அறிவதும் அன்பு கூர்வதும்
“இயேசு என்னை நேசிக்கிறார், இதை நான் அறிவேன். ஏனெனில் வேதாகமம் அப்படிச் சொல்லுகிறது” என்று அர்த்தங்கொள்ளும் ஓர் ஆங்கிலப்பாடல், நீண்ட நாட்களாக நிலைத்திருக்கும் சிறுவர்களுக்கான ஒரு கிறிஸ்தவப் பாடல். (Jesus loves me this I know)
பதினெட்டாம் நூற்றாண்டில் அன்ணா பி. வார்னர் என்பவரால் எழுதப்பட்ட இப்பாடலின் வார்த்தைகள் தேவனோடு நமக்குள்ள உறவை மென்மையாக உறுதிப்படுத்துகிறது. நாம் தேவனால் நேசிக்கப்படுகிறோம்.
யாரோ ஒருவர் என் மனைவிக்கு, வீட்டில் தொங்கவிடக்கூடிய ஒரு அட்டையைக் கொடுத்தார். அதில் உள்ள வார்த்தைகள், இந்த எளிய கருத்தைத் திருப்பி, ஒரு புதிய மாற்றத்தைக் கொடுத்துள்ளன. அது, “இயேசு என்னை அறிந்துள்ளார், அதை நான் நேசிக்கிறேன் என்பது. இது தேவனோடு நமக்குள்ள உறவில் ஒரு புது முன்னோக்குப் பார்வையைத் தருகிறது. நாம் தேவனால் அறியப்பட்டிருக்கிறோம்.
பழங்கால இஸ்ரவேலரிடையே ஆடுகளை அன்பு செய்தல், அறிந்து கொள்ளல் என்பவை உண்மையான மேய்ப்பனை கூலி மேய்ப்பனிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. மேய்ப்பன் தன் ஆடுகளோடு அதிக நேரம் செலவிட்டு, அவைகளோடிருந்து கவனிப்பவனாகவும் தன் ஆட்டுக்குட்டிகளைக் குறித்து ஆழ்ந்து அறிந்தவனாகவும் இருப்பான். இயேசுவும் தன் சொந்த ஜனங்களிடம் ஆச்சரியப்படும் வகையில்”, நானே நல்ல மேய்ப்பன்,… நான் என் ஆடுகளை அறிந்தும், என்னுடைய ஆடுகளால் அறியப்பட்டும் இருக்கிறேன்… என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின் செல்கிறது” (யோவா. 10:14,15,27) என்று கூறுகிறார்.
அவர் நம்மை அறிந்திருக்கிறார், அவர் நம்மை நேசிக்கிறார்! இயேசு நமக்கு வைத்துள்ள நோக்கத்தையும், அவர் நம்மை கவனிக்கிறார் என்ற வாக்கையும் நம்பி, அவர் மீது சாய்ந்திளைப்பாறுவோம். ஏனெனில், “உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்” (மத். 6:8). இன்றைய வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளோடு போராடுகிற நீ, அமர்ந்திரு. உன் இருதயத்தின் மேய்ப்பனால் நீ அறியப்பட்டு, அன்பு செய்யப்படுகிறாய்.
கோபமுள்ள தேவனா?
கல்லூரி படிப்பில் நான் கிரேக்க, ரோம புராணங்களைக் கற்கும்போது, அந்தக் கதைகளில் வரும் தெய்வங்களெல்லாம் மோசமான மனநிலையோடு எளிதில் கோபப்படுபவர்களாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அந்த கோபத்தைச் சந்திக்கின்ற மக்களின் வாழ்வும் அழிக்கப்பட்டது. சில வேளைகளில் ஒரு கணப்பொழுதில் இது நடைபெற்றது.
இப்படிப்பட்ட தெய்வங்களை எப்படி ஒருவரால் நம்ப முடிகிறது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்படியானால் உண்மையான தெய்வத்தைக் குறித்த எனது கருத்து இவற்றைவிட முற்றிலும் வேறுபட்டதா? என்று எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டேன். நான் எப்பொழுதெல்லாம் அவரைச் சந்தேகிக்கிறேனோ அப்பொழுதெல்லாம் நானும் அவரை எளிதில் கோபப்படுகிறவராகப் பார்க்கவில்லையா? வருத்தத்தோடு ஆமோதித்தேன்.
எனவேதான் மோசே தேவனிடம், “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” (யாத். 33:18) எனக் கேட்டதை நான் பாராட்டுகிறேன். தனக்கு எதிராக அடிக்கடி முறுமுறுக்கின்ற, அதிக எண்ணிக்கையிலுள்ள ஒரு மக்கள் கூட்டத்தை வழிநடத்தும்படி தெரிந்து கொண்ட மோசே, இந்த பெரிய வேலையைச் செய்ய தேவன் தன்னோடிருந்து உதவுவாரா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினான். எனவே தேவன் மோசேயின் விண்ணப்பத்தை அங்கிகரித்து அவருடைய மகிமையைக் காண்பித்தார். தேவன் மோசேக்கு தன்னுடைய பெயரையும், குணாதிசயங்களையும் தெரிவித்தார். “கர்த்தர், இரக்கமும், கிருபையும் நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” (யாத். 34:6).
