என்னுடைய மகளை பள்ளியில் விட்டுவிட்டு நீண்ட தூரம் நடந்து என் வீட்டிற்கு வரும் நேரத்தை, வேதாகமத்திலிருந்து சில வசனங்களை மனப்பாடம் செய்து கொள்ளப் பயன்படுத்திக் கொண்டேன். அந்தச் சில நிமிடங்களை தேவனுடைய வார்த்தைகளை என் மனதில் நினைத்துப் பார்க்க பயன்படுத்திக் கொள்ளும்போது அந்த வசனங்கள் என் மனதிற்குள் மீண்டும் இரவு நேரங்களில் வருவதுண்டு. அவை எனக்கு மிகுந்த ஆறுதலையும், ஞானத்தையும் தருவதாக அமைந்தன.

வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் பிரவேசிக்குமுன், மோசே அவர்களை ஆயத்தப்படுத்துகின்றார். அவர்கள் தேவனுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் பற்றிக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றார் (உபா. 6:1-2) அவர்கள் செழித்திருக்கும்படி இந்த வார்த்தைகள் அவர்களுடைய இருதயத்தில் இருக்க வேண்டும். அவைகளைக் குறித்து அவர்களின் பிள்ளைகளோடும் பேசி (வச. 6-7) போதிக்க வேண்டும். அவைகளை கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாகவும் வைக்க வேண்டும். (வச. 8) அவர்கள் தேவனுடைய போதனைகளை மறக்காமல் அதன்படி வாழ்ந்து தேவனை கனம் பண்ணி அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும்படி கூறுகின்றார்.

நீ இன்று தேவனுடைய வார்த்தைகளை எவ்வாறு வைத்திருக்கின்றாய்? ஒரு யோசனை என்னவெனில், வேதத்திலிருந்து ஒரு வசனத்தை எழுதி வைத்துக் கொண்டு, ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவும்போதும் அல்லது உணவருந்தும் போதும் அந்த வசனத்தை வாசித்து அதை உன் மனதிற்குள் பதித்து வை. அல்லது படுக்கைக்குச் செல்லுமுன் வேதாகமத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை படிப்பதை அந்த நாளின் கடைசி செயலாக வைத்துக் கொள். இவ்வாறு வேத வசனங்களை நம் இருதயத்தில் வைத்துக்கொள்ள அநேக வழிகளுள்ளன.