Archives: மார்ச் 2017

தவறுகள் ஏற்பட்டன

சட்டவிரோத செயல்களில் தன் நிறுவனம் ஈடுபட்டதைக்குறித்து விவாதிக்கும்பொழுது, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, “தவறுகள் ஏற்பட்டன” எனக் கூறினார், வருத்ததுடன் அவர் காணப்பட்டார். ஆனாலும் அவருக்கும், அத்தவறுகளுக்கும் தனிப்பட்ட விதத்தில் சம்பந்தம் ஏதுமில்லை என்பது போல அக்குற்றங்களை விட்டு ஒரு அடி தூரம் தள்ளியே நின்றார்.

சில “தவறுகள்” வெறும் தவறுகள்தான்: அதாவது தவறான திசையில் வாகனத்தை ஓட்டுவது, இரவு உணவை அடுப்பில் கருக வைப்பது, உங்கள் ‘செக்புக்கில்’ மீதம் காசோலைகள் இருக்கின்றனவா என கவனியாமல் போவது போன்றவை தவறுகள்தான். ஆனால் இதையும் தாண்டி, நன்கு தெரிந்தே செய்யப்படும் ‘தவறுகளை’ தேவன் ‘பாவம்’ எனக் கூறுகிறார். ஆதாமும், ஏவாளும் கீழ்ப்படியாமல் போனதைக் குறித்து தேவன் அவர்களிடம் விசாரித்தபொழுது, உடனடியாக அவரவர் குற்றத்தை இன்னொருவர் மேல் சுமத்த முயன்றனர் (ஆதி. 3:8-13). வனாந்திரத்திலே இருந்த இஸ்ரவேலர் தாங்கள் ஆராதிக்கும்படியாய் தங்கத்தினால் ஒரு கன்றுக் குட்டியை உருவாக்கியபொழுது, அதைக்குறித்து தான் எவ்விதத்திலும் பொறுப்பேற்க ஆரோன் மறுத்தான். “பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது,” என்று மோசேயிடம் கூறினான் (யாத். 32:24).

“தவறுகள் ஏற்பட்டன,” என ஒருவேளை அவன் முணுமுணுத்திருக்கக் கூடும்.

சில சமயங்களில் நம்முடைய தவறுகளை நாம் ஒப்புக்கொள்வதைக்காட்டிலும் பிறர் மீது அதை சுமத்துவது நமக்கு சுலபமாகத் தோன்றுகிறது.

ஆனால் நாம் நம்முடைய பாவங்களுக்கு பொறுப்பேற்று, அப்பாவங்களை ஒப்புக்கொண்டு அறிக்கையிடும்பொழுது, தேவன், “பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோ. 1:9). நம்முடைய தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு மன்னிப்பையும், புதிய வாழ்வையும் அளிக்கிறார்.

உருவப்படத்தை வரைதல்

இங்கிலாந்து தேசத்தின் லண்டன் மாநகரிலுள்ள தேசிய புகைப்படக்கூடத்தில் பல நாற்றாண்டுகளுக்குரிய உருவப்படங்கள் உள்ளன. வின்ஸ்டன் சர்ச்சிலின் (Winston Churchill) 166 உருவப்படங்களும், வில்லியம் ஷேக்ஸ்பியரின் (William Shakespeare) 94 உருவப்படங்களும், ஜார்ஜ் வாஷிங்டனின் (George Washington) 20 உருவப்படங்களும் உண்டு. இந்தப் பழைய உருவப் படங்களைப் பார்க்கும்பொழுது, ‘உண்மையாகவே இவர்களெல்லோரும் இப்படித்தான் இருந்தார்களா?’ என எண்ணத் தோன்றும்.

உதாரணத்திற்கு, ஸ்காட்லாந்து (Scotland) தேசபக்தர் வில்லியம் வாலஸின் (William Wallace கி. பி. 1270-1305) 8 உருவப்படங்கள் இங்கு உள்ளன. ஆனால் அவற்றின் நேர்த்தியை ஒப்பிட்டுப் பார்க்க அவரது வேறு புகைப்படங்கள் நம்மிடம் இல்லை. அப்படியிருக்க, அவ்வோவியர்கள் வாலஸ்சை துல்லியமாக வரைந்துள்ளார்களா இல்லையா என நமக்கு எப்படித் தெரியும்?

இயேசுவின் சாயலைப் பிரதிபலிக்கும் விஷயத்திலும் இதுதான் நடக்கிறது என்று கூறலாம். நம்மை அறியாமலேயே இயேசுவை விசுவாசிக்கிறவர்களாகிய நாம் இயேசுவை குறித்து ஒரு கருத்துப்பதிவை அல்லது இயேசுவை பற்றிய ஒரு உருவகத்தை பிறரிடம் ஏற்படுத்திவிடுகிறோம். இதை வர்ணங்களினால் அல்ல மாறாக நம்முடைய அணுகுமுறை, செய்கைகள் மற்றும் உறவுகளின் மூலமே தீட்டுகிறோம்.

