பேசும்முன் யோசி
தன் மனைவி பிரபலமான ஹோட்டலுக்குப் போகும் வழியை சரிவரக் கண்காணிக்காததால் அங்கு போக இயலாததால் செங் மன அமைதியை இழந்தான். அவர்கள் குடும்பமாக ஜப்பானைச் சுற்றிப் பார்த்து விடுமுறையைக் கழித்து, வீடுதிரும்புமுன் கடைசியாக அந்தப் பிரபல ஹோட்டலில் திருப்தியாக உணவு உண்ண திட்டமிட்டிருந்தனர். இப்பொழுது கால தாமதத்தால் உணவருந்தாமல் விமான நிலையத்திற்குச் செல்லவேண்டியதாயிற்று. ஏமாற்றமடைந்த செங் , கவனமாகத் திட்டமிடாததற்காகத் தன் மனைவியைக் குறைகூறினான்.
பின்பு செங் தன் மனைவியைக் குறைகூறியதற்காக வருத்தப்பட்டான். தான் மிகக் கடினமாக நடந்து கொண்டதாகவும், தானே அந்தப் பாதையை கண்காணித்திருக்கலாம் என்றும் உணர்ந்தான். அதற்கு முன்னைய ஏழு நாட்களுக்கும் மிக சிறந்த முறையில் திட்டமிட்டதற்காக மனைவிக்கு நன்றி கூட சொல்லவில்லை.
நம்மில் அநேகர், செங் போலவே இருக்கிறோம். சோதிக்கப்படும்போது கோபத்தால் பொங்கி கட்டுப்பாடின்றி வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறோம். சங்கீதக்காரனைப் போல நாமும் “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங். 141:3) என்று எவ்வளவாக ஜெபம் செய்ய வேண்டும்.
நாம் அதை எவ்வாறு செயல்படுத்த முடியும்? இதோ ஒரு ஆலோசனை, பேசும்முன் யோசி. உங்களுடைய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளா? பயன் தரும் வார்த்தைகளா? அன்பும் கிருபையுமுள்ள வார்த்தைகளா? (எபே. 4:29-32).
வாய்க்கு காவல் வைப்பதென்பது என்னவென்றால், எரிச்சலடையும்பொழுது வாயை மூடிக்கொண்டு சரியான வார்த்தைகளை, சரியான தொனியில் பேச அல்லது பேசாமலிருக்க ஜெபித்து தேவனின் உதவியை நாட வேண்டும். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவதென்பது வாழ்க்கை முழுவதும் தொடரும் ஓர் பணி. நல்லவேளை, “தேவன் நம்மில் கிரியை செய்து தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலி. 2:13).
இரண்டாம் தருணங்கள்
தான் எடுத்த சில தவறான தீர்மானங்களினால், கிட்டா, அயல் நாடொன்றில், ஆறு வருடங்களை சிறையில் கழிக்க நேரிட்டது. அவள் விடுதலையானபோது அவளுக்கு போவதற்கு ஓரிடமும் இல்லை. அவள் தன் வாழ்க்கை முடிந்ததென்று நினைத்தாள். அவள் குடும்பத்தினர் அவள் தன் சொந்த தேசத்திற்கு வருவதற்கு டிக்கெட் எடுக்கத் தேவையான பணத்தை சேகரித்து அனுப்பினர். அதுவரை ஒரு அன்புள்ள தம்பதியர் அவளுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்து உதவியதால் அவர்களின் அன்பினால் தொடப்பட்டாள். ஆகவே அவர்கள், அவளை நேசித்து அவள் வாழ்வதற்கு அவளுக்கு இரண்டாம் தருணம் கொடுக்க விரும்பும் ஆண்டவரைக்குறித்த நற்செய்தியை சொன்னபோது, கவனமாகக் கேட்டாள்.
கிட்டா வேதாகமத்திலுள்ள விதவை நாகோமியை எனக்கு நினைவுபடுத்தினாள். அந்நிய தேசத்தில் தன் கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்து, தன் வாழ்க்கை முடிந்ததென்று நினைத்தாள் (ரூத். 1). ஆனால், தேவன் நகோமியை மறக்கவில்லை… தன் மருமகள் ரூத்தின் அன்பினாலும், போவாஸ் எனும் தேவனுக்குப் பயந்த மனிதனின் தயவினாலும் நகோமி தேவனுடைய அன்பைக் கண்டு இரண்டாம் தருணமொன்றைப் பெற்றுக்கொண்டாள் (4:13-17).
அதே தேவன் இன்றும் நம்மேல் கரிசனையுள்ளவராகவே இருக்கிறார். மற்றவர்கள் நம்மேல் அன்புகாட்டும்பொழுதெல்லாம், நாம் தேவனுடைய பிரசன்னத்தை உணர்கிறோம். நமக்கு அதிகம் அறிமுகமில்லாதவர்கள் உதவும்போது தேவனுடைய கிருபையை அறிகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் நமக்கு ஒரு புது ஆரம்பத்ததைத்தர விரும்புகிறார். நாமும் நகோமியைப்போல் நமது அனுதின வாழ்க்கையில் தேவனுடைய கரத்தைக் கண்டு, அவருடைய அன்புக்கு முடிவே கிடையாது என்று அறிந்துகொள்ள வேண்டும்.
நமது ஜெபமும் தேவனுடைய வேளையும்
சில வேளைகளில் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க தேவன் காலம் தாழ்த்துகிறார். அதை விளங்கிக்கொள்வது நமக்கு எப்பொழுதுமே எளிதல்ல.
