சில வேளைகளில் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க தேவன் காலம் தாழ்த்துகிறார். அதை விளங்கிக்கொள்வது நமக்கு எப்பொழுதுமே எளிதல்ல.

அதுவே ஆசாரியனாகிய சகரியாவுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையாகும். எருசலேம் தேவாலயத்து பலிபீடத்தினருகில் ஒருநாள் காபிரியேல் எனும் தூதன் சகரியாவிற்குக் காட்சி அளித்தார். காபிரியேல் சகரியாவை நோக்கி, “சகரியாவே பயப்படாதே; உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப்பெறுவாள் அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக” என்றான் (லூக். 1:13).

ஆனால், சகரியா ஒரு குழந்தைக்காக தேவனிடத்தில் விண்ணப்பம் செய்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்பொழுதோ, எலிசபெத்து பின்ளைபெறுகிற வயதைத் தாண்டிவிட்டாள். அதனால் சகரியா காபிரியேலின் செய்தியை நம்பமுடியாமல் குழம்பினான், கலங்கினான். ஆனாலும் தேவன் அவன் விண்ணப்பத்திற்குப் பதிலளித்தார்.

தேவனுடைய நினைவாற்றல் பரிபூரணமானது. தேவன் பல ஆண்டுகள் கடந்து மட்டுமல்ல, நமது ஆயுசு நாட்கருதி பல தலைமுறைகள் கடந்தாலும் நமது விண்ணப்பத்தை நினைவுகூர வல்லவர். அவர் நம் வேண்டுதலை நிறைவேற்ற காலம் தாழ்த்தினாலும் ஒருபோதும் அதை மறப்பதேயில்லை. சில வேளைகளில் அவருடைய பதில் ‘இல்லை’ என்றிருக்கலாம் அல்லது ‘காத்திரு’ என்றிருக்கலாம். ஆனால், எந்த பதிலும் அன்பின் அடிப்படையிலேயே இருக்கும். அவருடைய வழிகள் நமக்கு விளங்காமலிருக்கலாம்; ஆனால், அது நன்மைக்கேதுவானது என்று நாம் அதை நம்பலாம்.

சகரியா இதைக் அறிந்திருந்தான். அவர் ஒரு மகனைத்தான் கேட்டான். ஆனால் தேவன் அவன் கேட்டதற்கும் மேலானதைக் கொடுத்தார். அவனுடைய மகன் யோவான் வளர்ந்து மேசியாவின் வருகையை அறிவிக்கும் தீர்க்கதரிசியானான். சகரியாவின் அனுபவம் ஒரு முக்கிய சத்தியத்தை வலியுறுத்தி  நம்மை ஜெபம் பண்ண உற்சாகப்படுத்துகிறது.

தேவனுடைய வேளை அநேகமாக நம்முடைய வேளையாயிராது; என்றாலும் அதற்குக் காத்திருப்பது நல்லது.