பீஸ்ஸா ஆர்டர் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு ‘டோர் டெலிவரி’ செய்யும் வேலையை டேவி செய்துவந்தாள். அடுத்த டெலிவரி ஒரு வீடாயிருக்கும் என்று நினைத்தவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது வீடல்ல ஒரு தேவாலயம். டேவி குழப்பத்தோடு அந்த பெப்பரோனி பிஸ்ஸாவை எடுத்துக் கொண்டு தேவாலயத்தினுள் நுழைந்தபொழுது போதகர் அவளைச் சந்தித்தார்.

‘வாழ்க்கை உனக்கு எளிதாக இல்லையென்று சொல்லலாம் அல்லவா?’ என்று கேட்டார். அதற்கு டேவி ‘அப்படித்தான் ஐயா’ என்றாள். போதகர் சபையினர் கொடுத்த காணிக்கையாகிய 750 டாலரை இரண்டு தட்டுகளில் கொண்டுவந்து அவளுக்கு ஒரு அன்பளிப்பாகக் கொடுத்தார். அவளுக்குத் தெரியாமல் பிஸ்ஸா கடையினரிடம், மிகுந்த பண நெருக்கடியிலுள்ள ஒருவரிடம் பிஸ்ஸா கொடுத்தனுப்பக் கேட்டிருந்தார். டேவி மலைத்துப் போனாள். சில கடன்களை இப்பொழுது அவளால் அடைக்க முடியும்.

எருசலேமிலிருந்த ஆதி கிறிஸ்தவர்கள் பணக்கஷ்டத்தில் இருந்தபொழுது, ஒரு சபை அவர்களுக்கு உடனடியாக உதவியது. அவர்களே தரித்திரத்திலிருந்தும், கொடுப்பதை ஒரு சிலாக்கியம் என்று எண்ணி, தியாகமாகக் கொடுத்தார்கள் (2 கொரி 8:1-4). கொரிந்தியரும் நாமும் அவ்வாறே மனமுவந்து கொடுப்பதற்காக அவர்களை முன்மாதிரியாகப் பவுல் சுட்டிக் காட்டினார். நாம் நம் அபரிவிதமான செல்வத்திலிருந்து தேவையிலுள்ளவர்களுக்குக் கொடுக்கும் போது, தமது ஐஸ்வரியத்திலிருந்து நம்முடைய ஆவிக்குரிய தரித்திரத்தைப் போக்கக் கொடுத்த இயேசுவைப் பிரதிபலிக்கிறோம் (வச. 9).

டேவி அன்றைய தினம் சந்தித்த வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் தேவாலயத்தின் அன்பையும், உதாரத்துவத்தையும் பற்றி கூறினாள். மேலும் அதை முன்மாதிரியாக கொண்டு அன்று தனக்குக் கிடைத்த அன்பளிப்பை தேவையுள்ளவர்களோடு பகிர்ந்து கொண்டாள். தயாளம் பெருகியது. கிறிஸ்து மகிமைப்பட்டார்.