மிகவும் கவனமாகத் தேடுதல்!
எங்களது மகள் உயர் நிலைப்பள்ளி குழு ஓட்டப்பந்தயக் குழுவில் ஓடும் போது, எங்களது குடும்பத்தினர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பந்தய மைதானத்தில் ஓரத்தில் வரிசையாக நின்று அவளை உற்சாகப்படுத்தி கோஷமிடுவோம். பந்தயத்தின் முடிவு கோட்டைத் தொட்டபின் விளையாட்டு வீரர்கள் கூட்டமாக வெளியே வந்து தங்களது சக வீரர்களையும் பயிற்சியாளர்களையும் பெற்றோரையும் சந்திப்பர். 300-க்கும் மேற்பட்ட கூட்டத்தினர் அவர்களை அப்படியே சூழ்ந்துகொள்வதால், அக் கூட்டத்தில் யாராவது ஒருவரை காண்பது மிகவும் சிரமமானது. நாங்கள் எங்களது மகளை தேடி கண்டுபிடித்து, நாங்கள் காணவிரும்பிய அந்த ஒரே ஒரு வீராங்கனையை உற்சாகமாய் கட்டித் தழுவுவோம். அவள் எங்களது அன்பான மகள்.
பாபிலோனில் 70 ஆண்டுகள் சிறைப்பிடிக்கப்பட்ட பின், தேவன் யூதர்களை எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பப் பண்ணினார். தேவன் அவர்கள் மீது கொண்டிருந்த மகிழ்ச்சியையும், அவர்கள் யாத்திரையாக சொந்த வீட்டிற்குத் திரும்புவதற்காக வழிகளை ஆயத்தம் பண்ணின அவரது கிரியைகளையும் அவர்களை வரவேற்க வாசல்களைத் தேவன் ஆயத்தமாக்கினதையும் ஏசாயா விரிவாக எடுத்துரைக்கிறார். அவர்கள் தமது பரிசுத்த ஜனமென்பதை உறுதிப்படுத்தும் கர்த்தர், அவர்களது பெருமையை புதிய நாமத்தின் மூலம் திரும்பக் கொண்டுவருகிறார். “தேடிக்கொள்ளப்பட்டதென்றும் புதிய நகரமென்றும் பெயர் பெறுவாய்” (62:12) பாபிலோனில் சிதறடிக்கப்பட்ட அவர்கள் அனைவரையும் தேடிச் சேர்த்து, தம்மிடம் திரும்பிய அவர்களை அழைத்துவந்தார்.
இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, தேவனால் கவனமாகத் தேடப்படும் தேவனுடைய அன்பான பிள்ளைகளாய் நாம் இயேசுவானவரின் தியாகபலி திரும்பவும் நம்மைத் தேவனிடம் கொண்டுசேர்க்கிறது. நம்மை மனதாரத் கட்டித் தழுவும்படி நம் ஒவ்வொருவரையும் கவனமாய்த் தேடும் அவர், அந்தத் தருணத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
பாம்பும் மூன்று சக்கர சைக்கிளும்!
கானா நாட்டில் நானும் எனது சகோதரனும் சிறு குழந்தைகளாயிருந்த போது நடந்த ஒரு கதையை நான் பல முறை கூறிவந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தபடி எனது சகோதரன் ஒரு நல்ல பாம்பின் மேல் தனது பழைய, இரும்பாலான மூன்று சக்கர சைக்கிளை நிறுத்திவிட்டான். மிகவும் கனமான அந்த சைக்கிளின் முன் சக்ககரத்தில் அந்தப் பாம்பு சிக்கிக்கொண்டது.
எனது தாயாரும் சித்தியும் மரித்தபின், இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட எனது தாயாரின் கடிதத்தை நாங்கள் கண்டெடுத்தோம். உண்மையில், அந்தப் பாம்பின் மேல் சைக்கிளை நிறுத்தியது நான்தான் என்றும், அதை என் தாயாருக்கு என் சகோதரன் அறிவிக்க ஓடினான் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை நேரடியாக கண்ணால் பார்த்த என் தாயாரின் வார்த்தைகள் உண்மையை வெளிப்படுத்தின.
