ஒரு கிறிஸ்துமஸ் தினத்தில் வேலையினிமித்தம் நான் தேசப்படத்தில்கூட கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு அனுப்பப்பட்டேன். கருங்கடலிலிருந்து வீசிய குளிர்காற்றுக்கெதிராக மெதுவாக நடந்து என் அறைக்கு வந்தேன். என் வீட்டை நினைத்தேன்.

நான் அறைக்கு வந்து கதவைத்திறந்தபொழுது நான் கண்டது மாயாஜாலம் போலிருந்தது. கலை ஆர்வம் கொண்ட என் நண்பன் களிமண்ணினால் ஒரு பத்தொன்பது அங்குல கிறிஸ்மஸ் மரமொன்றைச் செய்து கலர் பல்புகளால் அலங்கரித்திருந்தான். நான் வீட்டிலிருப்பது போல உணர்ந்தேன்!

யாக்கோபு ஏசாவுக்கு பயந்து தப்பி ஓடுகையில், தனியாய் அந்நிய தேசத்தில் தனித்திருந்தான். அந்த கட்டாந்தரையில் படுத்துத் தூங்கினபொழுது, சொப்பனத்தில் தேவனைத் தரிசித்தான். தேவன் யாக்கோபுக்கு ஒரு வீட்டை வாக்குப்பண்ணினார். “நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்” “உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார் (ஆதி. 28:13,14).

நம்மைத் தம்மிடம் இழுத்துக் கொள்ளும்படி தம்முடைய பரம வீட்டைவிட்டு வந்த மேசியா வாக்குத்தத்தம் பண்ணிய யாக்கோபின் வம்சத்திலேதான் தோன்றினார். “நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்” என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார் (யோவா. 14:3).

அந்த டிசம்பர் மாத இரவில், நான் அந்த கிறிஸ்துமஸ் மரத்தையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில், பரம வீட்டிற்குப் போகும் வழியை நமக்குக் காட்ட பூமிக்கு வந்த ஒளியை நினைத்துக்கொண்டேன்.