நிரம்பி வழிதல்
‘‘இல்லை! இல்லை! இல்லை!” நான் கத்தினேன். அது ஒன்றும் உதவவில்லை. சிறிதளவும் உதவவில்லை. தண்ணீரை அடைப்பதற்கு நான் எடுத்த புத்திசாலித்தனமான தீர்வு வேலை செய்யவில்லை. நான் என்ன நினைத்தேனோ அதற்கு நேர் மாறாகவே நடந்தது. நான் அந்த கைப்பிடியை கீழே தள்ளிய போதே என் தவறைத் தெரிந்து கொண்டேன். தண்ணீர் நிரம்பி வழிய நான் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றேன்.
எத்தனை நேரம் நம் குழந்தைகள் பாலை ஊற்றும்போது தவறுதலாக எல்லா இடங்களிலும் பாலைக் கொட்டியிருக்கின்றனர். எத்தனை முறை இரண்டு லிட்டர் சோடா பாட்டில் பெட்டிக்குள் சுழன்று வெடித்து விபரீத விளைவுகளை ஏற்படத்தியிருக்கின்றது.
திரவங்களைக் கொட்டுதல் நல்ல காரியமல்ல. ஆனால் இதிலும் ஒரு விதிவிலக்கு உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு நிரம்பி வழியும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும்படி சொல்கின்றார் (ரோம. 15:13). நாம் எப்பொழுதும் மகிழ்ச்சி, சமாதானம், மற்றும் நம்பிக்கையினால் நிரம்பி வழியும்படி நிரப்பப்பட விரும்புவோம். பரலோகத் தந்தையின் மீதுள்ள நம்பிக்கையாலும், ஞானத்தாலும் மிக அதிகமாக நிரப்பப்பட்டு நிரம்பி வழியும்படிச் செய்வோம். அதனை தேவன் நம் வாழ்வின் வெளிச்சமான அழகிய காலங்களில் அப்படிச் செய்வார். நம் வாழ்க்கையாகிய கோப்பை சிறிய அசைவிற்கும் நிரம்பி வழியும். எப்படியாயினும் நம் வாழ்வில் மேலோங்கி நிற்கும் நம்பிக்கை நிரம்பி வழிந்து நம்மைச் சுற்றியுள்ளவர்களை நனைக்கும்படி இருக்கட்டும்.
தேவனின் நன்மைகளுக்காகத் துதியுங்கள்
எங்களது வேத ஆராய்ச்சி குழுவிலுள்ள ஒருவர் ‘‘நாம் நம்முடைய சொந்த சங்கீதத்தை எழுதலாமே!” என்று கூறினார். ஆனால் எல்லாருக்கும் எழுதும் திறமையில்லையே என சிலர் எதிர்த்தனர். ஆனாலும் அவர்களுக்கு ஊக்கத்தையளிக்க அவர்களும் எழுதுவதற்கு இசைந்தனர். ஒவ்வொருவரும் தேவன் அவரவர் வாழ்வில் செய்த செயல்களை விவரித்துப் பாடலொன்றினை எழுதினோம். சோதனைகள், பாதுகாப்பு, அன்றன்று தேவைகளைப் பெறல், வேதனைகள், கண்ணீர் ஆகியவற்றிலிருந்து வேதனைகளைத் தாங்கிய செய்திகள் வந்து எங்கள் சங்கீதங்களாயின. சங்கீதம் 136 போன்று, ஒவ்வொரு சங்கீதமும் தேவனுடைய அன்பு என்றும் நிலைத்திருக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்தின.
நம் அனைவருக்குமே தேவனுடைய அன்பினை விளக்கக்கூடிய அனுபவங்கள் உண்டு. அவற்றை நாமும் எழுதவோ, பாடவோ அல்லது சொல்லவோ முடியும். சிலருக்கு அவர்களின் அனுபவம் ஒரு நாடகம் போன்றதாகவோ அல்லது சங்கீதம் 136ல் கூறியுள்ளபடி தேவன் தம்முடைய பிள்ளைகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததையும், தங்கள் பகைவர்களை மேற்கொண்டதையும் நினைத்துப் பார்ப்பதைப் போன்றிருக்கும் (வச. 10-15) மற்றவை தேவனுடைய மகத்துவமான படைப்புகளை விளக்குகின்றன. வானங்களை அவருடைய ஞானத்தினால் உண்டாக்கினார்... தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினார்... பெரிய சுடர்களை உண்டாக்கினார். பகலில் ஆளச் சூரியனைப் படைத்தார்.... இரவில் ஆளச் சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார் (வச. 5-9).