துல்லியமான பதிவுகளின் முக்கியத்துவத்தை லூக்கா அறிந்திருந்தார். எவ்வாறு இயேசுவின் சரிதை “ ஆரம்ப முதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தார்கள்” (லூக். 1:2) என்றும், “அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று” (வச. 4) என்றும் லூக்கா விளக்கமளிக்கிறார். தேயோப்பிலுவுக்கு அவர் எழுதுகையில், “…உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும்” (வச. 3) என்று கூறுகிறார். இவ்வாறாக உருவானதுதான் லூக்கா சுவிஷேம். பின்பாக, அப்போஸ்தலர் நடபடிகளின் முகவுரையை எழுதும் லூக்கா, “அவர் பாடுபட்ட பின்பு, இயேசுவானவர் அநேக தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்” (அப். 1:3) என எழுதியுள்ளார்.
நமது விசுவாசமானது மற்றவர்கள் நமக்குச் சொன்னதைச் சார்ந்தோ, மற்றவரது விருப்பநிலை சார்ந்தோ கிடையாது. அது தேவனோடு மனிதருக்குச் சமாதானம் உண்டாக்க வந்த இயேசுவானவரின் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ள வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இயேசுவானவரின் கதை நிலைத்து நிற்கிறது!
கவர்ச்சிக்கப்படுதல்!
கி.பி. 2016ன் கோடைகாலத்தில், போக்கிமேன் கோ எனப்படும் ஸ்மார்ட்போனில் விளையாடும் விளையாட்டை விளையாடுமாறு எனது அக்கா மகள் என்னைக் கட்டாயப்படுத்தினாள். இது போனின் கேமரா உதவியால் விளையாடுவது. போக்கிமேன் என்றழைக்கப்படும் சிறிய ஜீவன்களைப் பிடிப்பதே இவ்விளையாட்டின் நோக்கம். ஒரு போக்கிமேன் விளையாட வரும்போது, போனின் திரையில் ஒரு சிவப்பு, வெள்ளை பந்துகள் தோன்றும். ஒரு போக்கிமேனைப் பிடிக்க விளையாடுபவர் தனது விரலால் பந்தை கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அவற்றைப் வசப்படுத்த ஒரு கவர்ச்சிப் பொருளைப் பயன்படுத்தும் போது போக்கிமேன்கள் எளிதாக பிடிபட்டுவிடுகின்றன.
கவர்ச்சியினால் பிடிபடுபவை போக்கிமேன் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல விசுவாசிக்கு தான் எழுதும் புதிய ஏற்பாட்டு மடலில், இயேசுவானவரின் இளைய சகோதரரான யாக்கோபு, “அவனவன் தன்தன் இச்சையினால் இழுக்கப்படுகிறான்” (1:14) என்று நினைவு படுத்துகிறார். வேறு விதமாய்ச் சொல்ல வேண்டுமெனில், நம்மைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும்படி, சோதனையுடன் நமது இச்சைகள் இணைந்து செயல்படுகின்றன. நமது பிரச்சனைகளுக்காக தேவனையோ அல்லது சாத்தானையோ குறை கூற நாம் எத்தனித்தாலும், உண்மையாய் ஆபத்து நமக்குள்தான் இருக்கிறது.
ஆனால், நல்ல செய்தி இருக்கிறது. நம்மைச் சோதனைக்குட்படுத்துகின்ற காரியங்களைக் குறித்து தேவனிடம் பேசுவதன் மூலம் சோதனையின் கவர்ச்சியிலிருந்து நாம் தப்பலாம். மேலும் யாக்கோபு விளக்குகிறார்: “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” (1:13). நமது மனித சுபாவம் தவறைச் செய்ய வாஞ்சையாயிருப்பது தேவனுக்குத் தெரியும் தேவன் நமக்கு வாக்களித்துள்ள ஞானத்தை நாம் அவரிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் (1:1-6).
மற்றவரது நலன்கள்!
எனது நண்பனாகிய ஜெய்மி ஒரு பெரிய சர்வதேச நிறுவனத்தில் பணி புரிகிறான். அந்நிறுவனத்தில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் ஒரு மனிதன் அவனது மேஜைக்கு வந்து, பேச ஆரம்பித்தான். ஜெய்மிக்கு அங்கு என்ன வேலையென வினவினான். தனது வேலையைப் பற்றிக் கூறிய ஜெய்மி அவனது பெயரைக் கேட்டான். “என் பெயர் ரிக்” எனப் பதிலளித்தான் அவன்.
“உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இங்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” ஜெய்மி கேட்டான்.
“ம்ம்! நான் இந்நிறுவனத்தின் உரிமையாளர்”
இந்த சாதாரணமான, தாழ்மையான உரையாடல்தான் உலகிலேயே மிகவும் பெரிய பணக்காரர்களில் ஒருவரோடு தனது அறிமுகம் என்று ஜெய்மி திடீரென்று புரிந்து கொண்டான்.