ஆனால், இயேசுவின் இருதயத்தை அவ்வண்ணமே பிரதிபலிக்கும் ஓவியத்தைத் தீட்டுகிறோமா? இதுதான் அப்போஸ்தலனாகிய பவுலின் அக்கறையுள்ள கேள்வியும் கூட. “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என அவர் எழுதியுள்ளார் (பிலி. 2:5). இயேசுவை மிகத் துல்லியமாக பிரதிபலிக்க விரும்பிய பவுல், அவரை பின்பற்றுகிறவர்களாகிய நாம் அனைவரும் இயேசுவின் தாழ்மையையும், தன்னலமற்ற தியாகத்தையும், இரக்கத்தையும் பிரதிபலிக்கும்படி அன்பாய் நம்மை தூண்டுகிறார்.

“ஒருவேளை தங்கள் வாழ்வில் சிலர் காணும் இயேசு நாமாக மாத்திரமே இருக்கக்கூடும்,” என ஒரு கூற்றுண்டு. “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (வச. 3) என்கிற வசனத்தின்படி நடப்போமானால் இயேசுவின் இருதயத்தையும், மனதையும் இவ்வுலகிற்கு அவ்வண்ணமே பிரதிபலிப்போம்.

அலைகளின் அதிபதி

அரசனாகிய கன்யூட் (Canute) 11ஆம் நூற்றாண்டில் பூமியில் வாழ்ந்த மிக சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர். அவரைப்பற்றி புகழ்பெற்ற ஒரு கதை உண்டு. அதாவது, அவர் தன்னுடைய நாற்காலியை கடற்கரையோரமாக போடக் கட்டளையிட்டு, பின்பு சீறும் கடலைப் பார்த்து, “நீ என் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறாய். ஆகவே என்னுடைய தேசத்திலே நீ எழும்பவும் கூடாது என்னுடைய ஆடைகளையோ, கை, கால்களையோ நனைக்கவும் கூடாது என உனக்கு நான் ஆணையிடுகிறேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் அலை எழும்பி ராஜாவின் கால்களை நனைத்தது.

கன்யூட்டின் பெருமையை குறித்து உரைக்கவே இக்கதை அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இது தாழ்மையை குறித்ததான கதை. ஏனென்றால், “அவரையன்றி வானமும், பூமியும், கடலும் கீழ்ப்படியாது, ராஜாக்களின் வல்லமை வெறுமையானது என்று உலகமனைத்தும் அறிந்து கொள்ளட்டும்,” என அச்சம்பவத்திற்கு பின்பு கன்யூட் கூறினார். தேவன் ஒருவரே ஒப்பற்ற வல்லமை பொருந்தியவர் என்பதை கன்யூட்டின் கதை குறிப்பிடுகிறது.

இதைத்தான் யோபுவும் கண்டறிந்தான். பூமியின் அஸ்திபாரங்களை போட்டவரோடு (யோபு 38:4-7), காலைப்பொழுது தோன்றவும், இரவு நேரம் முடியவும் கட்டளையிட்டவரோடு (வச. 12-13), பனியை பண்டசாலையில் சேர்த்து வைப்பவரோடு (வச. 22), நட்சத்திரங்களை வழிநடத்துபவரோடு (வச. 31-33) நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் மிகவும் அற்பமானவர்களே. அலைகளை அரசாளுபவர் ஒருவரே. கண்டிப்பாக அது நாமல்ல (வச. 11; மத். 8:23-27).

ஒருவேளை நம்மை நாமே மிஞ்சின அறிவாளியாகவோ, பெருமையாகவோ எண்ணத் தொடங்கினால், கன்யூட்டின் கதையை நமக்கு நாமே நடித்துக் காட்டிக்கொண்டால் நலமாயிருக்கும். கடலோரம் சென்று அலைகளை நிற்கச் சொல்லுங்கள் அல்லது சூரியனை சற்று நகரச்சொல்லுங்கள். அப்பொழுது எல்லோரிலும் மேன்மையானவரை நினைவுகூர்ந்து, நம்முடைய வாழ்வை அவர் அரசாளுவதற்காக நன்றி கூறுவோம்.

பரிபூரணமாக நேசித்தல்

தன் மகளுடன் தனக்கிருக்கும் பிரச்சனைகளை பகிர்ந்துகொண்ட பொழுது அவளுடைய குரல் தழுதழுத்தது. தன்னுடைய மகளின் கேள்விக்குரிய நண்பர்களை குறித்து கவலையுற்ற இத்தாய் அவளுடைய கைப்பேசியை பறித்துக்கொண்டு தன் மகள் செல்லும் இடமெங்கும் அவளுடைய மெய்க்காப்பாளர் போல கூடவே சென்றாள். இதனால் அவர்களுடைய உறவில் மேலும் விரிசல் அதிகமாகவே செய்தது.

நான் அப்பெண்ணின் மகளிடம் பேசிய பொழுது, அவள் தன் தாயாரை அதிகமாய் நேசிக்கிறாள் என்பதை அறிந்துகொண்டேன். ஆனால் தன் தாயாருடைய அதீத அன்பினால் மூச்சுத்திணறிக் கொண்டிருந்தபடியால், அத்தாயாரின் பிடியிலிருந்து வெளியேறவே விரும்பினாள்.

