சமீபத்தில் நாங்கள் எங்கள் 22 மாத பேரப்பிள்ளை இரவில் எங்களோடிருக்க முதன் முறையாக, அவளுடைய மூத்த சகோதரர்களில்லாமல் அவளை மட்டும் அழைத்துச் சென்றோம். அவள்மேல் அளவில்லாத அன்பையும் கரிசனையையும் பொழிந்தோம். அவள் செய்ய விரும்பின எல்லாவற்றையும் செய்வது சந்தோஷமாயிருந்தது.  அடுத்தநாள் அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு ‘குட்பை’ எல்லாம் சொல்லிவிட்டு வாசலுக்கு வந்தோம். ஆனால், மோரியா ஒரு வார்த்தையும் பேசாமல் தன் பையை எடுத்துக்கொண்டடு எங்களைப் பின்தொடர்ந்தாள்.

சட்டையில்லாமல் வெறும் ஜட்டியுடன் இரண்டு கால்களிலும் வேறுவேறு செருப்புகளை மாட்டிக்கொண்டு தாத்தா பாட்டி பின்னால் புறப்பட்ட இந்தக்காட்சி என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அதை நினைக்கும்பொழுதெல்லாம் சிரித்துக் கொள்வேன். தனக்காக மாத்திரம் தாத்தா பாட்டி செலவிட்ட அந்த நேரத்தை நினைத்து, எங்களோடு வர ஆசைப்பட்டாள்.

இன்னும் சரியாகப் பேசமுடியாவிட்டாலும், எங்கள் பேத்தி தான் நேசிக்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உணர்ந்துகொண்டாள். நாங்கள் மோரியாவினிடத்தில் காட்டிய அன்பு, தேவன் அவருடைய பிள்ளைகளிடத்தில் வைத்திருக்கும் அன்பிற்கோர் எடுத்துக்காட்டாகும். “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே, பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்! (1 யோவா. 3:1).

நாம் இயேசுவை நம்முடைய இட்சகராக விசுவாசிக்கும்பொழுது, அவர் நமக்காக மரித்து நம்மேல் பாராட்டின அளவற்ற அன்பை அறிந்துகொள்ள முடிகிறது (வச. 16). நாம் பேசுவதிலும், செய்வதிலும் அவரைப் பிரியப்படுத்துவதே நமது வாஞ்சையாக மாறுகிறது (வச. 6). நாம் அவரை நேசிக்கவும், அவரோடு நேரம் செலவிடவும் ஆசைப்படுகிறோம்.