அதுவே ஆசாரியனாகிய சகரியாவுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையாகும். எருசலேம் தேவாலயத்து பலிபீடத்தினருகில் ஒருநாள் காபிரியேல் எனும் தூதன் சகரியாவிற்குக் காட்சி அளித்தார். காபிரியேல் சகரியாவை நோக்கி, “சகரியாவே பயப்படாதே; உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப்பெறுவாள் அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக” என்றான் (லூக். 1:13).
ஆனால், சகரியா ஒரு குழந்தைக்காக தேவனிடத்தில் விண்ணப்பம் செய்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்பொழுதோ, எலிசபெத்து பின்ளைபெறுகிற வயதைத் தாண்டிவிட்டாள். அதனால் சகரியா காபிரியேலின் செய்தியை நம்பமுடியாமல் குழம்பினான், கலங்கினான். ஆனாலும் தேவன் அவன் விண்ணப்பத்திற்குப் பதிலளித்தார்.
தேவனுடைய நினைவாற்றல் பரிபூரணமானது. தேவன் பல ஆண்டுகள் கடந்து மட்டுமல்ல, நமது ஆயுசு நாட்கருதி பல தலைமுறைகள் கடந்தாலும் நமது விண்ணப்பத்தை நினைவுகூர வல்லவர். அவர் நம் வேண்டுதலை நிறைவேற்ற காலம் தாழ்த்தினாலும் ஒருபோதும் அதை மறப்பதேயில்லை. சில வேளைகளில் அவருடைய பதில் ‘இல்லை’ என்றிருக்கலாம் அல்லது ‘காத்திரு’ என்றிருக்கலாம். ஆனால், எந்த பதிலும் அன்பின் அடிப்படையிலேயே இருக்கும். அவருடைய வழிகள் நமக்கு விளங்காமலிருக்கலாம்; ஆனால், அது நன்மைக்கேதுவானது என்று நாம் அதை நம்பலாம்.
சகரியா இதைக் அறிந்திருந்தான். அவர் ஒரு மகனைத்தான் கேட்டான். ஆனால் தேவன் அவன் கேட்டதற்கும் மேலானதைக் கொடுத்தார். அவனுடைய மகன் யோவான் வளர்ந்து மேசியாவின் வருகையை அறிவிக்கும் தீர்க்கதரிசியானான். சகரியாவின் அனுபவம் ஒரு முக்கிய சத்தியத்தை வலியுறுத்தி நம்மை ஜெபம் பண்ண உற்சாகப்படுத்துகிறது.
தேவனுடைய வேளை அநேகமாக நம்முடைய வேளையாயிராது; என்றாலும் அதற்குக் காத்திருப்பது நல்லது.
சந்தோஷமும் நீதியும்
நான் ஆசியாவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பொழுது வந்த சில மணி நேரங்களுக்குள் என் கண்களைத் திறந்த இரண்டு உரையாடல்களைக் கேட்டேன். முதலாவதாக தன்மீது தவறாகச் சாட்டப்பட்ட கொலைக்குற்றத்திற்காக பதினொரு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டதையும், பின்பு குற்றமற்றவன் என்று விடுதலையானதையும் ஒரு போதகர் கூறினார். அடுத்து ஒருசில குடும்பங்கள் தங்கள் தங்கள் சொந்த தாய் நாட்டிலேயே மத வேற்றுமையினால் வந்த உபத்திவத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற ஒரு கூட்டத்தினருக்கு அதிகமான பணம் கொடுத்தும் அவர்கள் தங்களை காட்டிக்கொடுத்தாகவும், அதனால் அகதிகள் முகாமில் பலஅண்டுகள் அடைக்கப்பட்டு தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்புவோம் என்கிற நம்பிக்கையை இழந்ததாகவும் கூறினார்கள்.
இந்த இரண்டிலுமே நீதி அற்றுப் போனதால் அப்பாவிகள் உபத்திரவத்திற்குள்ளானார்கள். இது உலகம் அநீதியானது என்பதற்கோர் எடுத்துக்காட்டு. அனால், இந்த நீதியற்ற நிலைமை நிரந்தரமானதல்ல!
சங்கீதம் 67 நம்மைத் துன்புறுத்தும் உலகிற்கு தேவனை அறிவிக்க தேவனுடைய ஜனங்களை அழைக்கிறது. அதன் விளைவு, மகிழ்ச்சி தேவனுடைய அன்பினால் மட்டுமல்ல, அவருடைய நீதியினாலும் உண்டாகும் சந்தோஷமாயிருக்கும். தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர், ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள்” என்று சங்கீதக்காரன் கூறுகிறார் (வச. 4). நிதானமும் நீதியும் நேர்மையும் தேவனுடைய அன்பின் முக்கிய பகுதி என்பதை வேதத்தின் ஆசிரியர்கள் அறிந்திருந்தாலும் அது வருங்காலத்தில்தான் முற்றிலும் உணரப்படும்; என்றும் அறிந்திருந்து அதுவரை… வரக்கடவது (ஆமோ. 5:24). அதுவரை, நம் அநீதி நிறைந்த உலகிற்கு நம்முடைய தேவனின் நீதியை சுட்டிக்காட்டும் பணியைத் தொடர்வோமாக. நம்முடைய தேவனின் தேவ நீதியை அறிவிக்கும் பணியைத் தொடர்வோமாக. அவர் வரும்போது, “நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது (ஆமோ. 5:24).