கிருபையைக் காண்பித்தல்!
ஆமெரிக்க மாஸ்டர்ஸ் கோல்ஃப் விளையாட்டுப் போட்டி கி.பி. 1934ல் ஆரம்பமானது முதல் மூன்று வீரர்கள் மட்டுமே இரு ஆண்டுகள் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். கி.பி. 2016 ஏப்ரல் 10 அன்று 22 வயதான ஜார்டன் ஸ்பயத் நான்காவதாக இவ்வாறு பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இறுதியான ஒன்பது குழிகளில் தவறு செய்து, இரண்டாவதாக வந்தார். ஏமாற்றமளிக்கும் தோல்வியிலும், சாம்பியன் பட்டம் வென்ற டேனி விலட்டிடம் பெருந்தன்மையோடு நடந்துகொண்ட ஸ்பயத், வில்லட்டைப் பாராட்டினார். அவருக்கு முதல் குழந்தை பிறந்தது கோல்ஃப் விளையாட்டைவிட முக்கியமானதெனக் கூறினார்.
இச்சம்பவத்தைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் சஞ்சிகையில் கெரின் கிரவுஸ் எழுதுகையில், “பரிசளிக்கும் விழாவில் பொறுமையாக அமர்ந்து, வேறொருவர் பரிசு பெற்று, புகைப்படங்கள் எடுக்கப்படுவதை கண்டு ரசிப்பதற்கு கிருபை தேவை. ஸ்பயத் ஒரு வாரம் பந்தை சரியாக அடிக்கவில்லை, ஆனாலும் பாதிக்கப்படாத அவரது நற்குணம் மேலோங்கி நின்றது” எனக் குறிப்பிட்டார்.
கொலோசெயிலுள்ள இயேசுவின் சீஷருக்கு பவுல் எழுதும்போது, “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்ககொள்ளுங்கள். அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” (கொலோ. 4:5) என வலியுறுத்துகிறார்.
தேவனுடைய கிருபையை இலவசமாகப் பெற்றுக்கொண்டவர்களாகிய நாம், வெற்றியோ தோல்வியோ கிருபையை வெளிப்டுத்திக் காண்பிப்பதை நமது சிலாக்கியமாகவும் அழைப்பாகவும் கொள்ள வேண்டும்.
வாழ்விற்காய் பயிற்சிபெறுதல்!
நீண்ட தூர ஓட்டப் பந்தயத்திற்கான எனது பயிற்சி சரியாக நடக்கவில்லை. சமீபத்தில் நான் ஓடிய ஓட்டம் மிகுந்த ஏமாற்றமளித்தது. பாதி தூரம் நடந்துதான் சென்றேன். ஒரு சமயத்தில் கீழே உட்கார்ந்தும் விட்டேன். ஒரு குட்டிப் போட்டியில் தோற்றுவிட்டதைப் போல் உணர்ந்தேன்.
பயிற்சியின் முழுக் குறிப்பே இதுதான் என்பதை அப்போது நினைவுகூர்ந்தேன். ஒரு பயிற்சியின் போது வெற்றிபெறுவதோ, ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணைப் பெறுவதோ முக்கியமில்லை. எனது சகிப்புத்தன்மையை மேம்படுத்த அதன் வழியாகத் திரும்பத் திரும்ப நான் கடந்து செல்ல வேண்டும்.
நீங்கள் இப்போது சந்திக்கிற சோதனையைத் குறித்து நீங்கள் கஷ்டமாய் உணரலாம். நமது ஆவிக்குரிய தசைநார்களையும் நமது சகிப்புத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வண்ணமாக இவ்வித அனுபவங்களைத் தேவன் நம் வாழ்வில் அனுமதிக்கிறார். கிறிஸ்துவைப் போல் இன்னும் சற்று அதிகமாக நாம் மாறும் வண்ணம் அவர் மீது சார்ந்திருக்க அவர் நமக்கும் போதிக்கிறார். நாம் பரிசுத்தமாகும்படி அவர் நம்மை சந்திக்கிறார்.
இஸ்ரவேல் மக்களை அக்கினியினாலும் தண்ணீரினாலும் தேவன் சுத்திகரித்தற்காக சங்கீதக்காரன் அவரைத் துதிப்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை (சங். 66:10-12). தேவன் அவர்களைப் பராமரித்து பாதுகாத்தது மட்டுமல்ல, மிகுந்த செழிப்பான பகுதிக்கு அவர்களைக் கொண்டு சென்றார். இடையில் அவர்களை சுத்திகரித்தார்.
