2002 ஆம் ஆண்டு, என்னுடைய சகோதரி மார்த்தாவும் அவளுடைய கணவன் ஜிம்மும் ஒரு விபத்தில் மரித்து சில மாதங்கள் கடந்தபோது, எங்கள் ஆலயத்தில் நடைபெறும் ‘துக்கத்தின் வழியே வளருதல்’ என்ற கருத்துப் பட்டறைக்கு வருமாறு என்னை என் நண்பன் அழைத்தான். நான் தயக்கத்தோடு, தொடர்ந்து பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணமற்றவனாய், ஒருமுறை மட்டும் கலந்து கொள்கிறேன் என்றேன். என்ன ஆச்சரியம் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பை சமாளிக்க முயலும், தேவனுடைய உதவியையும் பிறரின் உதவியையும் தேடுகின்ற ஒரு கரிசனையுள்ள ஒரு மக்கள் குழுவை நான் அங்கு கண்டேன். என் துக்கங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளல் மூலம் சமாதானத்தைப் பெற்றுக் கொண்டபோது, அது மீண்டும் வாரா வாரம் மனமுவந்து செல்ல என்னை இழுத்துக் கொண்டது.

நாம் மிகவும் நேசித்த நண்பரின் திடீர் இழப்பினைப் போல, இயேசுவுக்கு ஒரு தீவிரமான சாட்சியாகிய ஸ்தேவானுடைய மரணமும், ஒரு அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஆரம்ப சபையின் மக்களிடையே கொண்டு வந்தது (அப். 7:57-60). துன்புறுத்தலின் மத்தியிலும் “தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம் பண்ண அவனுக்காக மிகவும் துக்கங் கொண்டாடினார்கள்” (8:2). இந்த உண்மையுள்ள மனிதர் இரு காரியங்களை இணைந்து செய்தனர். அவர்கள் ஸ்தேவானை அடக்கம் பண்ணினார்கள். அதாவது ஒரு இழப்பின் முடிவு காரியங்களைச் செய்தார்கள். மேலும் அவர்கள் அவனுக்காக துக்கம் கொண்டாடினார்கள். இது தங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு செயல்.

இயேசுவைப் பின் பற்றுகின்றவர்களாகிய நாம் நம் இழப்புகளைக் குறித்து தனியே துக்கிக்கத் தேவையில்லை. நம்மைக் காயப்படுத்தியவர்களையும் உண்மையோடும் அன்போடும் அணுக வேண்டும். நம் மீதுள்ள கரிசனையோடு நம்மோடு நிற்பவர்களையும் அவர்களது ஆறுதலையும் மனத்தாழ்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம்  இணைந்து துக்கிக்கும் போது நம் உள்ளங்களின் ஆழத்திலுள்ள துயரங்களையும் தெரிந்து வைத்திருக்கிற இயேசு கிறிஸ்து தருகின்ற சமாதானத்தை நாம் பெற்றுக்கொள்வதோடு ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதலிலும் வளருவோம்.