என் நான்கு வயது மகன் கேள்விகளால் நிறைந்து, எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான். அவனோடு பேசிக்கொண்டிருப்பது எனக்கும் மிகவும் பிடித்தமான காரியம். ஆனால் சில நேரங்களில் முகம் கொடுத்துப் பேசாமல் முதுகை காண்பித்துக் கொண்டே கேள்விகளை கேட்கும் பழக்கத்திற்குள் சென்றுவிட்டான். ஆகவே “நீ பேசுவதை என்னால் கேட்க முடியவில்லை. தயவுசெய்து பேசும்போது என்னைப் பார்த்து பேசு” என அடிக்கடி அவனுக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.

சில நேரங்களில், தேவனும் இதை தான் நம்மிடம் சொல்ல விரும்புகிறார் என நினைக்கிறேன். ஏனென்றால் அவரால் நாம் சொல்வதைக் கேட்க முடியாத காரணத்தினாலல்ல, நாம் அவரை “பார்க்காமலேயே” பேசிக்கொண்டிருப்பதினால்தான் அப்படி எண்ணத் தோன்றுகிறது. நாம் ஜெபிக்கிறோம், ஆனால் நமது கேள்விகளுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு, நமது கவனத்தை அவர் மீது வைக்காமல் நம்மீதே வைக்கிறோம். அவரது குணாதிசயத்தை மறந்து ஜெபித்துக்  கொண்டிருக்கிறோம். என்னுடைய மகனைப்போல, நிறைய கேள்விகளை கேட்டுவிட்டு, யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்த நிலையில்தான் ஜெபிக்கிறோம்.

தேவன் யார் என்றும், அவர் நமக்காக என்னவெல்லாம் செய்திருக்கின்றார் என்பதையும் நாம் நினைவில் கொண்டாலே நமது பல கவலைகள் ஒன்றுமில்லாமல் போவதை பார்க்கலாம். தேவன் மீது நமது எண்ணங்களை திசைதிருப்பினால், அவரது குணாதிசயத்தினால் ஆறுதலைடைவோம். ஏனெனில் அவர் அன்பானவர், மன்னிப்பவர், ஆளுகைசெய்பவர், கிருபை நிறைந்தவர்.

தேவனுடைய முகத்தை நாம் எப்போதும் தேட வேண்டும் என்றே சங்கீதக்காரன் சொல்கிறான் (சங் 105:4). தேவனை ஆராதிக்கவும், ஜெபங்களை ஏறெடுக்கவும் தலைவர்களை தாவீது நியமித்தான். மக்கள் தேவனின் குணாதிசயத்தை போற்றிப் பாட வேண்டும் என்றும், தேவன் உண்மையுள்ளவர் என்பதை விவரிக்கும் விதத்தில் தேவனைப் பற்றிய கதைகளைக் கூறுமாறும் உற்சாகப்படுத்தினான் ( 1 நாளா. 16:8-27).

நம் கண்களை தேவனுடைய அழகான முகத்திற்கு நேராக நாம் திருப்பினால், பதிலளிக்கப்படாத கேள்விகளின் மத்தியிலும், பெலத்தினையும் ஆறுதலையும் பெற்றுக்கொள்ளலாம்.