“ஜெபமாகிய வரத்தைப் பயன்படுத்தல்”
‘‘ஜெபமாகிய வரம் எத்தகையது என்று உணராதிருந்தேன். என்னுடைய சகோதரன் சுகவீனமான போது நீங்களெல்லாரும் அவனுக்காக ஜெபித்தீர்கள். உங்களுடைய ஜெபங்கள் சொல்ல முடியாத அளவு ஆறுதலைத் தந்தது”.
புற்றுநோயால் அவதியுறும் தன்னுடைய சகோதரனுக்காக, எங்கள் ஆலயத்தின் நபர்கள் ஜெபித்ததற்காக லாரா நன்றி கூறியபோது, அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மேலும், ‘‘உங்களுடைய ஜெபம் இந்த கடினமான சூழல்களில் அவனை
பெலப்படுத்தினதோடல்லாமல், எங்கள் குடும்பத்தினரனைவரையும் ஊக்கப்படுத்துவதாக இருந்தது” என்றும் கூறினாள்.
பிறரை நேசிக்க சிறந்த வழி அவர்களுக்காக ஜெபிப்பதே. இதற்கு முழு எடுத்துக்காட்டாக இயேசு செயல்பட்டார். புதிய ஏற்பாட்டில் இயேசு பிறருக்காக ஜெபிப்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். மேலும், அவர் நமக்காகப் பிதாவிடம் தொடர்ந்து வருவதையும் பார்க்கின்றோம். ரோமர் 8:34ல் ‘‘அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர். நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” என சொல்லப்பட்டுள்ளது. சிலுவையில் தன்னலமற்ற ஓர் அன்பை நமக்காக வெளிப்படுத்தின பின்பு உயிரோடெழுந்து, பரலோகத்திற்கு ஏறின இயேசு கிறிஸ்து இன்னமும், இந்த நேரத்திலும் தொடர்ந்து நமக்காக ஜெபம் பண்ணிக் கொண்டு நம்மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இயேசுவைப் பின்பற்றி நாமும் நம்மைச் சுற்றியுள்ள மக்களை நேசித்து, தேவன் அவர்களுக்கு உதவும்படியாகவும், அவர்கள் வாழ்வில் செயல்படும்படியாகவும் அவர்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். அவர் அப்படியே செய்வார். நம்முடைய அன்பின் தேவன் நம்மை பெலப்படுத்தி, நாம் தாராளமாக நம்முடைய வரமாகிய ஜெபத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படி செய்வாராக.
அனைவரும் சேர்ந்து இழுப்போம்
ஒரு வருடத்தில் 50 லட்சத்திற்கும் மேலான மக்கள் பணத்தை செலவழித்து தடைகள் நிறைந்த பாதையில் பல மைல்கள் ஓடுகின்றனர். அவ்வழியில் செங்குத்தான சுவர்களின் மேலேறுகின்றனர், சகதிகளின் வழியே கடினப்பட்டு ஓடுகின்றனர். தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் ஒரு செங்குத்தான குழாயின் வழியே ஏறுகின்றனர். இவையெல்லாம் ஏன்? சிலர் இவற்றைத் தங்கள் சகிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் சவால்களாகவும், அல்லது அவர்களின் அச்ச உணர்வை நிவிர்த்திக்கும் வழியெனவும் கருதுகின்றனர். வேறு சிலருடைய கவர்ச்சி, அவர்களுடய கூட்டு முயற்சி. அவர்களோடு சேர்ந்த போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் உதவவும், உறுதுணையாகவும் செயல்படுகின்றனர். ஒரு மனிதன் இதனை ‘‘நியாயந் தீர்க்கப்படாத மண்டலம்” என அழைக்கின்றார். ஏனெனில் இனம் தெரியாத நபர்கள் ஒருவருக்கொருவர் உதவி, தங்கள் ஓட்டத்தை முடிக்கச் செய்கின்றனர் (ஸ்டீபனி நோவிட்ஸ், த வாஷிங்டன் போஸ்ட்)
இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையை வாழ்வில் காட்டும்படி, வேதாகமம் நம்மை குழுவாக வேலை செய்யத் தூண்டுகிறது. ‘‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடி வருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும் (எபி. 10:24-25).
நம்முடைய விசுவாச ஓட்டத்தின் இலக்கு ‘‘முதலாவது முடிப்பது” அல்ல, நம் ஓட்டத்தின் போது பிறருக்கு ஊக்கங்களைக் கொடுத்து, ஒரு முன் மாதிரியாக அமைந்து, உதவிக்கரம் நீட்டி பிறரையும் இலக்கினை அடையச் செய்வதேயாகும்.
நாம் எதிர்பார்க்கும் அந்த நாள், நம் வாழ்வை இவ்வுலகில் முடிக்கும்போது வரும். அதுவரையிலும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தியும், உதவுவதற்கு தயாராகவும், அவர்களையும் நம்மோடு இழுத்துக்கொண்டே ஒவ்வொரு நாளும் ஓடுவோம்.
