கிழக்கும் மேற்கும் சந்திக்கையில்
தென்கிழக்கு ஆசியாவில் இருந்த மாணவர்கள் வட அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு ஆசிரியரைச் சந்தித்த பொழுது, அந்த ஆசிரியர் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டார். சரியான விடையைத் தேர்வு செய்யும் தேர்வை அவரது மாணவர்களுக்கு நடத்தின பொழுது, அநேக கேள்விகளுக்கு எந்த பதிலையும் தேர்வு செய்யாததைக் கண்டு ஆச்சரியமுற்றார். திருத்திய தாள்களை தரும்பொழுது, அடுத்த முறை தேர்வு எழுதும் பொழுது, பதிலை எழுதாமல் இருப்பதை விட எதோ ஒரு பதிலை யூகித்து தேர்வு செய்யுமாறு அவர்களுக்கு அறிவுரை சொன்னார். ஒரு மாணவன் ஆச்சரியத்துடன் கையை உயர்த்தி, “தற்செயலாக சரியான பதிலை நான் பெற்று விட்டால், தெரியாததை தெரிந்ததுபோல் செய்ததாகிவிடுமல்லவா?” என்று கேட்டான். மாணவன் மற்றும் ஆசிரியரின் கண்ணோட்டமும், அணுகுமுறையும் வித்தியாசமாக இருக்கிறது.
புதிய ஏற்பாட்டின் துவக்க நாட்களில் கிறிஸ்துவை ஏற்றுகொண்ட யூதருக்கும், புறஜாதியாருக்கும் கிழக்கிற்கும் மேற்குக்கும் இடையே இருந்த வித்தியாசம் போல அவர்களது கண்ணோட்டமும் இருந்தது. கொஞ்சகாலத்தில் அவர்களுக்குள் பிரச்சனைகள் முளைத்தது, வழிபாட்டு நாட்கள் போன்ற விஷயத்தில் தொடங்கி எதை சாப்பிடவும், குடிக்கவும் வேண்டும் என்ற காரியத்தில் வந்து நின்றது. அதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் மற்றவருடைய இருதயத்தின் மெய்யான நிலையை அறிந்துகொள்ள ஒருவராலும் முடியாததால் அதை நியாயம் தீர்க்கவும் ஒருவருக்கும் அதிகாரம் கிடையாது என்ற முக்கியமான சத்தியத்தை மனதில் வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
சக விசுவாசிகளுடன் இணக்கமாக இருக்கும் பொருட்டு தேவன் நமது மெய்யான நிலையை நமக்கு காண்பிக்கிறார். நாம் அனைவரும் அவரது ஆளுகைக்கு உட்பட்டு அவர் ஒருவருக்கு மாத்திரமே பதில் சொல்லும் பொறுப்பில் இருக்கின்றோம். ஆகவே அவரது வார்த்தையின்படியும், நமது மனசாட்சியின்படியும் நடக்குமாறு வலியுறுத்துகிறார். எனினும் அவர் ஒருவருக்குத் தான் நமது இருதயத்தின் நினைவுகளை நியாயம்தீர்க்கும் அதிகாரம், வேறொருவருக்குமல்ல (ரோம. 14:4-7).
நீ அல்ல
தாவீது ஆலயத்திற்கான திட்டங்கள் அனைத்தையும் வகுத்து முடித்தான். அதற்கு தேவையான மரச்சாமான்களையும், அலங்கார பொருட்களையெல்லாம் கூட வடிவமைத்து, அவைகள் எல்லாவற்றையும் சேகரித்து, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தான் (1 நாளா. 28:11-19). ஆனாலும் முதலில் கட்டப்பட்ட ஆலயம் சாலொமோனின் ஆலயம் என்றே அழைக்கப்பட்டது. தாவீதின் ஆலயமாக அழைக்கப்படவில்லை.
ஏனெனில் தேவன் ஏற்கனவே நீ எனக்கு ஆலயத்தைக் கட்ட மாட்டாய் (1 நாளா. 17:4) என்று சொல்லியிருந்தார். தேவன் தாவீதின் குமாரனாகிய சாலொமோனை அதற்காக தேர்வு செய்திருந்தார். தேவனின் மறுப்புக்கு தாவீதின் மாறுத்தரம் ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது. அவனால் செய்யமுடியாத காரியத்தை குறித்து எண்ணிக்கொண்டிருக்காமல், தேவனால் செய்ய நினைத்த காரியத்தில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான் (வச. 16-25). நன்றியுள்ள இருதயத்துடன் எப்போதும் காணப்பட்டான். அவனால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்து, ஆலயத்தைக் கட்டப்போகும் சாலொமோனுக்கு உதவியாக இருக்கும்படியாக சரியான நபர்களைத் தேர்வு செய்து அணி திரட்டினான் (1 நாளா. 22).