தேவன் யாரெனவும், அவர் என்னென்ன படைத்தார் என்பதையும் நினைக்கும் போது நாம் அவரைத் துதிக்கவும், அவருக்கு நன்றி செலுத்தவும் அவரை மகிமைப்படுத்தவும் ஆரம்பிப்போம். நாம் ‘‘ஒவ்வொருவரும் சங்கீதங்களாலும், கீர்த்தனைகளாலும், ஆவியில் வெளிப்படும்
ஞானப்பாட்டுகளினாலும்” (எபே. 5:19) தேவன் செய்த நன்மைகளையும் என்றும் நிலைத்திருக்கும் அவருடைய அன்பினையும் எண்ணி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். தேவனுடைய அன்பினைக் குறித்த உன்னுடைய அனுபவத்தை, அவரைப் போற்றிப் பாடும் சங்கீதங்களாக மாற்றி, என்றும் நிலைத்திருக்கும் அவருடைய நன்மைகளை எண்ணி மகிழ்ந்திரு.
விடுதலையோடு பின்பற்றல்
நான் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற போது, விளையாட்டுத் துறையிலுள்ள ஒரு பயிற்சியாளர் நாங்கள் ஓட்டப்பந்தயத்திற்குச் செல்வதற்கு முன்பு ஓர் அறிவுரையைக் கூறினார். எப்பொழுதும் “முதலாக ஓட முயற்சிக்காதே. முன்னிருப்பவர்கள் எளிதில் ஆற்றலை இழந்து விடுவர்” அதற்குப் பதிலாக மிக வேகமாக ஓடும் நபருக்குப் பின்னாக மிக அருகில் ஓட வேண்டும். அவர்கள் தாங்கள் ஓடும் வேகத்தை நிதானித்துக் கொண்ட போது, நான் என்னுடைய மன, உடல் ரீதியாக முழு பெலத்தையும் சேமித்துக் கொண்டு ஓடினால் வெற்றியாக முடிக்க உதவியாயிருக்கும்.
வழி நடத்துதல் என்பது மிகவும் சோர்வடையச் செய்யும் செயல். ஆனால் பின்பற்றிச் செல்லல் என்பது எளிதாக இருக்கும். இதனைப் புரிந்து கொண்டதும் என்னுடைய ஓட்டத்தில் முன்னேற்றம் இருந்தது. இதனை கிறிஸ்தவ சீடத்துவத்திலும் பயன்படுத்தலாம் என்பதைப் பல நாட்களுக்குப் பின் உணர்ந்தேன். இயேசுவின் மீது நம்பிக்கையாயிருப்பது என்பது மிகவும் கடினமானது என நினைக்கும்படித் தூண்டப்பட்டேன். ஒரு கிறிஸ்தவன் எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய சொந்த எதிர்பார்ப்புகளை நான் அடைய முயற்சித்தபோது, எளிதாக இயேசுவைப் பின்பற்றிச் செல்வதால் கிடைக்கும் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் இழந்துவிட்டேன் (யோவா. 8:32, 36).
நம்முடைய வாழ்வை நடத்த நாமே தீர்மானிக்கும் போது தேவன் நாம் உயரக் கூடிய ஒரு திட்டத்தைத் துவக்குவதில்லை. ஆனால் நாம் தேவனைத் தேடும் போது நாம் தேடுகின்ற இளைப்பாறுதலை அவர் தருகின்றார் (மத். 11:25-28) அநேக மதப்போதகர்கள் கடுமையான வேத ஆராய்ச்சியையும், விளக்கமான சட்ட திட்டங்களையும் வலியுறுத்துவது போலில்லாமல், இயேசுவின் போதனைகள் மிக எளிதானவை. இயேசுவை தெரிந்து கொண்டால், பிதாவை அறிந்து கொள்ளலாம் (வச. 27) நாம் அவரைத் தேடினால் பாரமான சுமைகளை அவர் தூக்கிக் கொள்கின்றார் (வச. 28-30). நமது வாழ்வும் மாற்றமடையும்.
சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ள நம் இயேசுவைப் பின்பற்றினால் (வச. 29) அது நமக்கு சுமையாக இருப்பதில்லை. அதுவே நம்பிக்கையின் வழியும் சுகவாழ்வுமாகும். அவருடைய அன்பில் நாம் இளைப்பாறும் போது நாம் எத்தனை பெரிய விடுதலையை உணர்கின்றோம்.
தேவன் கிரியை செய்கின்றார்
‘‘சமீபத்தில் தேவன் உன்னில் கிரியை செய்ததை எப்படி கண்டு கொண்டாய்?” என்ற கேள்வியைச் சில நண்பர்களிடம் கேட்டேன். ஒரு நண்பன் பதிலளித்தான், ஒவ்வொரு நாள் காலையும் வேதத்தை வாசிக்கும்போது தேவன் கிரியை செய்வதைக் காண்கின்றேன்; ஒவ்வொரு புதிய நாளையும் நான் எதிர் நோக்க எனக்கு உதவி செய்வதில் காண்கின்றேன்; நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவர் என்னோடிருக்கிறார் என்று நான் காண்கின்றேன்; நான் சவால்களைச் சந்திக்க அவர் எனக்கு உதவி செய்து மகிழ்ச்சியைத் தருகின்றார். எனக் கூறினான். அவனுடைய பதில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தேவனிடத்தில் அன்புகூருகின்றவர்களிடத்தில் தேவனுடைய வார்த்தைகளும் நமக்குள்ளே வாசம்பண்ணும் பரிசுத்த ஆவியானவரும் நம்மோடிருந்து நம்மில் கிரியை செய்கின்றார்.
