நீண்ட தூர ஓட்டப் பந்தயத்திற்கான எனது பயிற்சி சரியாக நடக்கவில்லை. சமீபத்தில் நான் ஓடிய ஓட்டம் மிகுந்த ஏமாற்றமளித்தது. பாதி தூரம் நடந்துதான் சென்றேன். ஒரு சமயத்தில் கீழே உட்கார்ந்தும் விட்டேன். ஒரு குட்டிப் போட்டியில் தோற்றுவிட்டதைப் போல் உணர்ந்தேன்.

பயிற்சியின் முழுக் குறிப்பே இதுதான் என்பதை அப்போது நினைவுகூர்ந்தேன். ஒரு பயிற்சியின் போது வெற்றிபெறுவதோ, ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணைப் பெறுவதோ முக்கியமில்லை. எனது சகிப்புத்தன்மையை மேம்படுத்த அதன் வழியாகத் திரும்பத் திரும்ப நான் கடந்து செல்ல வேண்டும்.

நீங்கள் இப்போது சந்திக்கிற சோதனையைத் குறித்து நீங்கள் கஷ்டமாய் உணரலாம். நமது ஆவிக்குரிய தசைநார்களையும் நமது சகிப்புத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வண்ணமாக இவ்வித அனுபவங்களைத் தேவன் நம் வாழ்வில் அனுமதிக்கிறார். கிறிஸ்துவைப் போல் இன்னும் சற்று அதிகமாக நாம் மாறும் வண்ணம் அவர் மீது சார்ந்திருக்க அவர் நமக்கும் போதிக்கிறார். நாம் பரிசுத்தமாகும்படி அவர் நம்மை சந்திக்கிறார்.

இஸ்ரவேல் மக்களை அக்கினியினாலும் தண்ணீரினாலும் தேவன் சுத்திகரித்தற்காக சங்கீதக்காரன் அவரைத் துதிப்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை (சங். 66:10-12). தேவன் அவர்களைப் பராமரித்து பாதுகாத்தது மட்டுமல்ல, மிகுந்த செழிப்பான பகுதிக்கு அவர்களைக் கொண்டு சென்றார். இடையில் அவர்களை சுத்திகரித்தார்.

சோதனையினுடாகச் செல்கையில், தேவனுடைய பெலத்திலும் இடைவிடாத பாதுகாப்பிலும் நாம் சார்ந்துகொள்ள முடியும். வாழ்வில் நமது கடினமான நேரங்களினூடாக அவர் நம்மை சுத்திகரிக்கிறார்.