எனக்கு வயதாகிவிட்டதினால், முக்கியமாக குளிர்காலங்களில், மூட்டுகளில் வலி என்னைத் தாக்குகிறது. சில நாட்களில் என்னை வெற்றிவீரனாக நினைக்க முடியவில்லை; மூத்தக் குடிமகனாவதின் சவால்களால் தோற்றுப்போனவனாகவே உணருகிறேன்.

அதனால் தான் வாக்குப்பண்ணப்பட்ட தேசமாகிய கானானை வேவுபார்க்க மோசேயினால் அனுப்பப்பட்ட வயதான காலேபு என் அபிமான வீரன். வேவு பார்க்க அனுப்பப்பட்ட பன்னிரண்டு பேரில், பத்துபேர் துர்ச்செய்தியைக் கொண்டுவந்த போதும், காலேபும், யோசுவாவும் மட்டுமே கர்த்தரால் கானானுக்குள் பிரவேசிக்கும் கிருபை பெற்றனர். தேசத்தில் காலேப் தன் சுதந்தரத்தைப் பெறப்போகும் நேரம் வந்ததை யோசுவா 14ல் வாசிக்கிறோம். இன்னும் துரத்தப்பட வேண்டிய எதிரிகள் இருந்தனர். இளையதலைமுறைக்கு இப்பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஓய்வுபெற மனதில்லாத காலேப், “அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீர். கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்” (யோசு. 14:12).

“கர்த்தர் என்னேடிருப்பாரானால்” என்ற மனத்திடம்தான் காலேபை யுத்ததிற்கு ஆயத்த நிலையில் வைத்திருந்தது. அவன் தான் வயதானதை எண்ணாமலும், தன் பலத்தை நம்பாமலும், கர்த்தருடைய வல்லமையையே சார்ந்திருந்தான். என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய தேவன் அவனுக்கு உதவுவார் என்று எண்ணினான்.

நம்மில் அநேகர், ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியபின் பெரிய சாதனை எதையும் சாதிக்க விரும்புவதில்லை. நாம் எவ்வளவு வயது சென்றவர்களாயிருந்தாலும், தேவனுக்கென்று பெரிய காரியங்களைச் செய்ய முடியும். காலேபுக்கு வந்த பெரிய வாய்ப்பை அவன் பற்றிக்கொண்டது போல, நமக்கும் அது போன்ற வாய்ப்பு வருமானால், நாம் அதைத் தவிர்க்கக் கூடாது! கர்த்தரின் உதவியுடன் நாம் வெற்றி பெற முடியும்.