தாவீது ஆலயத்திற்கான திட்டங்கள் அனைத்தையும் வகுத்து முடித்தான். அதற்கு தேவையான மரச்சாமான்களையும், அலங்கார பொருட்களையெல்லாம் கூட வடிவமைத்து, அவைகள் எல்லாவற்றையும் சேகரித்து, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தான் (1 நாளா. 28:11-19). ஆனாலும் முதலில் கட்டப்பட்ட ஆலயம் சாலொமோனின் ஆலயம் என்றே அழைக்கப்பட்டது. தாவீதின் ஆலயமாக அழைக்கப்படவில்லை.

ஏனெனில் தேவன் ஏற்கனவே நீ எனக்கு ஆலயத்தைக் கட்ட மாட்டாய் (1 நாளா. 17:4) என்று சொல்லியிருந்தார். தேவன் தாவீதின் குமாரனாகிய சாலொமோனை அதற்காக தேர்வு செய்திருந்தார். தேவனின் மறுப்புக்கு தாவீதின் மாறுத்தரம் ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது. அவனால் செய்யமுடியாத காரியத்தை குறித்து எண்ணிக்கொண்டிருக்காமல், தேவனால் செய்ய நினைத்த காரியத்தில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான் (வச. 16-25). நன்றியுள்ள இருதயத்துடன் எப்போதும் காணப்பட்டான். அவனால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்து, ஆலயத்தைக் கட்டப்போகும் சாலொமோனுக்கு உதவியாக இருக்கும்படியாக சரியான நபர்களைத் தேர்வு செய்து அணி திரட்டினான் (1 நாளா. 22).

இதைக் குறித்து வேதாகம வர்ணனையாளர் ஜே. ஜி. மெக்கான்வில் (J.G. McConville) “பல நேரங்களில், கிறிஸ்தவ ஊழியத்தில் நாம் ஆவலுடன் செய்ய விரும்பும் வேலைக்கு மிகவும் தகுதியானவராகவோ, பொருத்தமுள்ளவராகவோ இருக்கமாட்டோம், அதற்கான அழைப்பை கூடத் தேவனிடமிருந்து பெற்றிருக்கவும் மாட்டோம். ஆனால் அது தாவீதின் வேலையைப் போன்று ஆயத்தப்படுத்தும் பணியாக இருக்கலாம், முடிவில், அதன் வாயிலாக பிரம்மாண்டமான ஓர் காரியம் வெளிப்படலாம்” என எழுதியுள்ளார்.

தாவீது தேவனுடைய மகிமையைத் தேடினான், தனது மகிமையை நாடவில்லை. தேவனுடைய ஆலயத்தை கட்டும்படியாக தன்னால் முடிந்தவரையில் உண்மையுடன் வேலை செய்தான். வேலையை எளிதாக முடிக்க, அவனுக்குப் பின்னால் வருபவருக்கு ஓர் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்தான். அவனைப்போலவே, நாமும், தேவன் நமக்காக தேர்ந்தெடுத்து வைத்துள்ள காரியங்களை ஏற்றுக்கொண்டு, நன்றியுள்ள இருதயத்தோடு அவருக்கு ஊழியம் செய்யலாம்! நம்முடைய அன்பான தேவன் நிச்சயமாகவே “மிக பிரமாண்டமானதை” செய்து கொண்டிருக்கிறார்.