இதைக் குறித்து வேதாகம வர்ணனையாளர் ஜே. ஜி. மெக்கான்வில் (J.G. McConville) “பல நேரங்களில், கிறிஸ்தவ ஊழியத்தில் நாம் ஆவலுடன் செய்ய விரும்பும் வேலைக்கு மிகவும் தகுதியானவராகவோ, பொருத்தமுள்ளவராகவோ இருக்கமாட்டோம், அதற்கான அழைப்பை கூடத் தேவனிடமிருந்து பெற்றிருக்கவும் மாட்டோம். ஆனால் அது தாவீதின் வேலையைப் போன்று ஆயத்தப்படுத்தும் பணியாக இருக்கலாம், முடிவில், அதன் வாயிலாக பிரம்மாண்டமான ஓர் காரியம் வெளிப்படலாம்” என எழுதியுள்ளார்.
தாவீது தேவனுடைய மகிமையைத் தேடினான், தனது மகிமையை நாடவில்லை. தேவனுடைய ஆலயத்தை கட்டும்படியாக தன்னால் முடிந்தவரையில் உண்மையுடன் வேலை செய்தான். வேலையை எளிதாக முடிக்க, அவனுக்குப் பின்னால் வருபவருக்கு ஓர் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்தான். அவனைப்போலவே, நாமும், தேவன் நமக்காக தேர்ந்தெடுத்து வைத்துள்ள காரியங்களை ஏற்றுக்கொண்டு, நன்றியுள்ள இருதயத்தோடு அவருக்கு ஊழியம் செய்யலாம்! நம்முடைய அன்பான தேவன் நிச்சயமாகவே “மிக பிரமாண்டமானதை” செய்து கொண்டிருக்கிறார்.
அவரது அற்புதமான முகம்
என் நான்கு வயது மகன் கேள்விகளால் நிறைந்து, எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான். அவனோடு பேசிக்கொண்டிருப்பது எனக்கும் மிகவும் பிடித்தமான காரியம். ஆனால் சில நேரங்களில் முகம் கொடுத்துப் பேசாமல் முதுகை காண்பித்துக் கொண்டே கேள்விகளை கேட்கும் பழக்கத்திற்குள் சென்றுவிட்டான். ஆகவே “நீ பேசுவதை என்னால் கேட்க முடியவில்லை. தயவுசெய்து பேசும்போது என்னைப் பார்த்து பேசு” என அடிக்கடி அவனுக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.
சில நேரங்களில், தேவனும் இதை தான் நம்மிடம் சொல்ல விரும்புகிறார் என நினைக்கிறேன். ஏனென்றால் அவரால் நாம் சொல்வதைக் கேட்க முடியாத காரணத்தினாலல்ல, நாம் அவரை “பார்க்காமலேயே” பேசிக்கொண்டிருப்பதினால்தான் அப்படி எண்ணத் தோன்றுகிறது. நாம் ஜெபிக்கிறோம், ஆனால் நமது கேள்விகளுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு, நமது கவனத்தை அவர் மீது வைக்காமல் நம்மீதே வைக்கிறோம். அவரது குணாதிசயத்தை மறந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். என்னுடைய மகனைப்போல, நிறைய கேள்விகளை கேட்டுவிட்டு, யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்த நிலையில்தான் ஜெபிக்கிறோம்.
தேவன் யார் என்றும், அவர் நமக்காக என்னவெல்லாம் செய்திருக்கின்றார் என்பதையும் நாம் நினைவில் கொண்டாலே நமது பல கவலைகள் ஒன்றுமில்லாமல் போவதை பார்க்கலாம். தேவன் மீது நமது எண்ணங்களை திசைதிருப்பினால், அவரது குணாதிசயத்தினால் ஆறுதலைடைவோம். ஏனெனில் அவர் அன்பானவர், மன்னிப்பவர், ஆளுகைசெய்பவர், கிருபை நிறைந்தவர்.
தேவனுடைய முகத்தை நாம் எப்போதும் தேட வேண்டும் என்றே சங்கீதக்காரன் சொல்கிறான் (சங் 105:4). தேவனை ஆராதிக்கவும், ஜெபங்களை ஏறெடுக்கவும் தலைவர்களை தாவீது நியமித்தான். மக்கள் தேவனின் குணாதிசயத்தை போற்றிப் பாட வேண்டும் என்றும், தேவன் உண்மையுள்ளவர் என்பதை விவரிக்கும் விதத்தில் தேவனைப் பற்றிய கதைகளைக் கூறுமாறும் உற்சாகப்படுத்தினான் ( 1 நாளா. 16:8-27).
நம் கண்களை தேவனுடைய அழகான முகத்திற்கு நேராக நாம் திருப்பினால், பதிலளிக்கப்படாத கேள்விகளின் மத்தியிலும், பெலத்தினையும் ஆறுதலையும் பெற்றுக்கொள்ளலாம்.