நான்கெழுத்து நம்பிக்கை
எனக்குள் இருக்கும் அவநம்பிக்கையின் காரணமாக, நான் என் வாழ்வின் சூழ்நிலைகள் எப்படி முடியும் என்பதைக் குறித்து எதிர்மறையான முடிவையே எடுப்பேன். என்னுடைய ஒரு வேலையில் நான் எடுக்கும் முயற்சி தோல்வியைச் சந்திக்கும் போது, நான் மிக எளிதில், நான் மேற்கொள்ளும் மற்றெந்த வேலையும் வெற்றி பெறாது என்ற முடிவுக்கு வந்து விடுவேன். நான் தோல்வியைக் கண்ட வேலைக்கும் மற்ற வேலைகளுக்கும் தொடர்பேயில்லாதிருந்தும், நான் என் முடிவுகளை மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறினேன். ஐயோ! நான் பரிதாபத்துக்குரிய ஒரு தாய். என்னால் எதையுமே சரியாகச் செய்ய முடியவில்லை. ஓர் இடத்தில் நான் சந்திக்கும் தோல்வி, தேவையில்லாமல் என்னுடைய மற்றெல்லா உணர்வுகளையும் பாதிக்கிறது.
எனக்கு எளிதாக ஆபகூக்கைப் புரிந்து கொள்ள முடிகிறது. தேவன் அவருக்குக் காட்டியவற்றில் அவருடைய எண்ணம் எவ்வாறிருந்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு வரும் துன்பங்களைப் பார்த்து அவர் எத்தனை விரக்தியடைந்திருப்பார். நீண்ட வருடங்களாக, அவர்கள் துன்பத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. காரியங்கள் மிக மோசமாக நடந்தது. மரங்களில் கனியில்லை, சாப்பிட மாமிசமில்லை, உயிர் வாழ ஒரு சுகமுமில்லை. எல்லாவற்றிலும் மோசமான விளைவுகளையே எதிர்நோக்கி அவநம்பிக்கையில் வாழும் எனக்குள், அவருடைய நான்கெழுத்து வார்த்தை ‘‘ஆனாலும்” என்னை விழிக்கச் செய்தது. ‘‘ஆனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்” (ஆப. 3:17-18) ஆபகூக் தேவன் எத்தகையவர் என்பதைக் கண்டு கொண்டதால், எத்தனை கஷ்டங்களை எதிர்நோக்கினாலும் அவரால் மகிழ்ச்சியாயிருக்க முடிந்தது.
ஒரு வேளை நாம் நம்முடைய பிரச்சனைகளைப் பெரியதாகப் பார்க்கத் தூண்டப்படலாம். ஆனால் ஆபகூக் மிக அதிகமான கஷ்டங்களையே சந்தித்தார். அந்த நேரத்திலும் அவரால் தேவனை மகிமைப்படுத்த முடியும் போது, நம்மாலும் முடியும். நாம் நம்பிக்கையிழந்து துயரத்தின் ஆழத்திலிருந்தாலும் நம்மைத் தூக்கியெடுக்கவல்ல தேவனை நோக்கிப் பார்ப்போம்.
வெட்கமடையா விசுவாசம்
விளையாட்டு ரசிகர்கள் தங்கள் அணியின் புகழைப் பாட விரும்புவர். அவர்கள் லோகோக்களை அணிவதாலும், முகநூலில் தாங்கள் விரும்பும் அணியைக் குறித்து குறிப்புகளைப் பதிப்பதன் மூலம், அல்லது அந்த அணியைப் பற்றி நண்பர்களோடு பேசுவதன் மூலம் தங்களின் உண்மையான விசுவாசம் எவ்வளவிருக்கிறது என்பதைக் காட்டுகின்றனர். என்னுடைய சொந்த டெட்ராய்டு புலி தொப்பிகள், சட்டைகள், மற்றும் கவிதைகள் நானும் இத்தகையவற்றைச் செய்கின்ற ரசிகர் கூட்டத்தில் இருக்கின்றேன் என்பதைக் காட்டுகிறது.
விளையாட்டின் மீதுள்ள விசுவாசம், ஒன்றை நினைவுபடுத்துகிறது. நம்முடைய உண்மையான, மிகப் பெரிய விசுவாசம் தேவனுக்கே செலுத்தப்பட வேண்டியது. இத்தகைய வெட்கப்படாத விசுவாசத்தைக் குறித்து சங்கீதம் 34ல் தாவீது சொல்கின்றார். இப்புவியிலுள்ள எந்த ஒன்றையும் காட்டிலும் மிகப் பெரியதும், மிக முக்கியமானதுமான தேவன் ஒருவருக்கே நாம் உண்மையாயிருக்க வேண்டும்.
தாவீது சொல்கின்றார், “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்” (வச. 1). நாம் நம் வாழ்வில், உண்மையின் காரணராயும், ஒளியின் மூலமாயும், இரட்சிப்பின் காரணருமான தேவனைக் கருதாமல் இருந்த நாட்களை நினைக்கும் போது வியப்பாகவுள்ளது. தாவீது,
“அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (வச.1) என்கிறார். நாம் எத்தனை முறை இந்த உலகத்திற்குரியவர்களை நம் தேவனைக் காட்டிலும் அதிகமாகப் புகழ்ந்துள்ளோம். தாவீது சொல்கிறார், “கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும்” (வச.2). தேவன் நமக்குச் செய்ததை நினையாமல், நம்முடைய சிறிய வெற்றிகளைக் குறித்து நாம் எத்தனை முறை பெருமை பாராட்டியுள்ளோம்.
நம்முடைய அணியையும், நம்முடைய ஆர்வங்களையும், நம்முடைய சாதனைகளையும் குறித்து மகிழ்வதில் தவறில்லை. ஆனால், நம்முடைய மிக உயர்ந்த பாராட்டும் துதியும் தேவனுக்கேயுரியது. ‘‘என்னோடே கூட கர்த்தரைக் மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக” (வச. 3).