இந்த வார்த்தைகள், தேவன் உடனடியாகக் செயல்பட்டு கோபத்தில் அடிக்கிறவர் அல்ல என்பதைக் காட்டுகின்றன. நான் எனது கோபத்தில் பொறுமையின்றி அவர்மீது சாடுகின்ற வேளைகளில், இந்தவார்த்தைகள் நமக்கு உறுதியளிக்கின்றன. தேவன் என்னை அவரைப் போல மாற்றுவதற்கு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நாம் தேவனையும், அவருடைய மகிமையையும் அவர் நம்மிடம் காட்டும் பொறுமையிலும், ஒரு நண்பனின் ஊக்கமளிக்கும் வார்த்தையிலும், அழகிய சூரிய மறைவிலும் எல்லாவற்றிற்கும் மேலாக பரிசுத்தாவியானவர் நமக்குள்ளே பேசுகின்ற மெல்லிய குரலிலும் காணலாம்.
சரியாகப் பொருந்துதல்
லீ என்பவர் விடாமுயற்சியும் நம்பிக்கைக்குரியவருமான ஒரு வங்கி ஊழியர். அவர் தன் நம்பிக்கையில் வாழ்வதற்குத் தடுமாறிக் கொண்டிருந்தார் என்பதை நடைமுறையில் வெளிப்படுத்தினார். எடுத்துக்காட்டாக தன்னுடைய கருத்துக்களுக்கு பொருத்தமில்லாத உரையாடல் நடந்து கொண்டிருந்தால் அந்த அறையை விட்டு வெளியேறிவிடுவார். ஒரு வேத ஆராய்ச்சிக் கூட்டத்தில் ஒரு நாள் தன்னுடைய நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார், நான் எனது பதவி உயர்வு வாய்ப்புகளை இழக்க நேரிடுமோ என பயப்படுகிறேன், ஏனெனில் நான் இன்னமும் சரியாகப் பொருந்தி வரவில்லை என்றார்.
தீர்க்கன் மல்கியா காலத்து விசுவாசிகள் இத்தகைய சவாலைச் சந்தித்தனர். அவர்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தனர், தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டது. ஆனாலும் அவர்களுக்குள்ளே தங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து சந்தேகம் இருந்துகொண்டேயிருந்தது. சில இஸ்ரவேலர், “தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினால்… என்ன பிரயோஜனம்? இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம். தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள். அவர்கள் தேவனைப் பரிட்சை பார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே” (மல். 3:14-15). என்று சொன்னார்கள்.
உலகக் காரியங்களோடு நாம் சரியாகப் கலவாவிடில் நாம் அதனை இழந்துவிடுவோம் என்று சொல்லப்படுகின்ற கலாச்சாரத்தில், நாம் எப்படி தேவனுக்காக உறுதியாக நிற்கப் போகின்றோம்? மல்கியா காலத்திலிருந்த உண்மையுள்ளவர்கள் இத்தகைய சவால்களைக் சந்திக்கும் போது, தங்களைப் போன்ற மனதுடைய விசுவாசிகளைச் சந்தித்து ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினர். இந்த முக்கியமான செய்தியை மல்கியா நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். “கர்த்தர் கவனித்துக் கேட்பார்” (வச. 16).
தேவன் தமக்கு பயந்து தம்மை கனம்பண்ணுகிறவர்களை கவனித்து பாதுகாக்கிறார். நம்மை “பொருந்தி வாழ்வதற்கு அவர் அழைக்கவில்லை. ஆனால், நாம் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதன் மூலம் அவரோடு நெருங்கி வாழ்வதற்காகவே அழைத்தார். நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாயிருப்போம்.
உள்ளே என்ன இருக்கிறது
“உள்ளே என்ன இருக்கிறதென்று பார்க்க விரும்புகிறாயா?” என என் சிநேகிதி கேட்டாள். அவளுடைய மகளின் சிறிய கரங்களிலிருந்த மிகப் பழங்கால முறையில், பழைய துணியால் தைக்கப்பட்ட ஒரு பொம்மையை, நான் பாராட்டியிருந்தேன். உடனே ஆர்வத்துடன் அதனுள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண விரும்பி, ஆம் என பதிலளித்தேன். அவள் அந்த பொம்மையை, தலைகீழாகப் பிடித்து, அதன் பின்புறம் தைக்கப்பட்டிருந்த நளினமான இணைப்பானைத் திறந்தாள். அந்த துணியால் ஆன உடம்பிலிருந்து எமிலி ஒரு பொக்கிஷத்தை வெளியேயெடுத்தாள்; அது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அவளுடைய குழந்தைப் பருவத்தில் அவள் நேசித்து வைத்திருந்த பழைய துணியால் ஆன ஒரு பொம்மை. வெளியேயுள்ள பொம்மை வெறும் கூடுதான். உள்ளேயுள்ள இந்த முக்கிய உட்பகுதி தான் அந்த பொம்மைக் கூட்டிற்கு உறுதியையும் வடிவத்தையும் கொடுத்துள்ளது.
