இயேசுவின் மீது சாய்ந்து
இரவு நேரங்களில் சில சமயம் தலையணையில் தலை சாய்த்து ஜெபிக்கும் பொழுது, நான் இயேசுவின் மீது சாய்ந்து கொள்வது போல கற்பனை செய்து கொள்வேன். அப்படி எண்ணும் பொழுதெல்லாம் அப்போஸ்தலனாகிய யோவானைக் குறித்து வேதாகமம் குறிப்பிடுவது என் நினைவிற்கு வரும். கடைசி இராப்போஜனத்தில் இயேசுவோடு கூட தான் அமர்ந்திருந்த விதத்தைக் குறித்து யோவான் தாமே இவ்வாறு கூறுகிறார்: “அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான் (யோவா. 13:23).
தன் பெயரைக் கூறாமல், “இயேசுவுக்கு அன்பாயிருந்த ஒருவன்” என்று தன்னைக் குறித்து விவரித்தான். அதுமட்டுமன்று முதல் நூற்றாண்டு காலத்தில் இஸ்ரவேலில் அனுசரிக்கப்பட்ட பந்தி முறையையும் விவரிக்கிறான். அக்காலக்கட்டத்தில் நம் முழங்கால் உயரத்தில் தான் மேஜைகள் இருக்கும். ஆகவே மேஜையைச் சுற்றி பாய்களிலோ அல்லது மெத்தைகளிலோ சாய்ந்த வண்ணம் அமர்ந்திருப்பார்கள். யோவான் இயேசுவுக்கு மிக அருகில் உட்கார்ந்திருந்தபடியால், அவரை நோக்கி ஒரு கேள்வி எழுப்பும் பொழுது தன் தலையை “இயேசுவினுடைய மார்பிலே சாய்த்து கொண்டிருந்தான்” (யோவா. 13:25).
அன்று இயேசுவுடனான யோவானுடைய நெருக்கமான அத்தருணம், இன்று நம்முடைய வாழ்க்கைக்கு தேவையானதொன்றை காட்சிப்படுத்தி காட்டுகின்றது. இன்று இயேசுவை சரீரப் பிரகாரமாக நாம் தொட இயலாமல் போகலாம். ஆனால் நம்முடைய பாரமான சூழ்நிலைகளை அவரிடம் ஒப்படைத்து விடலாம். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்,” என இயேசு கூறுகிறார் (மத். 11:28). நம் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் நம்முடைய நம்பிக்கைக்கு பாத்திரரான இரட்சகர் நமக்கு உண்டு என்பது எவ்வளவு பெரிய கிருபை! இன்று நீங்கள் அவர் மீது “சாய்ந்து” கொண்டிருக்கிறீர்களா?
வழக்கறிஞர்
1962ஆம் ஆண்டு ஜூன் மாதம், புளோரிடா மாநில சிறைச்சாலையில் இருந்த கிளாரன்ஸ் ஏர்ல் கிடியன் (Calarence Earl Gideon) என்பவர் தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பதாகவும் தனக்காக வாதாட வழக்கறிஞர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு தன்னிடம் வசதி இல்லை என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்று எழுதியனுப்பினார்.
ஓர் ஆண்டு கழித்து, வரலாற்று புகழ்பெற்ற இந்த கிடியன் மற்றும் வெயின்ரைட் (Gidoeon Vs. Wainright) வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது தனக்கென வழக்கறிஞர் வைத்துகொள்ளும் அளவிற்கு வசதி இல்லாதவர்களுக்கு, அவர்களுக்காக வாதாட அரசாங்கமே பொது வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரின் உதவியோடு, கிளாரன்ஸ் கிடியோன் மீண்டும் விசாரிக்கப் பட்டு விடுதலையானார்.
ஆனால், நாம் குற்றவாளிகளாய் இருப்பின், நம் நிலை என்ன? அப்போஸ்தலனாகிய பவுலைப் பொறுத்தவரையில் நாம் அனைவருமே குற்றவாளிகள்தான். ஆனால் பரலோக நீதிமன்றம் தேவனுடைய செலவில் நம்முடைய ஆத்துமாவைப் பாதுகாத்து காக்கும்படியாய், நமக்காக பரிந்து பேசும்படியாய் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளது (1 யோவா. 2:2). சிறைச்சாலைகளுக்கு வெளியேயும் கூட தாங்கள் அனுபவித்திராத சுதந்திரத்தை பிதாவின் சார்பில் இயேசு கிறிஸ்து நமக்காக வழங்குகிறார். அது நம்முடைய இருதயத்திலும், மனதிலும் நாம் அடையும் சுதந்திரமே.
நாம் செய்த குற்றங்களுக்காகவோ அல்லது பிறர் நமக்கெதிராய் செய்த குற்றங்களினாலோ நாம் பாடுகள் பல அனுபவித்தாலும், நமக்காக பரிந்து பேச இயேசு உண்டு. தனக்கு கொடுக்கப்பட்ட மேலான அதிகாரத்தினாலே அவர் நம்முடைய ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும், இரக்கத்தையும், மன்னிப்பையும், ஆறுதலையும் அளிக்கிறார்.
