எங்களது வேத ஆராய்ச்சி குழுவிலுள்ள ஒருவர் ‘‘நாம் நம்முடைய சொந்த சங்கீதத்தை எழுதலாமே!” என்று கூறினார். ஆனால் எல்லாருக்கும் எழுதும் திறமையில்லையே என சிலர் எதிர்த்தனர். ஆனாலும் அவர்களுக்கு ஊக்கத்தையளிக்க அவர்களும் எழுதுவதற்கு இசைந்தனர். ஒவ்வொருவரும் தேவன் அவரவர் வாழ்வில் செய்த செயல்களை விவரித்துப் பாடலொன்றினை எழுதினோம். சோதனைகள், பாதுகாப்பு, அன்றன்று தேவைகளைப் பெறல், வேதனைகள், கண்ணீர் ஆகியவற்றிலிருந்து வேதனைகளைத் தாங்கிய செய்திகள் வந்து எங்கள் சங்கீதங்களாயின. சங்கீதம் 136 போன்று, ஒவ்வொரு சங்கீதமும் தேவனுடைய அன்பு என்றும் நிலைத்திருக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்தின.

நம் அனைவருக்குமே தேவனுடைய அன்பினை விளக்கக்கூடிய அனுபவங்கள் உண்டு. அவற்றை நாமும் எழுதவோ, பாடவோ அல்லது சொல்லவோ முடியும். சிலருக்கு அவர்களின் அனுபவம் ஒரு நாடகம் போன்றதாகவோ அல்லது சங்கீதம் 136ல் கூறியுள்ளபடி தேவன் தம்முடைய பிள்ளைகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததையும், தங்கள் பகைவர்களை மேற்கொண்டதையும் நினைத்துப் பார்ப்பதைப் போன்றிருக்கும் (வச. 10-15) மற்றவை தேவனுடைய மகத்துவமான படைப்புகளை விளக்குகின்றன. வானங்களை அவருடைய ஞானத்தினால் உண்டாக்கினார்… தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினார்… பெரிய சுடர்களை உண்டாக்கினார். பகலில் ஆளச் சூரியனைப் படைத்தார்…. இரவில் ஆளச் சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார் (வச. 5-9).

தேவன் யாரெனவும், அவர் என்னென்ன படைத்தார் என்பதையும் நினைக்கும் போது நாம் அவரைத் துதிக்கவும், அவருக்கு நன்றி செலுத்தவும் அவரை மகிமைப்படுத்தவும் ஆரம்பிப்போம். நாம் ‘‘ஒவ்வொருவரும் சங்கீதங்களாலும், கீர்த்தனைகளாலும், ஆவியில் வெளிப்படும்
ஞானப்பாட்டுகளினாலும்” (எபே. 5:19) தேவன் செய்த நன்மைகளையும் என்றும் நிலைத்திருக்கும் அவருடைய அன்பினையும் எண்ணி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். தேவனுடைய அன்பினைக் குறித்த உன்னுடைய அனுபவத்தை, அவரைப் போற்றிப் பாடும் சங்கீதங்களாக மாற்றி, என்றும் நிலைத்திருக்கும் அவருடைய நன்மைகளை எண்ணி மகிழ்ந்திரு.