சோதனையினுடாகச் செல்கையில், தேவனுடைய பெலத்திலும் இடைவிடாத பாதுகாப்பிலும் நாம் சார்ந்துகொள்ள முடியும். வாழ்வில் நமது கடினமான நேரங்களினூடாக அவர் நம்மை சுத்திகரிக்கிறார்.
சமாதானமும் நம்பிக்கையும்!
எனக்கு ஆறு வயதிருக்கும்போது எனது அண்ணன்களோடு சேர்ந்து ரோல்லர் கோஸ்டர் எனப்படும் அதி விரைவு ராட்டினத்தில் சவாரி செய்தேன். மிக வேகமாக ஒரு வளைவில் அது திரும்பியபோது “இதை உடனே நிறுத்துங்கள்! நான் கீழே இறங்க விரும்புகிறேன்” என அலற ஆரம்பித்தேன். அந்த ராட்டினம் நிற்கவில்லை. அது நிற்கும்வரை மிக இறுக்கமாக கையைப் பிடித்தவாறு நான் உட்கார வேண்டியதாயிற்று.
கொண்டை ஊசி வளைவுகளும் கீழ்நோக்கிய திடீர் இறக்கங்களும் கொண்ட, விரும்பப்படாத ரோலர் கோஸ்டர் சவாரியைப்போல நாம் சில சமயங்களில் நமது வாழ்வில் உணரலாம். எதிர்பாராத நெருக்கடிகள் நேரிடும்போது, நமது நம்பிக்கையைத் தேவனில் வைப்பதுதான் நமது சிறந்த துணையாதாரம் என வேதாகமம் நமக்கு நினைவூட்டுகிறது. அந்நியர் படையெடுப்பினால் தனது நாட்டுக்கு பயமுறுத்தல் இருந்த போராட்டமான காலத்தில், ஆவியானவரால் ஏவப்பட்ட ஏசாயா தீர்க்கதரிசி தேவன் அளித்த இந்த வல்லமைமிக்க வாக்குத்தத்தத்தை உணர்ந்து கொண்டார். “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).
அவர் பக்கம் நாம் திரும்பும்போது, நமது இரட்சகர் அளிக்கும் சமாதானம் “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்” (பிலி. 4:7) ஆகும். மார்பகப் புற்றுநோயில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் வார்த்தைகளை நான் எப்போதும் நினைப்பேன். ஒரு நாள் சாயங்காலம் எங்களது சபையைச் சார்ந்த ஒரு குழுவினர் அவளுக்காக ஜெபித்து முடித்த பிறகு அவள் சொன்னாள், “என்ன நடக்குமென்பது எனக்குத் தெரியாது, ஆனால், நான் நன்றாக இருப்பேன் என்று எனக்கு தெரியும். ஏனெனில் இன்றிரவு தேவன் நம்மோடு இருக்கிறார்.” வாழ்க்கையில் பல கஷ்டங்கள் உண்டு ஆனாலும் வாழ்வைக் காட்டிலும் அதிகமாக நம்மை நேசிக்கும் ஆண்டவர் நமது கஷ்டங்களைவிடப் பெரியவர்.
பேராசிரியரின் பாவ அறிக்கை
தனது மாணவர்களின் தரமற்ற எழுதும் பழக்கங்களினால் மிகவும் அதிர்ச்சியடைந்த எழுத்தாளரும் கல்லூரி பேராசிரியருமான டேவிட் ஃபோஸ்டர் வாலஸ், மாணவர்களது திறமையைத் தான் எவ்வாறு மேம்படுத்தக்கூடும் என யோசித்தார். அப்போதுதான் ஒரு திடுக்கிடும் கேள்வி அவர் முன் எழுந்தது. “ஆரவாரமிக்க, குறுகிய மனதுடைய, சுயநீதிமிக்க, கீழ்த்தரமான” தம்மைப் போன்ற ஒருவரிடம் கற்றுக்கொள்வதை எப்படி மாணவர்கள் விரும்புவார்கள் என்ற கேள்வியை அவர் தனக்குத் தானே கேட்க வேண்டியதாயிருந்தது. பெருமை என்னும் பிரச்சனை இருப்பதை அவர் அறிந்தார்.