குறைவுள்ளவர்களாகிய நாம் அனைவரும் நம்முடைய உறவுகளில் போராடுகிறோம். நாம் பெற்றோராக இருப்பினும் பிள்ளையாக இருப்பினும், திருமணம் ஆனவரோ ஆகாதவரோ, யாராயிருப்பினும், நம்முடைய அன்பை சரியான விதத்திலே வெளிப்படுத்த போராடுகிறோம், சரியானதை சரியான நேரத்திலே கூறவும், செய்யவும் கூட போராடுகிறோம். நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் அன்பிலே வளர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.

1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்திலே பவுல் பூரணமான அன்பு எப்படி காணப்படும் என சுருக்கமாகக் கூறுகிறார். பரிபூரண அன்பின் தரநிலையை கேட்பதற்கு அற்புதமாகத்தான் உள்ளது. ஆனால், அவ்வன்பை கடைப்பிடிப்பது முற்றிலும் சவாலான காரியம். ஆனால் நல்லவேளை, இயேசு நமக்கு மாதிரியாக உள்ளார். அவர் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் தேவைகளோடு வந்த மக்களிடம் பழகிய விதம், பரிபூரண அன்பு செயலில் எப்படி காணப்படும் என்பதை நமக்கு காண்பித்துள்ளார். நாம் நம்மை அவருடைய அன்பில் நிலைநாட்டி, நம் மனதை அவருடைய வார்த்தையில் மூழ்கச்செய்து அவரோடு கூட நடப்போமானால், அவருடைய சாயலை நாம் அதிகதிகமாக பிரதிபலிப்போம். இருப்பினும் நாம் தவறுகள் செய்யக்கூடும். ஆனால் அவற்றையெல்லாம் சரிசெய்து எல்லா நிலையிலும் நன்மையைக் காணச்செய்வார். ஏனெனில், அவருடைய அன்பு “சகலத்தையும் தாங்கும் (பாதுகாக்கும்),” (வச. 7) “அது ஒருக்காலும் ஒழியாது” (வச. 8).

வரவேற்கும் வரம்!

ஐந்து நாடுகளிலிருந்து வந்திருந்த குடும்பங்களுக்கு இரவு விருந்தளித்தது எங்களுக்கு என்றும் நீங்கா ஒரு அற்புதமான நினைவு. எப்படியோ அன்று எங்கள் உரையாடல் ஜோடி ஜோடியாக பிரிந்து காணப்படாமல், லண்டன் மாநகரில் வசிப்பதைக் குறித்து உலகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்தவர்கள் அவரவருடைய கண்ணோட்டத்தை பகிர்ந்துகொண்டனர். அன்றைய தினத்தின் முடிவிலே அக்கூடுகையை குறித்து நானும், என் கணவரும் சிந்தித்தபொழுது, நாங்கள் அவர்களுக்கு அளித்ததைக் காட்டிலும் பெற்றுக்கொண்டதே அதிகம் என்பதை உணர்ந்தோம். வெவ்வேறு கலாசாரங்களைப் பற்றி அறிந்துக்கொண்டது மட்டுமன்றி, பல புதிய நட்புகள் கிடைத்ததினால் சந்தோஷமும் மனநிறைவும் அடைந்தோம்.

எபிரெய புத்தகத்தின் ஆசிரியர் அப்புத்தகத்தின் முடிவிலே சமுதாய வாழ்விற்கு தேவையான புத்திமதிகளைக் கூறி முடிக்கிறார். அதில், முன்பின் அறியாதவர்களைக் கூட வரவேற்று உபசரிக்கும்படி தன் வாசகர்களுக்கு கூறுகிறார். ஏனெனில் அப்படிச் செய்யும்பொழுது, “சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு,” எனக் கூறுகிறார் (13:2). அவர் ஆபிரகாமையும், சாராளையும் மனதில் வைத்து அப்படிக் கூறியிருக்கலாம். ஏனென்றால் முன்பின் அறியாத மூன்று நபர்களை அவர்கள் வரவேற்று அக்கால வழக்கத்தின்படியே அவர்களுக்கு தாராளமாய் விருந்து அளித்து அனுப்புவதைக் குறித்து ஆதியாகமத்தில் காணலாம் (18:1-12). ஆபிரகாமும், சாராளும் தங்களுக்கு ஆசீர்வாதமான செய்தியைக் கொண்டுவந்த தேவதூதர்களை உபசரித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள்.

ஏதாவதொரு ஆதாயத்தை பெற்றுக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தோடு நாம் பிறரை நம் வீட்டில் உபசரிக்கக்கூடாது, ஆனாலும் அநேகந்தரம், நாம் கொடுப்பதைக்காட்டிலும் அதிகமாகவே பெற்றுக்கொள்கிறோம். கர்த்தர் நமக்கு அளித்த நல்வரவை நாம் பிறர்க்கு அளிக்கும் பொழுது, அவர் தம்முடைய அன்பை நம்மூலம் பரந்து விரிந்திடச் செய்வார்.