Archives: டிசம்பர் 2017

ஆத்மாவின் அமைதி இரவு

ஜோசப் மோஹரும், ஃபிரான்ஸ் குரூபரும் “அமைதியான இரவு” (SILENT NIGHT, HOLY NIGHT) என்ற கிறிஸ்துமஸ் கீதத்தை இயற்றுவதற்கு முன்பே, ஏஞ்சலஸ் சைலேஷியஸ் என்பவர் எழுதியிருந்த பாடல் “இதோ, அமைதி இரவில் தேவனுக்கோர் குழந்தை பிறந்தது, தொலைந்தது கைவிடப்பட்டது எல்லாம் திரும்பக் கொண்டுவரப்பட்டது, ஓ மனிதனே; உன் ஆத்துமா மட்டும் அமைதி இரவாக மாறுமென்றால் தேவன் உன்னில் பிறந்து எல்லாவற்றையும் சரிசெய்வார்.

சைலேஷியஸ் என்ற போலந்து நாட்டுத் துறவி, இந்தக் கவிதையை “திசெரூபிக் பில்கிரிம்” எனும் பாடல் தொகுப்பில், 1657ல் வெளியிட்டார். எங்கள் சபை கிறிஸ்துமஸின் மாலை கீத ஆராதனையில், இந்தப்பாடலுக்கு அருமையான இசையமைத்து, “உன் ஆத்துமா மட்டும் அமைதி இரவாகக் கூடுமானால்” என்ற தலைப்பில் பாடகர் குழுவினர் பாடினார்கள்.

கிறிஸ்துமஸின் இரண்டத்தனையான ரகசியங்கள் என்னவென்றால், ஒன்று  நாம் தேவனோடு ஒன்றாவதற்காக அவர் நம்மில் ஒருவரானார். நாம் நீதிமான்களாவதற்காக இயேசு எல்லா அநியாயத்தையும் சகித்தார். அதனால்தான் பவுல் அப்போஸ்தலனால், “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான் பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின!” என்று எழுத முடிந்தது. இவையனைத்தும் இயேசுவின் மூலம் நம்மைத் தன்னோடு ஒப்புரவாக்கின தேவனிடத்திலிருந்தே பெறுகிறோம் (2 கொரி. 5:17-18).

நம்முடைய கிறிஸ்துமஸைக் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் செலவிடலாம் அல்லது தனிமையிலே கொண்டாடலாம். ஆனால், நாம் வாஞ்சிப்பது என்னவென்றால், இயேசு நமக்குள் பிறக்கவே வந்தார் என்பதே.

ஆ! உன் இருதயம் இயேசு பிறப்பதற்கேற்ற முன்னணையாயிருக்குமென்றால், தேவன் மறுபடியும் உன்னிலே பிறப்பார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று வீட்டில்

ஒரு கிறிஸ்துமஸ் தினத்தில் வேலையினிமித்தம் நான் தேசப்படத்தில்கூட கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு அனுப்பப்பட்டேன். கருங்கடலிலிருந்து வீசிய குளிர்காற்றுக்கெதிராக மெதுவாக நடந்து என் அறைக்கு வந்தேன். என் வீட்டை நினைத்தேன்.

நான் அறைக்கு வந்து கதவைத்திறந்தபொழுது நான் கண்டது மாயாஜாலம் போலிருந்தது. கலை ஆர்வம் கொண்ட என் நண்பன் களிமண்ணினால் ஒரு பத்தொன்பது அங்குல கிறிஸ்மஸ் மரமொன்றைச் செய்து கலர் பல்புகளால் அலங்கரித்திருந்தான். நான் வீட்டிலிருப்பது போல உணர்ந்தேன்!

யாக்கோபு ஏசாவுக்கு பயந்து தப்பி ஓடுகையில், தனியாய் அந்நிய தேசத்தில் தனித்திருந்தான். அந்த கட்டாந்தரையில் படுத்துத் தூங்கினபொழுது, சொப்பனத்தில் தேவனைத் தரிசித்தான். தேவன் யாக்கோபுக்கு ஒரு வீட்டை வாக்குப்பண்ணினார். “நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்” “உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார் (ஆதி. 28:13,14).

நம்மைத் தம்மிடம் இழுத்துக் கொள்ளும்படி தம்முடைய பரம வீட்டைவிட்டு வந்த மேசியா வாக்குத்தத்தம் பண்ணிய யாக்கோபின் வம்சத்திலேதான் தோன்றினார். “நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்” என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார் (யோவா. 14:3).

அந்த டிசம்பர் மாத இரவில், நான் அந்த கிறிஸ்துமஸ் மரத்தையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில், பரம வீட்டிற்குப் போகும் வழியை நமக்குக் காட்ட பூமிக்கு வந்த ஒளியை நினைத்துக்கொண்டேன்.

