லீகன் ஸ்டீவன்ஸ் தன்னுடைய சகோதரன் நிக்கோடு சேர்ந்து மலையேறுவதில் ஆர்வமுள்ளவள். அவர்கள் இருவரும் மலையேறுவதில் அனுபவமிக்கவர்கள். வட அமெரிக்காவிலுள்ள மிக்கின்லெ என்ற மிக உயரமான மலையுச்சியை அடைந்தவர்கள். ஜனவரி 2008ல் கொலொரடோ மலையில் ஏற்பட்ட ஒரு பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் நிக் காயமடைந்தான், இருபது வயது நிரம்பிய லீகன் மரித்துப் போனாள். பின் நாட்களில் நிக், தன் சகோதரி லீகனின் பையொன்றிலிருந்து பயணக் குறிப்பொன்றைக் கண்டெடுத்தான். அதின் உள்ளடக்கத்தை வாசித்தபோது அவன் மிகவும் ஆறுதலையடைந்தான். அது முழுவதும் தியானங்கள், ஜெபங்கள், தேவனை மகிமைப்படுத்தல் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. அதில் ‘‘நான் தேவனுடைய கரத்தால் செய்யப்பட்ட ஒரு கலை. ஆனால் தேவன் அதை இன்னமும் முடிக்கவில்லை. இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கின்றார்…. நான் என்மீது தேவனின் விரல் ரேகைகளைப் பதியப் பெற்றிருக்கிறேன்.  என்னைப் போல மற்றொருவர் ஒருபோதும் இருக்க முடியாது… என்னுடைய இந்த வாழ்வில் எனக்கொரு வேலையுள்ளது. அதனை வேறொருவர் நிறைவேற்ற முடியாது” என எழுதியிருந்தார்.

லீகன் இந்த உலகில் உடல் ரீதியாக இல்லையெனினும் அவள் விட்டுச் சென்ற பாரம்பரியம், அவளுடைய பயணக் குறிப்புகள் மற்றும் சவால்கள் யாவும் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன.

நாம் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்டுள்ளோம். (ஆதி. 1:26) ஒவ்வொருவரும் ‘‘தேவனுடைய கரத்தினால் செய்யப்பட்ட கலை”. பவுல் அப்போஸ்தலன் கூறுவது போல. ‘‘நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (எபே. 2:10).

தேவன் நம்மை அவர் குறித்த நேரத்தில் அவருடைய சொந்த வழியில் பிறருக்கு உதவும்படி பயன்படுத்துகின்றார். எனவே நாம் அவரை மகிமைப்படுத்துவோம்.