நமக்காகப் பரிந்து பேசுகிற நம்முடைய வழக்கறிஞராகிய இயேசு நாம் நம்பிக்கையின்மை என்னும் சிறையில் இருந்தாலும், பயம் என்னும் சிறையில் இருந்தாலும் அல்லது வருத்தங்கள் என்னும் சிறையில் இருந்தாலும் அச்சிறைகளை தம்முடைய பிரசன்னத்தினால் நிறைத்து ஆசீர்வாதமாக மாற்றிடுவார்.
நன்மை, தீமை மற்றும் அருவருப்பு!
என்னுடைய நெருங்கிய தோழி, “நம்முடைய நன்மை, தீமை மற்றும் அருவருப்பான காரியங்கள் அனைத்தையும் நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்!” என ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். அநேக வருடங்கள் நண்பர்களாக இருக்கும் நாங்கள், எங்களுடைய சந்தோஷங்களையும், ஏமாற்றங்களையும் பகிர்ந்து கொள்ள கற்றுக்கொண்டோம். நாங்கள் பூரணமற்றவர்கள் என அறிந்திருந்தபடியால் எங்களுடைய போராட்டங்களை பகிர்ந்து கொண்டோம். கூடவே எங்களுடைய வெற்றிகளை எண்ணி களிகூர்ந்து மகிழ்ந்தோம்.
தாவீது கோலியாத்தை வெற்றிசிறந்த நாள் முதற்கொண்டு தாவீதுக்கும், யோனத்தானுக்கும் இடையே வலுவான நட்பு உண்டாயிற்று (1 சாமு. 18:1-4). தாவீதின் மீது யோனதானுடைய தகப்பன் பொறாமை கொண்ட அந்த மோசமான நாட்களில் தங்களுடைய பயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள் (18:6-11,20:1-2). இறுதியாக சவுல் தாவீதைக் கொல்ல திட்டம் தீட்டிய அந்த மகா மோசமான நாட்களில் அவர்கள் ஒன்றாக துன்புற்றார்கள் (20:42).
நம்முடைய சூழ்நிலைகள் மாறும் பொழுதும், உண்மையான நண்பர்கள் ஒருபொழுதும் நம்மைக் கைவிடமாட்டார்கள். நன்மையான காலத்தில் மட்டுமல்லாது மோசமான நாட்களிலும் நம்முடனே கூட இருப்பார்கள். மிக மோசமான காலக்கட்டத்தில் நாம் தேவனை விட்டுப்பின்வாங்கிச் செல்லும் படியாய் சோதிக்கப்பட்டால் அவர்கள் தேவனை நோக்கி நம்மைத் திருப்புவார்கள்.
உண்மையான நட்பு தேவனிடமிருந்து நமக்கு கிடைத்த ஈவு, ஏனெனில் அது முற்றிலும் பூரண நண்பனாகிய தேவனையே எடுத்துரைக்கிறது. ஏனெனில் அவர் ஒருவரே நன்மையான நாட்களிலும், மோசமான நாட்களிலும் மற்றும் மிகவும் மோசமான நாட்களிலும் மாறாதவராய் என்றும் நமது நண்பராய் இருக்கிறார். “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக்கைவிடுவதுமில்லை” (எபி. 13:5) என நமக்கு நினைவூட்டுகிறார்.
இது சந்தோஷத்தை தூண்டுகிறதா?
ஒரு இளம் ஜப்பானியப் பெண் தேவையில்லாத பொருட்களை அகற்றி ஒழுங்குபடுத்துவதைக் குறித்து எழுதிய புத்தகம் உலகமெங்கும் 20 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் மேரி கோன்டோவின் (Marie Kondo) மையக்கருத்து என்னவெனில், தங்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கும் பொருட்களை தங்கள் அலமாரிகளிலிருந்தும், வீடுகளிலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என்பதே. “ஒவ்வொரு பொருளையும் எடுத்து, ‘இது எனக்கு சந்தோஷத்தை உண்டாக்குகிறதா?’ என உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்கள். பதில் ஆமாம் என்றால் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அதை யாருக்கேனும் கொடுத்து விடுங்கள்.
பிலிப்பு பட்டணத்து கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவுடனான தங்களுடைய உறவிலே சந்தோஷத்தை நாடித் தேடும்படியாய் அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களை உற்சாகப்படுத்தினார். “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்,” (பிலி. 4:4) என்று கூறுகிறார். கவலைகளினால் நிறைந்த வாழ்க்கை வாழாமல், தேவ சமாதானம் நம்முடைய மனதையும், இருதயத்தையும் காக்க, எல்லாவற்றையும் குறித்து ஜெபம் பண்ணும்படி உற்சாகப்படுத்தினார் (வச. 6-7).
நம்முடைய அன்றாட வாழ்வின் வேலைகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தும் மகிழ்ச்சி கரமானதாக இருப்பதில்லை. அப்படியிருக்க ‘இது தேவனுடைய இருதயத்திலும் நம்முடைய இருதயத்திலும் எப்படி சந்தோஷத்தை உண்டாக்க முடியும்?’ என நாம் கேட்கலாம். எதற்காக நாம் ஒரு வேலையை செய்கிறோம் என்கிற சரியான வெளிப்பாடு, அதைக்குறித்ததான ஒரு மனமாற்றத்தை நம்மில் உண்டாக்கும்.
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள் (பிலி. 4:8).
பவுலுடைய இறுதி வார்த்தைகள் நம்முடைய சிந்தனைக்கு உணவாகவும், சந்தோஷத்திற்கு வழிமுறையாகவும் உள்ளது.