எங்களுடைய மகன் மற்றும் மருமகளுக்கு திடீரென ஒரு நெருக்கடியான நிலை ஏற்பட்டது. எங்கள் பேரன் கேமரன் (Cameron) நிமோனியா மற்றும் மூச்சுக் குழாய் வியாதியினால் அவதிப் பட்டுக்கொண்டிருந்ததால், அவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியிருந்தது. ஆகவே, அவர்களது மற்றொரு மகனாகிய ஐந்து வயது நாதனை (Nathan) பள்ளியிலிருந்து அழைத்து வரும்படி  கேட்டனர். மார்லீனுக்கும், எனக்கும் அவனை அழைத்து வருவதில் மிக்க மகிழ்ச்சி.

எங்களுடைய காரில் நாதன் ஏறியவுடன், மார்லீன் அவனைப் பார்த்து, “இன்று நாங்கள் உன்னை அழைத்துச் செல்ல வந்தது உனக்கு ஆச்சரியமளிக்கிறதா?” என்று கேட்டதற்கு, “இல்லை!” என பதில் கூறினான். ஏன் அவனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனக் கேட்டதற்கு, “ஏனென்றால் எனக்கு எல்லாம் தெரியும்!” எனக் கூறினான்.

ஒரு ஐந்து வயது சிறுவன் தனக்கு எல்லாம் தெரியும் எனக் கூறலாம். ஆனால் சற்று வயதான நமக்கு அப்படிக் கூறுவது முடியாத காரியம் எனத் தெரியும். சொல்லப்போனால் அநேக சமயங்களில் பதில்களைக் காட்டிலும் கேள்விகளே நமக்குள் அதிகம் எழும்புகிறது. எல்லாவற்றையும் குறித்து நாம் அறியாததால் எதற்கு, எப்படி, எப்பொழுது என்று வாழ்க்கையைக் குறித்து எண்ணிக்கொண்டிருக்கும் நாம் அநேகந்தரம் எல்லாம் அறிந்த தேவனை மறந்து விடுகிறோம்.

எல்லாவற்றையும் அறிந்த தேவன் நம்மை முற்றிலும் அறிந்தவராய் நம்முடைய உள்ளந்திரியங்களையும் அறிந்தவராய் இருக்கிறார் என்று சங்கீதம் 139:1, 3 கூறுகிறது. “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்,” என தாவீது கூறுகிறான். தேவன் நம்மை பரிபூரணமாய் நேசிக்கிறார். இன்று நாம் எதிர்கொள்ளும் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நம்முடைய சூழ்நிலைகளில் நமக்கு ஏற்ற உதவியை செய்திடுவார் என்கிற அறிவு நமக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது.

நம்முடைய அறிவு எப்பொழுதும் ஒரு எல்லைக்குட்பட்டது. ஆனால் கர்த்தரை அறிவதே பிரதானமானது. அவரின் மீது நம்முடைய விசுவாசத்தை வைக்கலாம்.