையில் மோதி சிறிய தலைக் காயத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.
தேவன் நமக்கு வாக்களித்ததை நிறைவேற்றுவார். ஆனால் நாம் ஒரு வாக்குத்தத்தத்தை தேவன் நிறைவேற்றும்படி கேட்கும்போது, நாம் தேவனுடைய உண்மையான வார்த்தையில்தான் நிற்கின்றோமா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தேவன் வாக்களித்ததைத் தருவார் என்ற உறுதியைப் பெற முடியும். நம்பிக்கை மட்டும் தனித்திருந்தால் வல்லமையற்றது. ஆனால் அது தேவனுடைய தெளிவான உறுதியான வாக்கின் மீது நிற்கும்போது மட்டுமே அதைச் செயல்படுத்த முடியும்.
இங்கே ஒரு நிகழ்வைப் பார்ப்போம். ‘‘நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார்” (யோவா. 15:7-8). இவை, தேவன் நாம் உச்சரிக்கும் எந்த ஜெபத்திற்கும் பதிலளிப்பார் என்பதாகக் கூறும் வார்த்தைகளல்ல. மாறாக, பவுல் அப்போஸ்தலன் ‘‘ஆவியின் கனிகள்” (கலா. 5:22-23) என்று குறிப்பிடும் கனிகளை நம் வாழ்வில் தந்து நீதியாய் வாழ நாம் கொண்டுள்ள ஏக்கங்களை அவர் நிறைவேற்றுவார் எனக் கூறும் ஒரு வாக்குத்தத்தமாகும். நாம் பரிசுத்தப்படும்படி தாகத்தோடும், பசியோடும் தேவனிடம் கேட்கும்போது, தேவன் அதனை நிறைவேற்றத் தொடங்குவார். இந்த பரிசுத்தமாகுதல் ஒரு நாளில் நடைபெறும் காரியமல்ல. அதற்கு நேரமதிகமாகும். நம் உடல் வளர்ச்சியைப் போன்று ஆவியின் வளர்ச்சியும் படிப்படியாகத்தான் நடைபெறும். எனவே சோர்ந்துபோக வேண்டாம். தேவன் உன்னைப் பரிசுத்தப்படுத்தும்படி தொடர்ந்து கேள். அவருடைய வேளையில் அவருக்கு சித்தமான இடத்தில் அது உனக்காக நிறைவேற்றப்படும். தேவன் நிறைவேற்றாத காரியங்களை நமக்கு வாக்களிப்பதில்லை.