அந்தப் பேராசிரியர் மாற முடியும், மாறினார். எனினும் தன்னுடைய மாணவரில் ஒருவராக அவர் மாற முடியாது. இயேசுவானவர் பூவுலகிற்கு வந்தபோது, நம்மில் ஒருவராக அவர் மாறியதன் மூலம் தாழ்மை இன்னதென்று அவர் நமக்குக் காண்பித்ததை அனைத்துவித எல்லைக் கோடுகளையும் தாண்டிய இயேசுவானவர், பிறருக்கு சேவை செய்வதிலும், போதிப்பதிலும், தமது பிதாவின் சித்தத்தைச் செய்வதிலும் மும்முரமாயிருந்தார்.
தாம் சிலுவையில் அறையப்பட்ட வேளையிலும், தம்மைக் கொலை செய்தவர்களை மன்னிக்குமாறு இயேசு ஜெபித்தார் (லூக். 23:34). வேதனையின் மத்தியிலும் தம்மோடு மரித்துக் கொண்டிருந்த குற்றவாளிக்கு அவர் நித்திய ஜீவனை அளித்தார் (வச. 42,43).
இயேசுவானவர் ஏன் அப்படி நடந்து கொண்டார்? நம்மைப் போன்ற மக்களுக்குத் தமது வாழ்நாள் இறுதி மட்டும் அவர் ஏன் சேவை செய்தார்? அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார். அன்பினால் அவர் அப்படிச் செய்தார்! மேலும், “ அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்” பின்பும் அவர் “நாமும் சகோதரருக்காக ஜீவனை கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1 யோவா. 3:16) என்றும் கூறுகிறார்.
அவரது அன்பு நமது பெருமை, ஆரவார மற்றும் கீழ்த்தரமான குணம் முற்றிலும் அகற்றுகிறது. அதை மிகவும் வல்லமையான விதத்தில் அவர் செய்தார். தமது ஜீவனையே அவர் கொடுத்தார்!
நொஸோமி நம்பிக்கை!
கி.பி. 2011ல் (9 ரிக்டர்) அளவிலான கொடிய பூகம்பமும் அதனால் ஏற்பட்ட சுனாமியும் டோக்கியோ நகரின் வடகிழக்கேயுள்ள பகுதியில் சுமார் 19,000 பேரைக் கொன்றது. 2,30,000 வீடுகள் அழிக்கப்பட்டது. ஜப்பானிய மொழியில் ‘நம்பிக்கை’ என்னும் அர்த்தமுடைய நொஸோமி திட்டம் பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான வருமானம், சமூக நலம், உரிய மரியாதை மற்றும் தேவன் அளிக்கும் நம்பிக்கை ஆகியவற்றை அளிக்க உருவாக்கப்பட்டது.
நொஸோமித் திட்டம் மூலம் பெண்கள், சிதைந்துபோன வீடுகள், மற்றும் உடைந்த மரச் சாமான்கள், உடைந்த பீங்கான் துண்டுகளைச் சேகரித்து பொடியாக்கி மணலோடு கலந்து நகைகளைச் செய்தனர். இந்த நகைகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டன. இந்தப் பெண்கள் அவற்றால் வருமானத்தைப் பெற்றதோடு, கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள தங்களது நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், அந்த நகைகள் உதவியது.
புதிய ஏற்பாட்டுக் காலத்தின் மண்ணால் செய்யப்பட்ட பாண்டங்களில் விலைமதிப்புள்ளவைகளை ஒளித்துவைப்பது வழக்கமாயிருந்தது. இயேசுவின் சீஷர்களது மண்பாண்டமாகிய சரீரங்களில் சுவிசேஷமானது பொக்கிஷமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதை ( 2 கொரி. 4:7) பவுல் இங்கு விளக்கிக் கூறுகிறார். மிகவும் சிறிதான, எளிதில் உடையக்கூடிய நமது வாழ்வென்னும் பாத்திரங்களில் நமது பரிபூரணமற்ற நிலையையும் தாண்டி, தேவ வல்லமை வெளிப்பட முடியுமென பவுல் கூறுகிறார்.
பூரணமற்ற, உடைந்த துண்டுகளான நமது வாழ்வில் தேவன் குடிகொள்ளும் போது, தேவ வல்லமையின் சுகமளிக்கும் நம்பிக்கையைப் பிறரால் நம்மில் காணக்கூடும். ஆம், அவர் நம்மைச் சீர்ப்படுத்தும்போது, நமது இருதயங்களில் சில சிறு கீறல்களும் தழும்புகளும் தோன்றலாம். ஆனால், நம்மில் ஏற்படும் அச்சிறு கோடுகள் அவரது குணாதிசயத்தை பிறருக்கு இன்னும் அதிகமாக காண்பிக்கக் கூடும்.