தேவனைப் பின்பற்றுகிறவர்களுக்குள்ளே தேவனுடைய கிரியை அற்புதமாயிருக்கிறது. எபிரெயரை எழுதியவர் தன்னுடைய கடிதத்தின் முடிவில் ஆசீர்வாதம் கூறும் போது ‘‘இயேசு
கிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து... (எபி. 13:21) என முடிக்கின்றார். இந்த முடிவுரையில் எழுத்தாளர் தன்னுடைய கடிதத்தின் முக்கிய கருத்தினை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றார். தேவன் நம்மைப் பின்பற்றுகின்ற தன்னுடைய ஜனங்களை பெலப்படுத்தி, தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக அவர்களில், அவர்கள் மூலமாகச் செயல்படுகின்றார்.
தேவன் நம்மில் கிரியை செய்கின்ற ஈவானது நம்மை அதிசயிக்கச் செய்கின்றது. நமக்கு விரோதமாகச் செயல்பட்ட ஒருவரை மன்னிக்கவும் கடினமான சிலரிடம் பொறுமையாயிருக்கவும் நம்மில் செயல்படுகின்றார். ‘‘சமாதானத்தின் தேவன்” (வச. 20) அவருடைய அன்பையும், சமாதானத்தையும் நம்மூலம் பெருகப்பண்ணுகிறார். சமீபத்தில் தேவன் உன்னில் எப்படி கிரியை செய்தார்?
தோன்றுவது போல் அல்ல
தொலைபேசியில் என்னுடைய மனைவி ‘‘கவனியுங்கள், இங்கு நமது பண்ணையில் ஒரு குரங்கு இருக்கிறது” என்றாள். அவள் தொலைபேசியைக் கையில் வைத்திருக்கும் போதே அதன் உறுமலை என்னால் கேட்க முடிந்தது. அது குரங்கின் சத்தம் தான். இது சாதாரணமாக நடக்கக்கூடியதல்ல. ஏனெனில் காட்டுக்குரங்குகள் நாங்களிருக்கும் இடத்திலிருந்து 2000 மைல்களுக்கப்பால் தான் உள்ளன.
பின்னர் என்னுடைய மாமனார் அதன் உண்மையை வெளிப்படுத்தினார். அது ஒரு கூண்டிலடைக்கப்பட்ட ஆந்தையின் குரல். குரங்கின் ஒலியைப் போன்ற தோற்றம். ஆனால் உண்மையல்ல.
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் அரசாட்சியின் போது, அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பின் படைகள் எருசலேமின் அரண்களைச் சுற்றி முற்றிகையிட்டன. அசீரியர்கள் வெற்றி அவர்களுக்கேயென எண்ணினர். ஆனால் உண்மையில் வேறு விதமாய் நடந்தது. அசீரியர்களின் சேனைத் தலைவன் நயமான வார்த்தைகளைப் பேசி, தான் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுவதைப் போல நடித்தான். ஆனால் தேவனுடைய கரம் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாத்தது.
‘‘இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்க வந்தேனோ?” என அசீரியரின் சேனைத் தலைவன் கேட்கின்றான் (2 இரா. 18:25). அவன் எருசலேமின் ஜனங்களை அடிபணியுமாறு, அவர்களை சம்மதிக்கச் செய்ய முயற்சிக்கின்றான். மேலும் அவன் ‘‘நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்” (வ.32) எனவும் கூறுகின்றான்.
இது ஒருவேளை தேவன் கூறுவது போன்று அவர்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களிடம் தேவனுடைய உண்மையான வார்த்தைகளைச் சொல்கின்றார். அவன் (சனகெரிப்) இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின் மேல் அம்பு எய்வதுமில்லை; மேலும், ‘‘நான் இந்த நகரத்தை இரட்சிக்கும் படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன்” (19:32-34, 37:35) என்ற கர்த்தருடைய வார்த்தைகளை ஏசாயா சொன்னார். அன்று இராத்திரியில் ‘‘கர்த்தருடைய தூதன் அசீரியர்களைச் சங்கரித்தான் (வச. 35).
தேவனுடைய வல்லமையை மறுத்து நமக்கு நல்ல நளினமான போதனைகளைத் தருகின்ற மக்களை நாம் நாளுக்கு நாள் சந்திக்கின்றோம். அது தேவனுடைய வார்த்தையல்ல. தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் நம்மிடம் பேசுவார். தேவன் நம்மை அவருடைய ஆவியினால் வழி நடத்துவார் அவரைப் பின்பற்றுபவர்கள் மீது அவருடைய கரம் இருக்கும். அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.