உலகெங்கும் உள்ள “ஸ்டார் வார்ஸ்” பட ரசிகர்கள், அதன் 8ம் பகுதி “தி லாஸ்ட் ஜெடி”யைக்காண ஆர்வமாயிருக்கிறார்கள். 1977 முதல் வந்து கொண்டிருக்கும் படத்தின் வெற்றிக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். (CNN Money) என்ற ஊடக நிருபர், ஃபிராங்க் பல்லோட்டா, “பொல்லாத உலகத்தில் மக்கள் ஒரு புது நம்பிக்கைக்காகவும், வல்லமையுள்ள நல்ல ஹீரோவுக்கும் ஏங்கி காத்திருப்பதே இந்த படம் பிரபலமானதற்கும் காரணம்” என்கிறார்.

இயேசு பிறந்தபொழுது இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை ஒடுக்குகிறவர்களின் கைக்கு விலக்கி இரட்சிக்கும், வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவுக்காகக் காத்திருந்தார்கள். அநேகர் தங்களை ரோம கொடுங்கோன்மையினின்று விடுவிக்கும் மா வீரன் ஒருவரை எதிர்பார்த்தார்கள். ஆனால் இயேசுவோ அரசியல் ஹீரோவாகவோ ராணுவ மாவீரனாகவோ வரவில்லை. மாறாக ஒரு சிறு குழந்தையாக பெத்லகேமிலே பிறந்தார். அதனால், அநேகர் அவர் யாரென்றே அறியாமற்போனார்கள். “அவர் நமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ள வில்லை” (யோவா. 1:11) என்று அப்போஸ்தனலாகிய யோவான் எழுதியிருக்கிறார்.

ஹீரோவுக்கும் மேலாக இயேசு நமது இரட்சகராக வந்தார். இருளுக்குள் இருப்பவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்க வந்தார். அவரை ஏற்றுக்கொண்ட அனைவரும் பாவ மன்னிப்பைப்பெற்று, பாவத்தின் வலிமையின்று விடுதலைபெற, தம்முடைய ஜீவனைக் கொடுக்க வந்தார். “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (வச. 14) என்றெழுதினான்.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேர்களும் அவருடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுத்தார்” (வச. 12). ஆம் உலகத்திற்குத் தேவையான உண்மையான ஒரே நம்பிக்கை இயேசுவே!