மவுனத்தை கலைத்தல்

பழைய ஏற்பாட்டின் முடிவில் தேவன் தன்னை மறைத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. நான்கு நூற்றாண்டுகளாய் யூதர்கள் ஆச்சரியத்தோடு காத்திருந்தனர். தேவனோ அவர்கள் ஜெபத்தைக் கேளாதவராய், கரிசனையற்றவராய், செயல்படாதவராய் இருப்பதுபோலத் தோன்றியது. மேசியா வருவாரென்ற ஒரே ஒரு பண்டைய வாக்குத்தத்தம் மட்டுமே நம்பிக்கையளித்தது. அந்த வாக்குக்குத்தத்தத்தின் மேலேயே யூதர்கள் அக்கரை வைத்திருந்தனர். திடீரென்று ஆச்சரியமானதொன்று நடந்தது, ஒரு பாலகன் பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.

அந்த செய்தியைக் கேட்டவர்களின் உற்சாகத்தை லூக்காவில் வாசிக்கிறோம். இயேசுவின் பிறப்பைச் சுற்றி நிகழ்ந்தவையெல்லாம் ஒரு சந்தோஷத்தால் நிறைந்த இசை நிகழ்ச்சி போலிருக்கிறது. பலவித கதாபாத்திரங்கள் மேடையில் தோன்றுகின்றனர். ஒரு வயதான வெள்ளைத்தலை மாமா (லூக். 1:5-25), பிரமிப்படைந்த ஒரு கன்னிகை (லூக். 1:26-38), வயதான தீர்க்கதரிசி அன்னாள் (2:36), மரியாள் பாடிய அருமையான கீதம் (லூக். 1:46-55), தாயின் வயிற்றிற்குள்ளிருந்து துள்ளின இயேசுவின் உறவுப் பாலகன் (லூக். 1:41).

லூக்கா கவனமாக மேசியாவைப்பற்றிய பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களோடு நேரடித் தொடர்பு ஏற்படுத்துகிறார். காபிரியேல் தூதன் யோவான் ஸ்நானனை கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ண அனுப்பப்பட்ட எலியா என்றான் (லூக். 1:17). நிச்சயமாகவே ஏதோ ஒன்று பூமி என்னும் கிரகத்தில் உருவாகிக்கொண்டிருந்தது. ரோமப் பேரரசில் அவர்களாய் தோற்கடிக்கப்பட்ட யூதேயாவின் இருண்ட மூலையிலிருந்த கிராமவாசிகளிடமிருந்து எதோ  ஒரு நன்மையான காரியம் வெடித்து வெளிப்பட்டது.

தீவிர நடவடிக்கை

சில வருஷங்களுக்கு முன் என் சிநேகிதியின் சின்ன மகன் (சிக்காகோவிலுள்ள யூனியன் ஸ்டேஷன்) ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டத்தில் தொலைந்துபோனான். அது ஒரு பயங்கரமான அனுபவம் என்று சொல்லத் தேவையில்லை. செய்வதறியாமல் தன் மகனின் பெயரை உரத்த குரலில் கூப்பிட்டுக்கொண்டே தானியங்கி படிக்கட்டில் ஏறி அங்கும் இங்கும் ஒடினாள். வினாடிகள் யுகம்போல் தோன்றியது. கடைசியில் அவள் மகன் கூட்டத்திலிருந்து வெளியே வந்து தாயின் கைகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்தான்.

தன் பிள்ளையைக் கண்டுபிடிப்பதற்காக என் சிநேகிதி என்ன வேண்டுமானாலும் செய்திருப்பாள் என்பதை நினைக்கும்பொழுது, தேவன் நம்மை இரட்சிக்க செய்த ஆச்சரியமான காரியங்களை நினைத்து, புத்துணர்வுடன் நன்றியுணர்வால் நிரம்புகிறோம். முதலாவது தேவனுடைய சாயலில் படைக்கப்பட்ட ஆதாமும், ஏவாளும் பாவம் செய்து தேவனைவிட்டு விலகிப்போனது முதல், தேவன் தம்முடைய பிள்ளைகளோடிருந்த உறவை இழந்துபோனதற்காய் புலம்பினார். அந்த உறவை மறுபடியும் மீட்டெடுக்க ஒரு தீவிர முயற்சியாகத் தம்முடைய ஒரேபேறான ஏகசுதனை, “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவும்” (லூக். 19:10). அனுப்பினார். இயேசு பிறக்காமலும், நம்முடைய பாவத்தின் கிரயமாக தம்மை பலியாக ஒப்புக்கொடாமலும் இருந்திருந்தால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே இருந்திருக்காது.

தேவன் தீவிர நடவடிக்கை எடுத்துத் தம் குமாரனை அனுப்பி நம்மை அவரோடு ஒப்புரவாக்கினதை இந்தக் கிறிஸ்துமஸ் காலங்களில் நினைத்து நன்றி சொல்லக் கடவோம். ஓர் காலத்தில் நாம் காணாமற்போயிருந்தாலும் இயேசுவால் கண்டுபிடிக்கப்பட்டோம்!