எனது தாயாரின் பிறந்த நாளுக்கு மறுநாள் எனது பிறந்த நாளாகும். நான் வாலிப வயதிலிருந்த பொழுது எனது பொருளாதார நிலைமைக்கு ஏற்ப எனது தாயாருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய என்ன பரிசைக் கொடுக்கலாம் என்று அதிகமாக யோசித்தேன். எனது கையிலிருந்த பணத்தைப் போட்டு எனது தாயாருக்கு பரிசு ஒன்று வாங்கி அவர்களுக்கு கொடுக்கும் பொழுது, எனது தாயார் அதை மிகவும் நன்றியுடனும், பாராட்டுடனும் ஏற்றுக் கொள்வார்கள். மறுநாள் வரும் எனது பிறந்த நாளுக்கு எனது தாயார் ஒரு வெகுமதியை எனக்கு பரிசாக அளிப்பார்கள் அவர்களது பரிசு நான் அவர்களுக்கு அறித்த பரிசை விட நிச்சயமாக மிகச் சிறந்ததாக இருக்கும். நான் அவர்களுக்கு அளித்த பரிசின் மதிப்பை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிச் செய்யவில்லை. ஆனால் என்னிடமுள்ள பணத்தைவிட அவர்கள் அதிகமாக பணம் வைத்திருந்த நிலைமைக்கு தகுந்தபடி தாராளமாக கொடுப்பார்கள்.

எனது தாயாருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற எனது விருப்பம், தேவனுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டும் என்று தாவீதின் விருப்பத்தை எனக்கு நினைப்பூட்டியது. அவன் வாழ்ந்து வந்த ஆடம்பரமான அரண்மனைக்கும், தேவன் அவரை வெளிப்படுத்தும் எளிமையான கூடாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு அவனை அதிகம் பாதித்தது. ஆகவே தேவனுக்கு ஓர் ஆலயம் கட்ட அதிகமாக விரும்பினான். தாவீதின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, மிகச் சிறந்த ஒரு பரிசை தேவன் தாவீதிற்கு அருளினார். தாவீதின் குமாரர்களின் ஒருவனாகிய சாலமோன் அவருக்கு ஆலயத்தை கட்டுவான் என்று கூறினதோடு, தேவன் தாவீதிற்கு ஒரு வீட்டை கட்டப்போவதாகவும், ஒரு இராஜ்ஜியத்தை அருளப்போவதாகவும் வாக்குப் பண்ணினார் (1 நாளா. 17:11). அந்த வாக்குத்தத்தம் சாலமோனில் ஆரம்பித்து இறுதியில் என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய (வச. 12) இராஜ்ஜியத்தையுடைய இயேசுவில் நிறைவேறியுள்ளது. தாவீது அழிந்து போகக்கூடிய அவனது ஆஸ்தியிலிருந்து தேவனுக்கு கொடுக்க விரும்பினான். ஆனால், தேவனோ என்றென்றும் அழியாமல் நிலைதிருக்கக்கூடிய ஒன்றை தாவீதிற்கு வாக்குப் பண்ணினார்.

தாவீதைப் போல நாமும் நமது நன்றி உணர்வினாலும், அன்பினாலும் தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்று எப்பொழுதும் உந்தப்படுவோம். தேவன் இயேசுவின் மூலமாக நமக்கு அருளிய அளவற்ற ஆசீர்வாதங்களை நாம் எப்பொழுதும் காணலாம்.