பாதுகாப்பான அரவணைப்பில்
பிறந்து நான்கே நாளான தனதருமை மகளை ஏந்திக்கொள்ளும் பாக்கியத்தை என்னை நம்பி என் தோழி என்னிடம் தந்தாள். குழந்தையை நான் கையில் ஏந்திக்கொண்ட சிறிது நேரத்திலேயே அவள் அழத்தொடங்கினாள். அவளை நெருக்கமாக அணைத்து, அவளது தலையில் என் கன்னத்தை வைத்து அழுத்தி, லேசாக அசைத்து, மெல்லிய பாடலை பாடி அவளை அமைதிப்படுத்த முயன்றேன். அக்கறையுடன் நான் செய்த எந்த முயற்சியும் எடுபடவில்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக பெற்றோராக இருந்த எனது அனுபவம் கைகொடுக்கவில்லை. அவளை என்னால் சமாதானப்படுத்த முடியாமல் போகவே, ஆவலுடன் காத்திருந்த அவளது தாயாரின் கரத்திற்குள் அவளை வைத்தேன். அந்த நிமிடமே அமைதியானாள். அவளது அழுகுரல் ஓய்ந்தது, புதிதாய் பிறந்த அவளது பிஞ்சு உடலும் கலக்கம் மறந்து, பாதுகாப்பான இடத்திற்குள் வந்ததினால் தளர்ந்து நிம்மதியடைந்தது. தனது மகளை எப்படி சரியாக பிடித்து, தட்டிக்கொடுத்து தேற்றுவது என்று எனது தோழிக்கு நன்றாக தெரிந்திருந்தது.
மென்மையாக, நம்பகத்தன்மையுடனும், அக்கறையுடனும் ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தையை தேற்றுவாளோ, அதைப்போல்தான் தமது பிள்ளைகளை ஆறுதல்படுத்த தேவனும் தமது உதவிக்கரத்தை நீட்டுகிறார். சோர்ந்து போய் வருத்தத்துடன் இருக்கும்போது, அவர் நம்மை தமது கைகளில் அன்புடன் ஏந்திக்கொள்கிறார். நம் பிதாவும் சிருஷ்டிகருமான அவர் நம்மை முற்றிலும் அறிந்திருக்கிறார். ஆதலால், அவரை “உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் (அவரையே) நம்பியிருக்கிறபடியால், (அவர்) அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார்” (ஏசா. 26:3).
இந்த உலகத்தின் பிரச்சனைகள் நமது இருதயத்தை போட்டு அழுத்தும்பொழுது, ஒரு அன்பான தகப்பனாக இருக்கும் அவர், தம் பிள்ளைகளான நம்மைக் காத்து, நமக்காக யுத்தம் செய்து நம்மை வழிநடத்துகிறார் என்பதை அறிந்து, அவருக்குள் ஆறுதலடைவோமாக.
நீங்கள் எதற்காக அறியப்பட்டவர்கள்?
சீனாவில் முற்காலத்தில் இருந்த ஜப்பானிய சிறைமுகாம் ஒன்றில், 1945ஆம் ஆண்டு மரித்த ஒருவரின் நினைவுக் கல் உள்ளது. “1902 ஆம் ஆண்டு தியான்ஜினில், ஸ்காட்டிஷ் பெற்றோருக்கு மகனாக எரிக் லிட்டல் (Eric Liddell) பிறந்தார். அவர் 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்று, புகழின் உச்சியை தொட்டார். அவர் சீனாவிற்கு திரும்பி, தியான்ஜினில் ஒரு ஆசிரியராக வேலை செய்தார். மனிதகுலத்தின் நலனுக்காக சிறந்த பங்களிப்பை செய்யுமாறு இளைஞர்களை ஊக்குவிப்பதிலேயே அவரது முழு வாழ்வையும் கழித்தார்” என்று அந்நினைவுகல்லில் எழுதப்பட்டிருந்தது.
எரிக் விளையாட்டுத் துறையில் செய்த சாதனையைத் தான் பலரும் பெரிதாக எண்ணுகிறார்கள். ஆயினும் அவர் பிறந்த நாட்டில், அவர் நேசித்த சீனாவில், தியான்ஜினின் இளைஞர்கள் மத்தியில் அவர் ஆற்றிய தொண்டையும், பங்களிப்பையும் கூட பலர் நினைவுகூருகின்றனர். விசுவாசத்தினால் அவர் வாழ்ந்தும், சேவை செய்தும் வந்தார்.
நாம் எதற்காக நினைவுகூரப்படுவோம்? நம்முடைய கல்வி சாதனைகளும், வேலையின் நிலையும், பொருளாதார வெற்றியும் பிறருடைய அங்கீகாரத்தை நமக்கு பெற்றுத் தரலாம். ஆனால் பலரது வாழ்வில் நாம் செய்த அமைதியான சில காரியங்கள்தான் நாம் சென்ற பிறகும் நம்மை பற்றி எடுத்துரைத்து வாழ்ந்து கொண்டிருக்கும். விசுவாசத்தின் அதிகாரம் என்று சொல்லப்படும் எபிரெயர் 11ல் மோசேயைக் குறித்து எழுதப்பட்டிருப்பதை நாம் காணலாம். எகிப்தியரின் பொக்கிஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களுடன் இணைந்து செயல்பட விரும்பி, அவர்களுடன் தம்மை இணைத்துக்கொண்டார் (வச. 26). விசுவாசத்தினால் தேவனுடைய மக்களுக்காக ஊழியம் செய்து அவர்களை வழிநடத்தினார்.