வாஷிங்டன் DCயில் உள்ள தேசீய கலைப் பொருட்களின் காட்சிக் கூடத்திற்கு நான் சென்றிருந்த பொழுது, “காற்று” என்ற தலைப்பின் கீழ் இருந்த உன்னதமான படைப்பு ஒன்றைப் பார்த்தேன். ஒரு காட்டுப் பகுதிக்குள் வீசும் புயலை அந்த ஒவியம் சித்தரித்தது. மெலிந்து வளர்ந்திருந்த மரங்கள் இடது பக்கமாக சாய்ந்திருந்தன. புதர்களும் அதே திசையில் மிக வேகமாக அசைந்திருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தன.

அந்தப் புயலைவிட மிக வல்லமையுடன் பரிசுத்த ஆவியானவர், விசுவாசிகளை தேவனுடைய சத்தியத்திற்கும், அவருடைய உண்மைத் தன்மைக்கும் நேராக அசையச் செய்கிறார். ஆவியானவர் நடத்தும் வழியிலே நாம் சென்றால், நாம் தைரியமுள்ளவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும் மாறுவோம் என்று எதிர்பார்க்கலாம். நம்முடைய ஆசைகளைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிந்த புத்தியை நாம் பெற்றுக் கொள்ளுவோம் (2 தீமோ. 1:7).

சில சூழ்நிலைகளில் நமது ஆவிக்கேற்ற வளர்ச்சியடையவும் மாற்றமடையவும் ஆவியானவர் நம்மை நெருக்கி ஏவும் பொழுது, நாம் செயல்பட மறுத்து விடுகிறோம். தொடர்ந்து நமது மனதில் ஏற்படும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காததை வேதாகமம் ஆவியை அவித்துப் போடல் (1தெச. 5:19) என்று கூறுகிறது. காலப்போக்கில் நாம், தவறு என்று எண்ணிய காரியங்கள், அவ்வளவு தவறாகத் தோண்றாது.

தேவனுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு துண்டிக்கப்பட்டு, தூரமாகச் சென்று விடுவோம். ஆவியானவர் தொடர்ந்து, நம்மை நெருக்கி ஏவுகையில் அவருடைய செயலிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாம் இருக்கும் பொழுது இந்த நிலை ஏற்படுகிறது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், பிரச்சனைக்கான அடிப்படைக் காரணத்தை நம்மால் கண்டுகொள்ள இயலாது. நமது பாவத்தை நமக்குக் காண்பிக்கும்படி தேவனிடம் மன்றாடி ஜெபிக்கலாம். தேவன் நம்மை மன்னித்து, அவரது ஆவியின் வல்லமையையும், அவரது ஆவியினால் ஏற்படும் தாக்கத்தையும் நமக்குள்ளாக புதிப்பிப்பார்.