கல்லூரி படிப்பில் நான் கிரேக்க, ரோம புராணங்களைக் கற்கும்போது, அந்தக் கதைகளில் வரும் தெய்வங்களெல்லாம் மோசமான மனநிலையோடு எளிதில் கோபப்படுபவர்களாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அந்த கோபத்தைச் சந்திக்கின்ற மக்களின் வாழ்வும் அழிக்கப்பட்டது. சில வேளைகளில் ஒரு கணப்பொழுதில் இது நடைபெற்றது.

இப்படிப்பட்ட தெய்வங்களை எப்படி ஒருவரால் நம்ப முடிகிறது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்படியானால் உண்மையான தெய்வத்தைக் குறித்த எனது கருத்து இவற்றைவிட முற்றிலும் வேறுபட்டதா? என்று எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டேன். நான் எப்பொழுதெல்லாம் அவரைச் சந்தேகிக்கிறேனோ அப்பொழுதெல்லாம் நானும் அவரை எளிதில் கோபப்படுகிறவராகப் பார்க்கவில்லையா? வருத்தத்தோடு ஆமோதித்தேன்.

எனவேதான் மோசே தேவனிடம், “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” (யாத். 33:18) எனக் கேட்டதை நான் பாராட்டுகிறேன். தனக்கு எதிராக அடிக்கடி முறுமுறுக்கின்ற, அதிக எண்ணிக்கையிலுள்ள ஒரு மக்கள் கூட்டத்தை வழிநடத்தும்படி தெரிந்து கொண்ட மோசே, இந்த பெரிய வேலையைச் செய்ய தேவன் தன்னோடிருந்து உதவுவாரா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினான். எனவே தேவன் மோசேயின் விண்ணப்பத்தை அங்கிகரித்து அவருடைய மகிமையைக் காண்பித்தார். தேவன் மோசேக்கு தன்னுடைய பெயரையும், குணாதிசயங்களையும் தெரிவித்தார். “கர்த்தர், இரக்கமும், கிருபையும் நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” (யாத். 34:6).

இந்த வார்த்தைகள், தேவன் உடனடியாகக் செயல்பட்டு கோபத்தில் அடிக்கிறவர் அல்ல என்பதைக் காட்டுகின்றன. நான் எனது கோபத்தில் பொறுமையின்றி அவர்மீது சாடுகின்ற வேளைகளில், இந்தவார்த்தைகள் நமக்கு உறுதியளிக்கின்றன. தேவன் என்னை அவரைப் போல மாற்றுவதற்கு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நாம் தேவனையும், அவருடைய மகிமையையும் அவர் நம்மிடம் காட்டும் பொறுமையிலும், ஒரு நண்பனின் ஊக்கமளிக்கும் வார்த்தையிலும், அழகிய சூரிய மறைவிலும் எல்லாவற்றிற்கும் மேலாக பரிசுத்தாவியானவர் நமக்குள்ளே பேசுகின்ற மெல்லிய குரலிலும் காணலாம்.