ஜே பப்டன் மருத்துவமனையிலிருந்த அவனது அறையை ஒரு கலங்கரை விளக்காக மாற்றிவிட்டான்.

கணவனாக, தகப்பனாக, உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக, விளையாட்டு பயிற்சியாளராக இருந்த 52 வயதுடைய ஜே பப்டன் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தான். ஆனால், 5020 என்ற எண்ணுடைய அவனது அறை, அவனது சினேகிதர்களுக்கு, குடும்ப அங்கத்தினர்களுக்கு, மருத்துவமனையில் பணி செய்பவர்களுக்கு வழிகாட்டும் ஒரு ஒளிவிளக்காக இருந்தது. ஜேவினுடைய ஆழமான விசுவாசம் அனைவரோடும் சந்தோஷமாக பழகும் தன்மை இவற்றினால் அவனது அறையில் பணிபுரிவதற்கு தாதிமார்கள் அதிகம் விரும்பினார்கள். சில தாதிமார் பணியிலில்லாத ஓய்வு நேரத்தில் கூட அவனைப் பார்க்க வந்தார்கள்.

ஒரு காலத்தில் விளையாட்டு வீரருக்கான அவனது திடகாத்திரமான உடல் வியாதியினால் மெலிந்து கொண்டிருந்த பொழுதும் அவனை பார்க்க வருபவர்கள் யாராக இருந்தாலும் ஊக்கத்தோடு கூடிய புன் சிரிப்போடு அவர்களை வாழ்த்துவான். “ஒவ்வொரு முறையும் நான் ஜேயை பார்க்கச் சென்ற பொழுது, அவன் மகிழ்ச்சியுடனும், நேர்மறை எண்ணங்களுடனும், நம்பிக்கையுடனும் இருந்தான். புற்று நோயால் ஏற்படுகிற மரணத்தை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் விசுவாசத்துடன் வாழ்ந்து வந்தான்” என்று அவனுடைய சினேகிதர்களில் ஒருவன் கூறினான்.

ஜேயின் அடக்க ஆராதனையில் பேசிய ஒருவர், ஜே இருந்த அறை எண் 5020ற்கு ஒரு சிறப்பான அர்த்தம் உண்டு என்று குறிப்பிட்டார். அவர் பேசின பொழுது ஆதியாகமம் 50:20ல் யோசேப்பை அவனது சகோதரர்கள் அடிமையாக விற்ற பொழுது, தேவன் அதை மாற்றி அமைத்து “வெகு ஜனங்களை உயிரோடு காக்கும்படி” தீமையை நன்மையாக மாற்றிவிட்டார். ஜேவின் வாழ்க்கையில் புற்றுநோய் பாதித்தது ஆனால், தேவனுடைய கரம் அவனது வாழ்க்கையில் செயல்படுவதை உணர்ந்த ஜே தேவன் எல்லாவற்றையும் நன்மையாகவே நடத்துவார் என்று கூறுமளவிற்கு விசுவாச வாழ்க்கையை நடத்தினான். ஆதனால்தான் புற்று நோயினால் ஏற்பட்ட வியாதியின் கோரத்தை இயேசுவைப்பற்றி பிறருக்கு அறிவிக்கும் திறந்த வாசலாகமாற்றினான்.

மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த பொழுதும் கூட நமது இரட்சகர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவராக இருந்தான். நமது நம்பிக்கைக்கு பாத்திரமான தேவன் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை, அவன் விட்டுச் சென்ற நம்பிக்கைக்கு தலை சிறந்த உதாரணமாகும்.