தன்னைத் தானே உயர்த்துவதும் பெருமைப்பட்டுக் கொள்ளுவதும் பெருகிப்போன இந்த நாட்களில் இந்தச் சிறிய சம்பவம் பவுல் பிலிப்பியர் நிருபத்தில் எழுதியதை நமக்கு நினைவுபடுத்துகிறது: “ஒன்றையும் வாதினாலாவது வீண பெருமையினாலாவது செய்ய வேண்டாம்” (2:3). தங்களது நலனையல்ல பிறரது நன்மையைத் தேடுகிறவர்கள் பவுல் குறிப்பிடும் குணாதிசயத்தைப் பெற்றவர்கள்.
பிறரை நம்மைவிட மேன்மையானவர்களாக எண்ணும்போது (வச. 3) கிறிஸ்துவின் எளிமையை நாம் வெளிப்படுத்துகிறோம். ஊழியம் கொள்ளுபடி வராமல் ஊழியஞ்செய்யும்படி வந்த இயேசுவை நாம் பிரதிபலிக்கிறோம். (மாற். 10:45). அடிமையின் சுபாவத்தை நாம் ஏற்றுக்கொள்ளுகையில் (பிலி. 2:7) இயேசுவின் சிந்தையை நாம் பெறுகிறோம் (வச. 5).
இன்று நாம் பிறறோடு தொடர்புகொள்ளும்போது, நமக்கானவைகளை மட்டும் பராமல் பிறருக்கானவைகளையும் நோக்கக் கடவோம் (வச. 4).
குற்ற உணர்வு போய்விட்டது!
சிறுமியாயிருக்கையில், என் வீட்டின் அருகிலிருந்த பரிசுப் பொருட்கள் கடைக்கு எனது தோழியை கூட்டிக்கொண்டு சென்றேன். அவளது செய்கை என்னை அதிர்ச்சிகுள்ளாக்கிற்று. வண்ணமிக்க சிறு பென்சில்களை அள்ளி எனது பையிள் திணித்த அவள் அவைகளுக்காக பணம் செலுத்தாமல் என்னை இழுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டாள். ஒரு வாரமாக குற்ற உணர்வு என்னை வாதித்தது. எனது அம்மாவிடம் சென்று கண்ணீரோடு என் தவறை அவரிடம் அறிக்கையிட்டேன்.
எனது தோழி தவறு செய்தபோது அதை எதிர்க்காதற்காக மனம் வருந்திய நான், திருடப்பட்ட பொருட்களை அந்தக் கடையில் கொடுத்து, இனி ஒருபோதும் நான் திருடமாட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டேன். தன் கடைக்கு இனிமேல் நான் வரக்கூடாதென கடை உரிமையாளர் கூறினார். ஆனால் எனது அம்மா என்னை மன்னித்துவிட்டபடியாலும், நடந்ததைச் சரிசெய்ய உரியதை நான் செய்துவிட்டேன் என அவர் உறுதிசெய்ததாலும் அன்றிரவு நான் நிம்மதியாகத் தூங்கினேன்.
இராஜாவாகிய தாவீதும் அறிக்கையிடுவதால் கிடைக்கும் மன்னிப்பை அதிகம் சார்ந்திருந்தான் (சங். 32:1-2) அவனது எலும்புகள் உலர்ந்துபோகுமட்டும் (வச. 3). அவன் பத்சேபாள் மற்றும் உரியாவுக்கெதிரான தனது பாவத்தை மறைத்துவைத்தான் (2 சாமு. 11-12). ஆனால் தாவீது தனது தவறுகளை மறைக்க மறுத்தபோது தேவன் அவனது குற்ற உணர்வை எடுத்துப் போட்டார் (வச. 5). தேவன் அவனை இக்கட்டுக்கு விலக்கிக் காத்து இரட்சண்யப் பாடல்களால் அவனைச் சூழ்ந்து கொண்டார் (வச. 7). “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்” என்பதினால் தாவீது அகமகிழ்ந்தான் (வச. 10).
பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பைத் தேடும்போது, நமது பாவங்களுக்கான விளைவுகளை நாம் தேர்ந்தெடுக்க முடியாது அல்லது ஜனங்களின் மாறுத்தரங்களை நாம் கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால், பாவங்களை அறிக்கையிடுவதன் மூலமாக பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையும் சமாதானத்தையும் நாம் பெற்று மகிழ தேவன் நமக்கு வல்லமை அளிக்கிறார். நமது பாவம் என்றென்றும் மறைந்துபோனதை தேவன் உறுதிப்படுத்துகிறார்.