என்னுடைய சிநேகிதியின் சகோதரன் அவளிடம் (அவர்கள் இருவரும் குழந்தைகளாயிருந்த போது) ஒரு குடையினால் அவளைத் தாங்க முடியும் எனவும், அவள் நம்பினால் செய்து பார்க்கலாம் எனவும் உறுதியளித்தான். அவளும் நம்பிக்கையோடு ஒரு கிடங்கின் கூரையிலிருந்து குடையைப் பிடித்து கொண்டு குதித்து, கீழே தரையில் மோதி சிறிய தலைக் காயத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.

தேவன் நமக்கு வாக்களித்ததை நிறைவேற்றுவார். ஆனால் நாம் ஒரு வாக்குத்தத்தத்தை தேவன் நிறைவேற்றும்படி கேட்கும்போது, நாம் தேவனுடைய உண்மையான வார்த்தையில்தான் நிற்கின்றோமா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தேவன் வாக்களித்ததைத் தருவார் என்ற உறுதியைப் பெற முடியும். நம்பிக்கை மட்டும் தனித்திருந்தால் வல்லமையற்றது. ஆனால் அது தேவனுடைய தெளிவான உறுதியான வாக்கின் மீது நிற்கும்போது மட்டுமே அதைச் செயல்படுத்த முடியும்.

இங்கே ஒரு நிகழ்வைப் பார்ப்போம். ‘‘நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார்” (யோவா. 15:7-8). இவை, தேவன் நாம் உச்சரிக்கும் எந்த ஜெபத்திற்கும் பதிலளிப்பார் என்பதாகக் கூறும் வார்த்தைகளல்ல.  மாறாக, பவுல் அப்போஸ்தலன் ‘‘ஆவியின் கனிகள்” (கலா. 5:22-23) என்று குறிப்பிடும் கனிகளை நம் வாழ்வில் தந்து நீதியாய் வாழ நாம் கொண்டுள்ள ஏக்கங்களை அவர் நிறைவேற்றுவார் எனக் கூறும் ஒரு வாக்குத்தத்தமாகும். நாம் பரிசுத்தப்படும்படி தாகத்தோடும், பசியோடும் தேவனிடம் கேட்கும்போது, தேவன் அதனை நிறைவேற்றத் தொடங்குவார். இந்த பரிசுத்தமாகுதல் ஒரு நாளில் நடைபெறும் காரியமல்ல. அதற்கு நேரமதிகமாகும். நம் உடல் வளர்ச்சியைப் போன்று ஆவியின் வளர்ச்சியும் படிப்படியாகத்தான் நடைபெறும். எனவே சோர்ந்துபோக வேண்டாம். தேவன் உன்னைப் பரிசுத்தப்படுத்தும்படி தொடர்ந்து கேள். அவருடைய வேளையில் அவருக்கு சித்தமான இடத்தில் அது உனக்காக நிறைவேற்றப்படும். தேவன் நிறைவேற்றாத காரியங்களை நமக்கு வாக்களிப்பதில்லை.