இரவு நேரங்களில் சில சமயம் தலையணையில் தலை சாய்த்து ஜெபிக்கும் பொழுது, நான் இயேசுவின் மீது சாய்ந்து கொள்வது போல கற்பனை செய்து கொள்வேன். அப்படி எண்ணும் பொழுதெல்லாம் அப்போஸ்தலனாகிய யோவானைக் குறித்து வேதாகமம் குறிப்பிடுவது என் நினைவிற்கு வரும். கடைசி இராப்போஜனத்தில் இயேசுவோடு கூட தான் அமர்ந்திருந்த விதத்தைக் குறித்து யோவான் தாமே இவ்வாறு கூறுகிறார்: “அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான் (யோவா. 13:23).

தன் பெயரைக் கூறாமல், “இயேசுவுக்கு அன்பாயிருந்த ஒருவன்” என்று தன்னைக் குறித்து விவரித்தான். அதுமட்டுமன்று முதல் நூற்றாண்டு காலத்தில் இஸ்ரவேலில் அனுசரிக்கப்பட்ட பந்தி முறையையும் விவரிக்கிறான். அக்காலக்கட்டத்தில் நம் முழங்கால் உயரத்தில் தான் மேஜைகள் இருக்கும். ஆகவே மேஜையைச் சுற்றி பாய்களிலோ அல்லது மெத்தைகளிலோ சாய்ந்த வண்ணம் அமர்ந்திருப்பார்கள். யோவான் இயேசுவுக்கு மிக அருகில் உட்கார்ந்திருந்தபடியால், அவரை நோக்கி ஒரு கேள்வி எழுப்பும் பொழுது தன் தலையை “இயேசுவினுடைய மார்பிலே சாய்த்து கொண்டிருந்தான்” (யோவா. 13:25).

அன்று இயேசுவுடனான யோவானுடைய நெருக்கமான அத்தருணம், இன்று நம்முடைய வாழ்க்கைக்கு தேவையானதொன்றை காட்சிப்படுத்தி காட்டுகின்றது. இன்று இயேசுவை சரீரப் பிரகாரமாக நாம் தொட இயலாமல் போகலாம். ஆனால் நம்முடைய பாரமான சூழ்நிலைகளை அவரிடம் ஒப்படைத்து விடலாம். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்,” என இயேசு கூறுகிறார் (மத். 11:28). நம் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் நம்முடைய நம்பிக்கைக்கு பாத்திரரான இரட்சகர் நமக்கு உண்டு என்பது எவ்வளவு பெரிய கிருபை! இன்று நீங்கள் அவர் மீது “சாய்ந்து” கொண்டிருக்கிறீர்களா?