“கிறிஸ்து என்னோடும், கிறிஸ்து என்னுள்ளும், கிறிஸ்து முன்னும், கிறிஸ்து பின்னும் கிறிஸ்து என்கீழும், கிறிஸ்து என்மேலும், கிறிஸ்து என்வலமும், கிறிஸ்து என் இடமும்…”

மத்தேயு கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து எழுதியதை வாசிக்கும்பொழுது, 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த செல்ட்டிக் கிறிஸ்தவறான பரி. பேட்ரிக் என்பவர் எழுதிய இப்பாடலின் வார்த்தைகள் எனக்குள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும். அவை என்னை அனலுறத்தழுவி, ஒருபோதும் நீ தனியனில்லையென்று சொல்வது போல இருக்கும்.

தேவன் தம் ஜனங்களோடு வாசம்பண்ணுவதே கிறிஸ்துமஸின் மையக் கருத்து என்று மத்தேயு சுவிசேஷம் சொல்லுகிறது.

ஒரு குழந்தை, “தேவன் நம்மோடு” எனும் அர்த்தமுள்ள இம்மானுவேல் எனும் பேரால் அழைக்கப்படும் (ஏசா. 7:14) என்று ஏசாயாவின் தீர்க்கதரிசனம் பரிசுத்தாவியினால் பிறந்த இயேசுவின் பிறப்பில் முழுமையாய் நிறைவேறினதையே மத்தேயு இங்கே சொல்லியிருக்கிறார். இதுவே சுவிசேஷத்தின் மையமாயிருப்பதால், இதை வைத்தே தன் சுவிசேஷத்தை மத்தேயு ஆரம்பித்தும் முடித்தும் இருக்கிறார். தன் சீஷர்களிடம் இயேசு, “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார் (மத். 28:20).

தேவனுடைய ஆவி நமக்குள் வாசம் பண்ணுவதால் கிறிஸ்து எப்பொழுதும் விசுவாசிகளோடு இருக்கிறார் என்பதை, பரி. பேட்ரிக்கின் பாடல் எனக்கு நினைவுறுத்துகிறது. நான் தளர்ச்சியடைந்திருக்கிற போதும், பயப்படும்போதும் “நான் உன்னைவிட்டு விலகுவதில்லை” என்கிற அவருடைய வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டு தைரியமடையலாம். நான் தூங்கமுடியாமல் கஷ்டப்படும்பொழுது, உம்முடைய சமாதானத்தை எனக்குத் தாரும் என்று கேட்கலாம். நான் சந்தோஷத்தால் நிறைந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் பொழுது. அவர் என் வாழ்வில் கிருபையாய் செய்த காரியங்களை நினைத்து நன்றி சொல்லலாம்.