தென்கிழக்கு ஆசியாவில் இருந்த மாணவர்கள் வட அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு ஆசிரியரைச் சந்தித்த பொழுது, அந்த ஆசிரியர் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டார். சரியான விடையைத் தேர்வு செய்யும் தேர்வை அவரது மாணவர்களுக்கு நடத்தின பொழுது, அநேக கேள்விகளுக்கு எந்த பதிலையும் தேர்வு செய்யாததைக் கண்டு ஆச்சரியமுற்றார். திருத்திய தாள்களை தரும்பொழுது, அடுத்த முறை தேர்வு எழுதும் பொழுது, பதிலை எழுதாமல் இருப்பதை விட எதோ ஒரு பதிலை யூகித்து தேர்வு செய்யுமாறு அவர்களுக்கு அறிவுரை சொன்னார். ஒரு மாணவன் ஆச்சரியத்துடன் கையை உயர்த்தி, “தற்செயலாக சரியான பதிலை நான் பெற்று விட்டால், தெரியாததை தெரிந்ததுபோல் செய்ததாகிவிடுமல்லவா?” என்று கேட்டான். மாணவன் மற்றும் ஆசிரியரின் கண்ணோட்டமும், அணுகுமுறையும் வித்தியாசமாக இருக்கிறது.

புதிய ஏற்பாட்டின் துவக்க நாட்களில் கிறிஸ்துவை ஏற்றுகொண்ட யூதருக்கும், புறஜாதியாருக்கும் கிழக்கிற்கும் மேற்குக்கும் இடையே இருந்த வித்தியாசம் போல அவர்களது கண்ணோட்டமும் இருந்தது. கொஞ்சகாலத்தில் அவர்களுக்குள் பிரச்சனைகள் முளைத்தது, வழிபாட்டு நாட்கள் போன்ற விஷயத்தில் தொடங்கி எதை சாப்பிடவும், குடிக்கவும் வேண்டும் என்ற காரியத்தில் வந்து நின்றது. அதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் மற்றவருடைய இருதயத்தின் மெய்யான நிலையை அறிந்துகொள்ள ஒருவராலும் முடியாததால் அதை நியாயம் தீர்க்கவும் ஒருவருக்கும் அதிகாரம் கிடையாது என்ற முக்கியமான சத்தியத்தை மனதில் வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

சக விசுவாசிகளுடன் இணக்கமாக இருக்கும் பொருட்டு தேவன் நமது மெய்யான நிலையை நமக்கு காண்பிக்கிறார். நாம் அனைவரும் அவரது ஆளுகைக்கு உட்பட்டு அவர் ஒருவருக்கு மாத்திரமே பதில் சொல்லும் பொறுப்பில் இருக்கின்றோம். ஆகவே அவரது வார்த்தையின்படியும், நமது மனசாட்சியின்படியும் நடக்குமாறு வலியுறுத்துகிறார். எனினும் அவர் ஒருவருக்குத் தான் நமது இருதயத்தின் நினைவுகளை நியாயம்தீர்க்கும் அதிகாரம், வேறொருவருக்குமல்ல (ரோம. 14:4-7).