கிறிஸ்துவின் வாழ்வு, சாவு, உயிர்ப்பு ஆகியவற்றைக் குறித்த உண்மையை ஒரு பொக்கிஷமாக விளக்குகிறார் அப்போஸ்தலனாகிய பவுல். இந்த பொக்கிஷம் தேவனுடைய ஜனங்களின் பெலவீனமான மனிதத்துவத்தில் சுமக்கப்படுகிறது. இந்த பொக்கிஷம் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு நினைக்க முடியாத துன்பங்களிலும் அவருடைய பணியைத் தொடர்வதற்குப் பெலனளிக்கிறது. அப்படிச் செய்யும் போது அவருடைய ஒளியும், அவருடைய வாழ்வும் மனிதனின் பெலவினங்களாகிய உடைப்புகள் வழியே பிராகாசிக்கிறது. பவுல், நாம் சோர்ந்து போகாதிருக்க நம்மை ஊக்கப்படுத்துகின்றார்
(2 கொரி. 4:16).
அந்த ‘உள்ளான’ பொம்மையைப் போன்று நம்பிக்கையுள்ள சுவிசேஷமாகிய பொக்கிஷம் நமது வாழ்விற்கு ஒரு நோக்கத்தையும் மன பெலத்தையும் கொடுக்கிறது. தேவனுடைய பெலன் நம்மூலம் வெளிப்படும்போது, இது தேவனுடைய “உள்ளே என்ன இருக்கிறது?” என்ற கேள்வியைக் கேட்கச் செய்யும். அப்பொழுது நாம் நம் உள்ளத்தைத் திறந்து, உள்ளேயிருக்கிறது வாழ்வு தரும் கிறிஸ்துவின் இரட்சிப்பாகிய வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்துவோம்.
பணிவிடைக்காரன் உள்ளத்தை வளர்த்துக்கொள்ளல்
அது ஒரு நீண்ட வேலைநாள். நான் வீட்டிற்குச் சென்றபோது, ஒரு நல்ல தந்தையாக மற்ற வேலைகளைத் துவக்குவதற்கான நேரம் அது. என் மனைவி, குழந்தைகளின் வரவேற்பு, அப்பா இரவு உணவுக்கு என்ன செய்வது? அப்பா, எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தரமுடியுமா? அப்பா, நாம் கால்பந்து விளையாடலாமா? என்பதாக அமைந்தது.
நான் சற்று நேரம் உட்கார எண்ணினேன். நான் ஒரு நல்ல தந்தையாக இருக்க சிறிது விரும்பியபோதும் என்னுடைய குடும்பத்தினரின் தேவைகளுக்கு பணிபுரிய நான் விரும்பவில்லை. எங்கள் ஆலயத்திலுள்ள ஒருவரிடமிருந்து என் மனைவி பெற்றிருந்த ஒரு நன்றி அட்டையை அப்பொழுது நான் பார்த்தேன். அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், ஒரு துவாலை, அழுக்கான செருப்புகள் அடங்கிய ஒரு படம் இருந்தது. அதன் அடிப்பகுதியில் லூக்கா 22:27ல் உள்ள வாசகம், “ நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறனே;” இருந்தது.
தாம் தேடவும் ரட்சிக்கவும் (லூக். 19:10) வந்தவர்களுக்குப் பணிவிடைக்காரனைப் போலிருந்தார் என்ற வார்த்தைகளே என்னுடைய அப்போதையத் தேவையாயிருந்தது. இயேசுவே தன்னுடைய சீடர்களின் அழுக்கடைந்த கால்களைக் கழுவுதலாகிய இழிவான வேலையைச் செய்ய சம்மதிக்கும் போது,
(யோவான். 13:1-17) நான் என் மகனுக்கு ஒரு குவளைத் தண்ணீரை முறுமறுக்காமல் கொடுக்கலாம். அந்நேரமே என் குடும்பத்தினரின் தேவைகளுக்கு பணிசெய்தவை ஒரு கடமையாகயல்ல, இயேசுவின் பணிவிடைகாரனின் உள்ளத்தை பிரதிபலிப்பவனாகச் செய்தேன். நம்மிடம் உதவிகள் கேட்கப்படும்போது, அவைகளை, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குப் பணிவிடை செய்து, தன்னுடைய ஜீவனையே நமக்காகத் தந்தவரைப் போல மாறுவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளாகக் கருதுவோம்.